ரஜினி முதல் அஜித் வரை.. மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சை தொடர்ந்து வைரலாகும் நடிகர்களின் பேச்சுகள்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினி, விஜய், அஜித் முதல் வில்லன் நடிகர்கள், காமெடி நடிகர்கள் என்று யாரெல்லாம் நடிகைகள் பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை திரும்பி பார்க்கலாம்.
tamil cinema
tamil cinemafile image

நடிகை த்ரிஷா குறித்த நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுதான் இப்போது எங்குபார்த்தாலும் பேசுபொருளாக மாறியுள்ளது. தன்னுடைய பேச்சுக்கு கடுமையான எதிர்வினைகள், விமர்சனங்கள் எழுந்தநிலையில், தன்னுடைய பேச்சுக்கு மீண்டும் விளக்கம் அளித்து வருகிறார் மன்சூர் அலிகான். தான் எந்த தவறும் செய்யவில்லை, த்ரிஷாவிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும், தன்னை ஒரு எரிமலை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசியுள்ளார்.

இந்த நேரத்தில், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினி, விஜய், அஜித் முதல் எதிர்மறை கதாபாத்திர நடிகர்கள், காமெடி நடிகர்கள் என்று யாரெல்லாம் நடிகைகள் பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை திரும்பி பார்க்கலாம்.

மன்சூர் அலிகான் பேச்சின் பின்னணி?

சமீபத்தில் நடந்து முடிந்த லியோ பட வெற்றி விழாவில் பேசிய மன்சூர் அலிகான், “தொடக்கத்தில் த்ரிஷாவுடன் நடிக்கிறோம் என்பதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆஹா, நம்ம த்ரிஷாலாம் இருக்காங்க.. வழக்கம்போல அது இது துரத்துவோம், கொல்லுவோம். அப்டின்னு நெனச்சேன். ஆனால், கண்ணுலயே காட்டல. ஃப்ளைட்லயே கொண்டுபோயி ஃப்ளைட்லயே கொண்டு வந்துட்டாங்க” என்று பேசினார். இந்த பேச்சு அப்போது வைரலானது.

அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் பேட்டியளித்த அவர், ”லியோ படத்தில் த்ரிஷா கூட நடிக்கிறோமா.. நிச்சயமாக பெட்ரூம் சீன்லாம் இருக்கும். குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போன்று, த்ரிஷா உடன் நடிக்கலாம். 150 படங்களில் நம்ம பண்ணாத ரேப்பா, பண்ணாத அட்டூழியமா. சிரஞ்சீவி மலையை அனுமான் தூக்குவது போன்று த்ரிஷாவை விமானத்தில் அழைத்துச் சென்று, மறுபடியும் அழைத்து வந்துவிட்டார்கள்” என்று பேசியிருந்தார். இந்த விவகாரத்தில், மன்சூர் அலிகானுக்கு திரையுலத்தினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். த்ரிஷா முதலில் கண்டனம் தெரிவிக்க அதனை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

tamil cinema
என்னைப் பற்றிய மன்சூர் அலிகானின் கேவலமான பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்: கொந்தளித்த த்ரிஷா

“அப்போ ரஜினி பேசினது சரியா?”

ஜெயிலர் பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, காவாலா படத்தில் தமன்னா உடனான நடனம் குறித்து பேசினார். அப்போது, “6 நாட்களாக காவாலா பாடல் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. கடைசி நாளில்தான் எனக்கான ஃபோர்ஷன் இருந்தது. அப்போது ஒரே ஒரு மூமண்ட் ஆடவைத்துவிட்டு, அனுப்பிவிட்டார்கள். தமன்னாவுடன் பேசக்கூடவில்லை. ஒரு க்ளோசப், ஒரு தனி ஷாட் எடுத்துவிட்டு ‘உங்க ஃபோர்ஷன் முடிந்துவிட்டது சார்’ என்று கூறிவிட்டனர்” என்றார் ரஜினி. இதற்கு சில பத்திரிகையாளர்கள், இவர் இப்படியெல்லாம் பேசியிருக்கத் தேவையில்லை என்று கூறிவந்தனர்.

இந்த விவகாரத்தில், ரஜினியின் பேச்சு சற்று இயல்பாகவே இருந்தாலும், அனுஷ்கா குறித்த அவரது பழைய பேச்சு பேசுபொருளானது. திரைப்படக்கலைஞர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், ரஜினியின் பேச்சை மேற்கோள் காட்டியிருப்பார். ”சார் அன்புக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த ரஜினி, ‘அனுஷ்காவை பார்ப்பதற்கும், ஒரு ஆயாவை(மூதாட்டியை) பார்ப்பதற்கும் என்ன வித்தியாசமோ அதுதான்’ என்றார். என்னண்ணே இப்படி சொல்றீங்களே என்று கேட்டேன்” என்றிருப்பர் சந்தானம். அதே மேடையில் ரஜினிகாந்த், அனுஷ்கா இருவரும் உட்கார்ந்திருக்கும் நிகழ்வுகளும் நடந்தேறின. இதை குறிப்பிடும் நெட்டிசன்கள் “அப்போ ரஜினி பேசினது சரியா?” என்று கேள்வி எழுப்பினர்.

tamil cinema
“நடிகர் சங்கத்துக்கு 4 மணி நேரம் டைம் தரேன்... அதுக்குள்ள...” - ஆக்ரோஷமாக பேசிய மன்சூர் அலிகான்

சர்ச்சை வரிசையில் நடிகர் விஜய்?

விஜய் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஷியாம், நான் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ஜோதிகா, சிம்ரன் ஆகிய இருவர் நடித்திருப்பர். இதுபற்றி கேட்ட நடிகர் விஜய், “டேய் என்னடா வரும்போதே இரட்டை குதிரைகளோட வர்ற.. யார்றா நீ” என்று தமாஷாக பேசியதாக தெரிவித்தார்.

இந்த வீடியோவும் தற்போது இணையதளத்தில் வட்டமடித்து வருகிறது. விஜய் மட்டும் நடிகைகளை குதிரை என்று குறிப்பிடலாமா என்றும் ஒருதரப்பு கேள்விகளை எழுப்பி வருகிறது. முன்னதாக, வேட்டைக்காரன் பட நிகழ்ச்சியில் பேசிய விஜய், ”அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா” என்று பாடிதான் ஷூட்டிங்கின்போது எல்லோரும் வரவேற்பார்கள் என்று பேசியிருப்பார். ஆனால், முழு வீடியோவில் அனுஷ்காவை புகழ்ந்துதான் பேசியிருப்பார் விஜய்.

விஜய் மட்டுமல்ல அஜித்தும்?

நடிகைகள் என்றால், கவர்ச்சியாக நடித்துவிட்டு சினிமாவில் காலம் தள்ளலாம் என்று நடிகர் அஜித் பேசியதாக மற்றொரு வீடியோ வலம் வருகிறது. ஆனால், நடந்தது என்னவெனில், அஜித்திடம் கேள்வி கேட்கும் நெறியாளர், "Female artist னா, கவர்ச்சியாக நடித்துவிட்டு சினிமாவில் survive பண்ணிடுவாங்க. ஆனா ஒரு நடிகராக நீங்க என்ன செய்து இந்த துறையில நிலைத்து நிற்க போறீங்க” என்று கேட்பார். ஆனால், Female artist னா, கவர்ச்சியாக நடித்துவிட்டு சினிமாவில் survive பண்ணிடுவாங்க என்று செய்தியாளரே கேள்வியே அப்படித்தான் கேட்பார்.

அதற்கு பதிலளித்த அஜித், நெறியாளரின் கேள்வி சரியானதுதான் என்றும் பேசுவார். ஆண்களுக்கு நடிப்புதான் முக்கியம் என்றும் பேசுவார். இந்த வீடியோவும் வைரலாகும் நிலையில், அஜித் சற்று யோசித்து பேசியிருக்கலாம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசிய ராதாரவி!

கடந்த 2019ம் ஆண்டு, மேடை ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக பேசினார். அப்போது “நயன்தாரா, பேயாகவும் நடிக்கிறார். சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேஷம் என்றால் கே.ஆர் விஜயா அம்மாவைத்தான் தேடுவார்கள். ஆனால் இப்போது, பார்த்தவுடனே கும்பிடுபவர்களையும் போடலாம். பார்த்தவுடனே கூப்பிடுபவர்களையும் போடலாம்” என்று ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசினார்.

இதற்கு நடிகை நயன்தாராவே கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் சங்கமும் ராதாரவியை எச்சரித்தது. ஆனால், பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. இதுமட்டுமல்லாது, படத்தில் ரேப் சீன்களில் நடித்ததை அழகுபடுத்தியும் பேசியிருப்பார் ராதாரவி. இதெல்லாமா நடிகருக்கு அழகு என்று சக நடிகர்களே விமர்சித்த கதையும் இருக்கிறது.

tamil cinema
Bigg Boss7: 49-ம் நாள் பேச்சு வராமல் தொண்டை அடைக்க பேசிய பூர்ணிமா; நடந்தது என்ன?

மாலை போட்ட கூல் சுரேஷ்..

இதுமட்டுமல்ல, சமீபகாலமாக படத்தின் அதிகப்படியான மேடைகளில் பேசி வரும் கூல் சுரேஷும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சரக்கு பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், பெண் தொகுப்பாளருக்கு அவரது அனுமதி இல்லாமல் மேடையிலேயே மாலை அணிவிப்பார்.

அதற்கு சப்பக்கட்டும் கட்டியிருப்பார். செய்தியாளர்களின் எதிர்ப்புக்கு பிறகு, மேடையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து கூல் சுரேஷை மன்னிப்பும் கேட்க வைத்தனர். இந்த விவகாரமும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஹன்சிகா காலை தொட விடவில்லை: ரோபோ ஷங்கர்

பார்ட்னர் பட விழாவில் பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை ஹன்சிகா குறித்தும் ஆபாசமாக பேசியிருப்பார். படத்தில் ஹன்சிகாவின் காலை நான் தடவுவது போன்று ஒரு காட்சி எடுக்க வேண்டி இருந்தது. ஆனால், ஹன்சிகா மறுத்துவிட்டார். அவரது கால் விரலைக்கூட தொட விடவில்லை.

மைதா மாவை பெசஞ்சி வைத்தது போல் இருக்கிறார் ஹன்சிகா என்றும் பேசினார். பேச்சுக்கு கொந்தளித்த பத்திரிகையாளர்கள், கண்டனம் தெரிவித்த நிலையில், மேடையில் இருந்த சக நடிகர்கள் வருத்தம் தெர்வித்தனர்.

tamil cinema
“பெண் வெறுப்புக் கருத்துகளை கேட்டு கோபமடைந்தேன்” - மன்சூர் அலிகான் பேச்சுக்கு பெருகும் எதிர்ப்பு!

சிரஞ்சீவி செய்தது என்ன?

தற்போது, த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியுள்ள மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் இந்த வரிசையில் பேசுபொருளாகியுள்ளார்.

போலோ ஷங்கர் படத்தில், கீர்த்தி சுரேஷுடன் நடித்த அவர், மேடை ஒன்றில் பேசியபோது, “நான் பலருக்கு அண்ணனாக இருக்கிறேன். ஆனால், உங்களுக்கு அண்ணனாக இருக்க தேவையில்லை. அடுத்த படத்தில் எனக்கு ஹீரோயினாக இருங்கள்” என்று பேசியிருப்பார். இந்த வீடியோவை தற்போது வைரலாக்கும் நெட்டிசன்கள், நீங்கள் செய்தது சரியா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

தீர்வுதான் என்ன?

திரைத்துறையில், சக கலைஞர்களை நடிகர்களே ஆபாசமாக பேசுவதும், இரட்டை அர்த்ததில் பேசுவதும் காலம் காலமாக நீடித்து வருகிறது. இதுபோன்ற பேச்சுகள் இனி எழக்கூடாது என்றால், கடுமையான நடவடிக்கைகள் தேவை என்கின்றனர் வல்லுநர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com