‘வசீகரம்.. டெரர்.. மர்மம்.. ட்ரேட்மார்க் சிரிப்பு..’ தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஜிந்தா!

9-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் வெற்றி விழா படத்தில் சலீம் கவுஸ் ஏற்று நடித்த ஜிந்தா பற்றி பார்க்கப்போகிறோம்.
ஜிந்தாவாக சலீம் கவுஸ்
ஜிந்தாவாக சலீம் கவுஸ்Youtube

தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன்கள் வந்து போயிருந்தாலும் ஒரு சிலரைத்தான், அதிலும் சில பாத்திரங்களை மட்டும்தான் நாம் இன்றும் பரவசத்துடன் நினைவு கூர்கிறோம். அதில் ஒன்று ‘ஜிந்தா’. யெஸ். கமல் நடித்திருந்த ‘வெற்றி விழா’ என்னும் திரைப்படத்தின் வசீகரமான வில்லன்.

ஒரு திரைப்படத்தில் ஹீரோவிற்கு நிகரான வல்லமையுடன் வில்லன் பாத்திரம் எழுதப்பட்டிருந்தால், அதன் சுவாரஸ்யத்திற்கும் வெற்றிக்கும் குறைந்தபட்ச உத்தரவாதம் கிடைத்து விடும். அப்படியொரு வில்லன் பாத்திரம்தான் ‘ஜிந்தா’.
சலீம் கவுஸ்
சலீம் கவுஸ்

இந்தப் பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தவர் சலீம் கவுஸ். சலீம் கவுஸ் சென்னையில் பிறந்தவர். பிரெசிடென்ஸி கல்லூரியில் படித்தவர். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். புனே திரைப்படக் கல்லூரியில் பட்டப்படிப்பு. ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ என்ற ஆங்கில நாடகக் குழுவின் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர். ஷேக்ஸ்பியர் நாடகத்தின் வசனங்களை துல்லியமான ஆங்கிலத்தில் உச்சரித்து நடிக்கக்கூடிய திறமை பெற்றவர். பிரதாப் போத்தனும் இதே நாடகக் குழுவில் இருந்தவர் என்பதால் சலீம் கவுஸை ஒரு தமிழ்த் திரைப்படத்தில் சரியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். வெற்றி விழாவின் மூலம் அது சாத்தியமாயிற்று.

‘யார் இந்த ஜிந்தா? – வலை வீசி தேடும் போலீஸ்

வெற்றி விழா’ திரைப்படத்தின் துவக்கத்தில் ஜிந்தா என்கிற சர்வதேச பயங்கவாதியைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக காண்பிக்கப்படும். ‘யாரிந்த ஜிந்தா?’ என்று காவல்துறை தலையைப் பிய்த்துக் கொள்ளும். அந்த ஆசாமி எப்படி இருப்பார், எங்கே இருப்பார் என்கிற தகவல் யாருக்குமே தெரியாது. கோஸ்ட் மாதிரி ஒரு மர்மமான வில்லனாக இருப்பார் ஜிந்தா. உண்மையில் இந்தப் பாத்திரம் பழைய எம்.ஜி.ஆர் படங்களில் நம்பியார், அசோகன் வருவதைப் போன்ற சாதாரணமானதுதான்.

சலீம் கவுஸ்
சலீம் கவுஸ்

ஆனால் தனது ஸ்டைலான நடிப்பால் அதை தனித்துவமாக்கியது சலீமின் திறமை. ஜிந்தாவை வெளியில் வரவழைப்பதற்காக காவல்துறையில் பணிபுரியும் கமல்ஹாசன் (வெற்றிவேல்) ஒரு ஐடியா செய்வார். ‘ஜிந்தாவை விடவும் ஒரு பெரிய வில்லனை நாம உருவாக்குவோம்.. அதுக்காக சில கொலைகளை நிஜம் போல செய்வோம்.. தன்னை விடவும் இன்னொரு புகழ்பெற்ற பயங்கரவாதி இருக்கறது ஜிந்தாவுக்கு நிச்சயம் பிடிக்காது. எப்படியும் வெளியே வருவான்’ என்று உயர் அதிகாரிக்கு யோசனை சொல்லும் கமல், ‘ஸ்டீபன்ராஜ்’ என்கிற பெயரில் பல கொலைகளைச் செய்வார். (சும்மா.. லுலுவாய்க்குத்தான்!).

வெற்றி விழா திரைப்படம்
வெற்றி விழா திரைப்படம்

‘யாரிந்த ஸ்டீபன்ராஜ்.. ஜிந்தாவை விடவும் பெரிய ஆளா?..’ என்பது போல் பத்திரிகைகள் பரபரப்பாக எழுதும். எனவே ஸ்டீபன்ராஜ் பற்றி தன்னுடைய ஆட்களிடம் ஜிந்தா விசாரிப்பார். இப்படித்தான் அவரது பாத்திரம் நமக்கு அறிமுகமாகும். ஜிந்தாவின் இந்த என்ட்ரி காட்சியே அத்தனை அட்டகாசமாக இருக்கும்.

ஜிந்தாவாக சலீம் கவுஸ்
'அவள் அப்படித்தான்' தியாகு நினைவில் இருக்கிறாரா..! - சுரேஷ் கண்ணன்

‘எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது’

“யாரந்த ஸ்டீபன்ராஜ்..?”

“தெரியலை சார்…”

“எங்கிருந்து வந்தவன்?”

“தெரியலை சார்..?”

“இப்ப எங்கே இருப்பான்.. எப்படி இருப்பான்.. ஆங்..?”

“தெரியாது சார்”

ஜிந்தா பகபகவென்று வசீகரமான டோனில் சிரித்து விட்டு பேசும் இந்த வசனமும் அதன் மாடுலேஷனும் உடல்மொழியும் அத்தனை சிறப்பு.

சலீம் கவுஸ்
சலீம் கவுஸ்

“ஜென்டில்மேன்., அதாவது…கனவான்களே… நான் என்னைப் பத்தி சொல்ல விரும்பறேன்.. ஐம் எ ஸ்போர்ட்ஸ் மேன்... எனக்கு விளையாடப் பிடிக்கும்.. விளையாட ரொம்பப் பிடிக்கும்... எல்லாரும் விளையாடணும்; எல்லாத்துலயும் விளையாடணும்.. விளையாட்டுல தோத்தவனை எனக்குப் பிடிக்கும். விளையாட்டுல ஜெயிச்சவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஆனா விளையாட்டை வெறுமனே பார்த்தவனை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது...ஏன்னா அவனொரு உப்புசப்பில்லாத ஜாதி... உயிரல்லாத ஜடம்... அப்படிப்பட்ட ஜடம் நம்ம கூட இருக்கவே கூடாது... இந்த ரெண்டு பேரும் தண்டத்துக்கு சுத்திட்டு முண்டமா வந்து நிக்குறாங்க.. என் சீட்டுக்கட்டுல ரெண்டு ஜோக்கர்ஸ்.. மை ஜோக்கர்ஸ்…ஹெஹஹஹஹ...”

ஜிந்தாவாக சலீம் கவுஸ்
அட்டகாசமான கவுண்ட்டர், பிச்சு உதறும் டயலாக் டெலிவரி, கறாரான பாசம்... ஆல் இன் ஆல் அசத்தல் ‘கண்ணம்மா’!

இந்த மாதிரி சமயத்தில் ஜிந்தா என்ன செய்வார் என்பது அவருடைய அடியாட்களுக்குத் தெரியும் என்பதால் கண்களில் அச்சம் வழிய ‘மன்னிச்சுடுங்க சார்’ என்பதையே மறுபடியும் மறுபடியும் பரிதாபமாக சொல்லுவார்கள். அப்போது குறுக்கிட்டு ஜிந்தா சொல்வது ஒரு திருவாசகம். “எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை”.

சலீம் கவுஸ்
சலீம் கவுஸ்

ஸ்டீபன்ராஜ் பற்றி எந்தவொரு தகவலையும் கொண்டு வராத அந்த இரு அடியாட்களையும் ஜிந்தா தண்டிக்கும் முறையிலும் வித்தியாசம் இருக்கும். காலியான துப்பாக்கியில் ஒரேயொரு குண்டை நிரப்பி, சேம்பரை கரகரவென்று சுழற்றி விட்டு  ‘இந்த ரெண்டு துப்பாக்கிலயும் எந்தப் பக்கம் குண்டு இருக்குன்னு உனக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது’ என்று சுட ஆரம்பிப்பார். இரண்டு பேருமே குண்டடி பட்டு சாய்ந்து விழுவார்கள். அப்போது ஜிந்தா தனது வலதுகை ஆசாமியிடம் சொல்லும் வசனம், அத்தனை ஸ்டைலாக இருக்கும். ‘unlucky fellows.. very very.. unlucky fellows..’

‘ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி. நான் நிஜம்..நீ நிழல்’

கமல்ஹாசன் விரித்த வலை சரியாக வேலை செய்யும். ‘அந்த ஸ்டீபன்ராஜை நான் பார்க்கணும். ஏற்பாடு செய்” என்று தன் வலதுகரத்திடம் சொல்வார் ஜிந்தா. கமல்ஹாசனும் ஜிந்தாவும் சந்திக்கும் இந்த மீட்டிங் காட்சியும் பட்டாசாக இருக்கும். அந்த உரையாடல் இப்படியாக போகும்.

ஜிந்தா: ஸ்டீபன் ராஜ்…சோ யூ ஆர் ஸ்டீபன்ராஜ்.

ஸ்டீஃபன்ராஜ்: மிருகம்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமா.?

ஜிந்தா: அதுனாலதான் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு..

ஜிந்தாவாக சலீம் கவுஸ்
சுருள்முடி, வன்மம், அச்சம், குரோதம், கூடவே பயம்! திமிரான ‘பொல்லாதவன்’ ரவியை மறக்க முடியுமா?
சலீம் கவுஸ்
சலீம் கவுஸ்

ஸ்டீஃபன்ராஜ்: குட்ஜோக். பட் சிரிக்கணும்னு தோணலை. என்னை எதுக்கு வரச்சொன்னே..?

ஜிந்தா: பிஸ்னஸ் பேச ஸ்டீஃபன்ராஜ் பிஸ்னஸ் பேச உனக்கு என்ன வேணும்.?

ஸ்டீஃபன்ராஜ்: எதையும் கேட்டு வாங்குற பழக்கமில்லை

ஜிந்தா: கேக்காம வாங்குறது நான் உயிரை மட்டும் தான்.

ஸ்டீஃபன்ராஜ்: அதான் நாலஞ்சு பேரை நிறுத்தி வச்சிருக்கியே. எதாச்சும் பூச்சாண்டி காட்டணும்னா காட்டிடு. நான் போகணும்

சலீம் கவுஸ் - கமல்ஹாசன்
சலீம் கவுஸ் - கமல்ஹாசன்

எதிராளியை மிரட்டுவது போன்ற வசீகரமான சிரிப்பை உதிர்த்து விட்டு ஜிந்தா கம்பீரமாக சொல்லுவார். “ஸ்டீஃபன்ராஜ்… மை டியர் ஸ்டீஃபன்ராஜ்... டூ யூ நோ..ஒரு ராஜ்ஜியத்துக்கு ஒரு ராஜா. ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவன். ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி. நான் நிஜம். ஸ்டீஃபன்ராஜ். நீ நிழல்..இந்த மாதிரி விளையாட்டுக்கு ஒரே ஒரு ஜிந்தா மட்டுந்தான். ஸ்டே அவ்ட் ஆஃப் மை வே..” என்று சலீம் கவுஸ் சொல்லும் பாணியே அட்டகாசமாக இருக்கும். சலீமிற்கு அவரது கம்பீரமான குரல் பெரிய ப்ளஸ்.

“அவ்ளோதானே இதைச் சொல்லத்தானே கூப்பிட்டனுப்பிச்சே.. வேற ஒண்ணும் இல்லையே..?” என்று கமல் நக்கலாக கேட்க, “செய்தி இல்லை.. ஸ்டீஃபன்ராஜ்.. கட்டளை…”  என்று உறுமுவார் ஜிந்தா. என்றாலும் கமலின் நக்கல் குறையாது “மௌண்ட் ரோட்ல குழந்தைகளுக்காக ஒரு பொம்மைக் கடை இருக்கு... சின்னப்பசங்க வெளையாட நெறைய பொம்மைங்க இருக்கும்.வாங்கி வச்சி வெளையாடு” என்று எழுந்து கொள்வார். ஜிந்தாவின் அகங்காரத்தைத் தூண்டி விடுவதும் ‘உன்னைக் கண்டு எனக்கு பயமில்லை’ என்பதும்தான் கமல் சொல்ல விரும்பும் செய்தி.

சலீம் கவுஸ் - கமல்ஹாசன்
சலீம் கவுஸ் - கமல்ஹாசன்

கமல் எழுவதைக் கண்டு கோபமாகும் ஜிந்தா, “ஸிட் டவுன்.. ஸ்டீஃபன் ராஜ் ஸிட் டவுன்.. மேனர்ஸ் ஸ்டீஃபன்ராஜ்.. மேனர்ஸ்… நீ இங்க ஆயுதமில்லாம வந்து மாட்டிட்டிருக்க…சல்லடையாக்கிருவேன்... யூ ஜோக்கர்” என்று உறுமுவார்.

கமல் போன்ற ஒரு முன்னணி ஹீரோவை,  பம்பாயில் இருந்து வந்திருக்கும் ஒரு புதிய வில்லன் ‘ஜோக்கர்’ என்று உதாசீனமாக அழைப்பதெல்லாம் தமிழ் சினிமாவில் எளிதில் நடக்காத விஷயம். கமல் இது போன்றவற்றை எல்லாம் ஈகோ பார்க்காமல் அனுமதிப்பார். காட்சி நன்றாக வர வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருக்கும். அது மட்டுமல்லாமல், சலீம் கௌஸின் நடிப்புத் திறனையும் அவர் உணர்ந்திருப்பார்.

‘நம்ம கூட்டத்துல ஒரு கருப்பு ஆடு... கில் தட் ப்ளாக் ஷீப்’..

ஸ்டீஃபன்ராஜின் துணிச்சலைக் கண்டு தன்னுடைய கூட்டத்தில் இணைத்துக் கொள்வார் ஜிந்தா. அண்டர்கவரில் இருக்கும் கமல், மெல்ல மெல்ல ஜிந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி நெருக்கமாகி விடுவார். அப்போது ஜந்தாவின் வலதுகரம் வந்து சொல்லுவார் “நம்ம கூட்டத்துல ஒரு போலீஸ் இன்ஃபார்மர் இருக்கானாம். இப்ராஹிம் தகவல் சொன்னார்” என்றதும் ஜிந்தா சற்று அதிர்ச்சியாகி ‘நம்ம கூட்டத்துல ஒரு கருப்பு ஆடு.. கில் தட் ப்ளாக் ஷீப்” என்று அதட்டலுடன் சொல்லி விட்டு கமலைப் பார்த்து அதையே மறுபடியும் கூற ‘யெஸ்’ என்று ஆமோதிப்பார் கமல். (ஜிந்தாவின் வலதுகரமாக நடித்தவர், P.U.C.ராஜா பஹதூர். – அந்தக் காலத்து சூப்பர் ஸ்டரான பி.யூ.சின்னப்பாவின் மகன்).

சலீம் கவுஸ் - கமல்ஹாசன்
சலீம் கவுஸ் - கமல்ஹாசன்

ஸ்டீஃபன்ராஜ்தான் அந்தக் கருப்பு ஆடு என்பது பிறகு ஜிந்தாவிற்குத் தெரிந்து விடும். எனவே கமலின் மனைவி அமலாவைக் கடத்தி வருவார். இந்தச் செய்தியை கமலுக்கு அவர் தெரிவிக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். கமலின் சாப்பாட்டுத் தட்டில் ஒரு மோதிரம் இருக்கும். அமலாவின் திருமண மோதிரம் அது.

“இந்த மோதிரம் ஒரு அழகான பொண்ணோட விரலுக்குச் சொந்தமானது. மோதிரத்தைப் போட்டவன் ஒரு துரோகி” என்று சொல்லி விட்டு “மை டியர் ஸ்டீஃபன்ராஜ்.. நீயுமா?” என்று முகத்தில் மெல்லிய வலியுடன் கேட்பார் ஜிந்தா. ‘யூ டூ புரூட்டஸ்?’ என்கிற ஷேக்ஸ்பியரின் வரிக்கு நிகரானதாக அந்தக் கேள்வி இருக்கும்.

சலீம் கவுஸ் - கமல்ஹாசன்
சலீம் கவுஸ் - கமல்ஹாசன்

அதிர்ச்சியடையும் கமல் “லலிதா எங்கே?” என்று திகைப்புடன் கேட்க பஹபஹனெ்று சிரித்து விட்டு “முழுசா காட்டவா.. இல்ல துண்டு துண்டா காட்டவா?” என்று கசாப்பு போடுவது போன்ற உடல்மொழியுடன் ஜிந்தா கேட்பது டெரராக இருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு கப்பலில் கமலுக்கும் ஜிந்தாவிற்கும் இடையே ஓர் உக்கிரமான சண்டை நடைபெறும். முகத்தில் கொலைவெறி பொங்க கமலைத் தாக்கும் ஜிந்தாவின் ஆக்கிரமிப்பு ஒரு கட்டத்தில் அதிகமாக இருக்கும். ‘தன் மனைவியின் மரணத்திற்கு காரணமானவன் இவன்’ என்கிற காட்சிகள், கமலின் மனதில் விரிய, தன்னை முழுவதுமாக திரட்டிக் கொண்டு பதிலுக்கு கமல் திருப்பித் தாக்கி ஒரு பெரிய இரும்புக்குழாயை ஈட்டி போல எறிய, அது ஜிந்தாவின் நெஞ்சில் கத்தி போல் இறங்கி செருகி நிற்கும். அப்போதும் தனது பிரத்யேகமான பிராண்ட் சிரிப்போடு இருக்கும் ஜிந்தா, ஒரு கட்டத்தில் அப்படியே உறைந்து விடுவார்.

சலீம் கவுஸ்
சலீம் கவுஸ்

சலீம் கௌஸ் என்கிற திறமையான நடிகனை தமிழ் சினிமா இன்னமும் கூட அதிகமாகவும் அழுத்தமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். என்றாலும் கிடைத்த வாய்ப்பில் சலீம் அடித்த அட்டகாசமான சிக்ஸர்தான் – ஜிந்தா.

ஜிந்தாவாக சலீம் கவுஸ்
வேதநாயகம், ஜிந்தாவாக மிரட்டிய நடிகர் சலீம் கவுஸ் காலமானார்... திரைப்பிரபலங்கள் இரங்கல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com