இமாச்சல பிரதேசம் | கொட்டித் தீர்க்கும் கனமழை... நிலச்சரிவில் சிக்கி தாய், மகள் உயிரிழப்பு!
summary
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்ப்பட்டுள்ளன. இந்நிலையில், மண்டி மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கித் தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள சுந்தர் நகரில் நேரிட்ட நிலச்சரிவில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. ஜங்கம் பாக் - பிபிஎம்பி காலனியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். மண் மூடிக் கிடந்த பகுதியில், இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மலைச்சரிவு காரணமாக சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழையை தொடர்ந்து பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண், பாறை குவியல்களால் சாலை இருந்த இடமே தெரியாமல் மறைந்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இன்னும் சில நாட்கள் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல, குலு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணாலியில், பியாஸ் நதியின் துணை நதியான மணால்சு நதியில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், குறுக்கே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தொடர்ந்து, வேனில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், வீடுகள் சேதமடைந்துள்ளன. இதற்கிடையே, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.