”கச்சத்தீவை விட்டுக் கொடுக்க முடியாது” - உறுதியாகக் கூறிய இலங்கை!
கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக கூறியிருப்பது இந்தியாவிற்கான பதிலாக பார்க்கப்படுகிறது.
கச்சத்தீவு விவகாரத்தில் எந்தச் செல்வாக்கிற்கும், அதிகாரத்திற்கும் அடிபணியப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக, கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என கூறியிருப்பது இந்தியாவிற்கான பதிலாக பார்க்கப்படுகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள 282 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு குட்டித்தீவான கச்சத்தீவு1974இல் இந்தியா வசம் இருந்து இருநாடுகளின் ஒப்பந்தத்தின்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை, தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் நலம் கருதி, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டுமென அதிமுக, திமுக போன்ற கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன. மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய், கச்சத்தீவு மீட்பு குறித்து பேசியிருந்தார். எனினும் மத்திய அரசு மட்டுமே இதில் முடிவுகள் எடுக்க முடியும் என்பதால், கச்சத்தீவு விவகாரம் நீண்ட காலமாகவே இழுபறியாக இருந்து வருகிறது.
விஜயின் பேச்சு இலங்கை மீனவர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில்தான், கச்சத்தீவிற்கு இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக பயணம் மேற்கொண்டார். அங்குள்ள சூழல் குறித்து கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், கச்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசித்தார். கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக பேசிய அநுரகுமார திசநாயக, கச்சத்தீவு இலங்கை மக்களின் சொத்து எனவும், ஒருபோதும் அதனை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கச்சத்தீவு விவகாரத்தில் எந்தவித அதிகாரத்திற்கும், செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் எனவும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அதேபோன்று, தமிழக மீனவர்கள் விவகாரத்திலும் கண்டிப்புடன் இலங்கை அரசு செயல்படும் எனவும் திசநாயக எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எப்படியும் அரசியல் கட்சியினர் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசுவார்கள் என்பதால், அவர்களுக்கான பதிலாக அநுரகுமார திசநாயகவின் இந்த பேச்சு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.