"மும்மொழி கொள்கையை ஏற்றால் வடநாட்டில் இருந்து இந்தி ஆசிரியர்கள் வருவார்கள்” கார்த்தி சிதம்பரம் எம்பி
செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தபட்டி பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்...
வடநாட்டவர் யாரும் திருக்குறளை பயின்றுவிட்டு இங்கு வரவில்லை:
நம்முடைய மாணவர்களுக்கு தமிழும் ஆங்கிலம் போதும். நல்ல எதிர்காலம் உண்டு. நானும் எனது மகளும் அத்தகைய கல்வியைத்தான் பயின்றோம். மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்தினார்கள் என்றால் அது இந்தி திணிப்பாக தான் பார்க்க வேண்டும். வடநாட்டவர்கள் யாரும் ஆத்திச்சூடி, திருக்குறளை பயின்றுவிட்டு இங்கு வரவில்லை. இங்கு வேலைக்கு வரும்போது தமிழை கற்றுக் கொள்கிறார்கள். அவர்களை நாம் விரட்டியடிப்பதில்லை.
அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி கட்டாயமாக்குவதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது:
அதுபோல் தமிழர்களும் வட மாநிலங்களுக்கு செல்லும்போது அங்குள்ள மொழிகளை பழகிக் கொள்வார்கள். இந்தி மொழியை பயில வேண்டும் என்றால் சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலயா, தனியார் பள்ளிகள் மூலம் இந்தி கற்றுக் கொள்ளலாம். ஆனால், தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய பள்ளிகளில் மூன்றாவது மொழி கட்டாயமாக்குவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி மூன்றாவது மொழி என்றால் அது இந்தியை திணிக்கும் மனநிலையை காட்டுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆங்கிலமும் தமிழுமே போதும்:
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழகத்தில் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். ஆசிரியர் இல்லாததை காரணம் காட்டி உபி., பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து ஆசிரியர்களை அனுப்ப மத்திய பாஜக அரசு கூறும், தற்போது ரயில்வே, போஸ்டல் துறைகளில் வடநாட்டவர்கள் பணிபுரிவது போல தமிழ்நாடு பள்ளிகளிலும் வருவார்கள்.
கலாச்சாரம் மொழி அழியும் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆங்கிலமும் தமிழுமே போதும். இதை வைத்து நாம் நல்ல நிலைமையில் இருக்கிறோம்.
சமுதாயத்தின் விழிப்புணர்வு மற்றும் நமது வளர்ப்பு மூலம் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க முடியும். இந்த அரசு எடுக்கிறது என நம்புகிறேன்" என்று எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.