india again warns on pakistan flood updates
கவாஜா ஆசிஃப்x page and AFP

பாக். வெள்ளம்.. அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு.. இந்தியா மீண்டும் எச்சரிக்கை!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பின் வெள்ளம் குறித்த விநோதமான கருத்து சமூக ஊடகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பின் வெள்ளம் குறித்த விநோதமான கருத்து சமூக ஊடகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு

வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்தியா ஏற்கெனவே மூன்று முறை எச்சரித்திருந்தது. அதன்படி, கடந்த வாரம் இந்தியாவில் நிரம்பி வழிந்த ஆறுகள் மற்றும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பாகிஸ்தான் ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ், ரவி மற்றும் பஞ்சாபில் உள்ள பல ஆறுகளில் நீர்மட்டம் இயல்பைவிட அதிகமாக உள்ளது. இதனால், விவசாய நிலங்களும் அருகிலுள்ள கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கின.

குறிப்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் தகவல் துறை அமைச்சர் அஸ்மா பொகாரி தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தரவுகளின்படி, ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 31 வரை, வெள்ளத்தால் 854 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர். 1,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேநேரத்தில், பாகிஸ்தானில் அவசரகாலப் பணியாளர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்தி தேடல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, இதுவரை 9,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் 9,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் NDMA தெரிவித்துள்ளது.

இந்தத் தண்ணீரை நாம் ஓர் ஆசீர்வாதமாகப் பார்க்க வேண்டும். எனவே, அதைச் சேமித்து வைக்க வேண்டும்.
கவாஜா ஆசிஃப், பாகி. அமைச்சர்
india again warns on pakistan flood updates
கவாஜா ஆசிஃப்AFP

”வெள்ளநீரைச் சேமியுங்கள்” - அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெள்ளம் குறித்து விநோதமாகக் கூறிய கருத்து சமூக ஊடகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அவர், ”வெள்ளம் போன்ற சூழ்நிலைக்கு எதிராகப் போராடுபவர்கள் வெள்ள நீரை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் இந்தத் தண்ணீரை தங்கள் வீடுகளில், தொட்டிகளிலும், கொள்கலன்களிலும் சேமித்து வைக்க வேண்டும். இந்தத் தண்ணீரை நாம் ஓர் ஆசீர்வாதமாகப் பார்க்க வேண்டும். எனவே, அதைச் சேமித்து வைக்க வேண்டும். அணைகள் கட்டுவதற்கு, பொதுவாக 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும் என்பதால், தண்ணீரைச் சேமிக்க விரைவாக முடிக்கக்கூடிய சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளை பாகிஸ்தான் கட்ட வேண்டும்” என அவர் பரிந்துரைத்தார். முன்னதாக, இந்தியா தண்ணீரை விடுவிப்பதே பாகிஸ்தானில் வெள்ளத்திற்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

india again warns on pakistan flood updates
பாகிஸ்தான் வெள்ளம்: நீர்த்தொற்றுகளால் அபாயம்; முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இந்தியா மீண்டும் எச்சரிக்கை

இதற்கிடையே, வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும் சட்லஜ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக இந்தியா மீண்டும் இன்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வெளியுறவு அமைச்சகம் இதை தெரிவித்துள்ளது.

india again warns on pakistan flood updates
fake newsPTI

ட்ரம்ப் கூறியதாக வெளியான வீடியோ.. உண்மைச் சரிபார்ப்பு என்ன?

இந்த நெருக்கடிக்கு மத்தியில், ”காஷ்மீரில் இந்தியா அணைகளைத் திறந்ததே பாகிஸ்தானில் வெள்ளத்திற்குக் காரணம்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது. ஆனால், இது போலிச் செய்தி என இந்திய பிரஸ் டிரஸ்ட் (PTI) உண்மைச் சரிபார்ப்பு மையம் கண்டுபிடித்துள்ளது. மேலும், அந்த வீடியோ AIஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 30 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் வீடியோவை @Ltcolonelvikas என்ற X பயனர் பகிர்ந்துகொண்டார். 1 நிமிடம் 14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், காஷ்மீரில் இந்தியா அணைகளைத் திறந்ததே பாகிஸ்தானில் வெள்ளத்திற்குக் காரணம் என்று ட்ரம்ப் பேசுவதாக இருந்தது. அந்த முழு வீடியோவையும் ஆராய்ந்ததில் பாகிஸ்தானிலோ அல்லது இந்தியாவிலோ ஏற்பட்ட வெள்ளம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இறுதியில் சீனா வரிகள் மீதான வர்த்தக ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு ட்ரம்ப் பதிலளித்த வீடியோவை, எடிட் செய்து வெளியிட்டிருப்பது உண்மைச் சரிபார்ப்பு மூலம் தெரிய வந்தது.

2022இல் பாதிப்பு நிலவரம் என்ன?

முன்னதாக, பாகிஸ்தானில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் குறைந்தது 1,700 பேர் உயிரிழந்தனர். உலக வங்கியின் பேரிடருக்குப் பிந்தைய மதிப்பீட்டின்படி, 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் மற்றும் 30 பில்லியன் டாலர் (£26 பில்லியன்) பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுத்தாகவும் தெரிவித்திருந்தது. மேலும், அந்தப் பாதிப்பு பாகிஸ்தானின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய பேரழிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

india again warns on pakistan flood updates
பாகிஸ்தானில் மேக வெடிப்பினால் பெரும் வெள்ளம்... 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com