ஒரு வணிகனின் கதை 5 | மறதியான, கவனக்குறைவான, புரிதலற்ற நபரை எப்படி கையாள்வது?

மறதியான, கவனக்குறைவான, புரிதலற்ற ஒரு நபரை நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் மீதான உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்?
பதற்றம்
பதற்றம்freepik

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!


தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 5| பதற்றம்

சாமித்துரை போனில் அழைக்கும் போது காலை மணி 11 இருக்கும். சாமித்துரை உள்ளூர்க்காரர். இந்தத் தொழில் ஆரம்பித்த பின்பு கிடைத்த ஒரு நல்ல நண்பர். ராஜலட்சுமி ரெடிமேட்ஸின் ஓனர். மிக நீண்ட தொழில் பாரம்பரியம் கொண்டவர்.

“ஆள் வேணும்னு ரொம்ப நாளா சொல்லிகிட்டிருந்தீங்களே கேகே, கிடைச்சாங்களா?”

“எங்க சார்? ரெண்டு மாசமாச்சு, ஒண்ணும் அமையமாட்டேங்குது. முத்து, கதிரு ரெண்டு பேரை வைச்சிதான் சமாளிச்சிகிட்டு இருக்கேன். எங்கயேயும் வெளிய கிளிய போகமுடியல. இன்னொரு ஆள் கிடைச்சா நல்லாருக்கும். கடையப் பாத்துக்கிறதுக்கும், தேவைப்பட்டா வெளி மார்க்கெட்டிங்குக்கும் அனுப்பலாம்!”

“ஒரு பிஎஸ்ஸி மேத்ஸ் படிச்ச பையன் இருக்கான், வேணுமா?”

“என்னா விளையாடுறீங்களா சார்? பிஎஸ்ஸி மேத்ஸுக்கு நான் என்ன வேலை கொடுத்து, என்ன சம்பளம் கொடுக்குறதுனு வேண்டாமா? எனக்கு டென்த், பிளஸ்டூ படிச்ச பசங்க போதாதா?”

“அதெல்லாம் சரிதான். ஆனா யாரு வர்றா? எல்லாவனும் கட்டிட வேலைக்கு போயி, ஒரு நாளைக்கு குறைஞ்சது ஆயிரம் ரூபா சம்பளம் பாக்குறானுங்க. நாம குடுக்குற 300க்கும், 350க்கும் எவன் வர்றான்? இந்தப்பையன் படிச்சிருக்கான். டிஎன்பிஎஸ்ஸிக்கு பிரிப்பேர் பண்ணிகிட்டு இருக்கான். அவனுக்கு எக்ஸாம் கிளியர் பண்ற வரைக்கும் ஒரு வருமானமும், அனுபவமும் கிடைச்சா மாதிரி இருக்கும். உங்களுக்கும் தெளிச்சலான ஒரு ஆள் கிடைச்சா மாதிரி இருக்கும்”

“அதெல்லாம் சரிதான் சார். ஆனா, பத்தாயிரம் சம்பளத்துக்கு அவன் சம்மதிச்சு வருவானா சார்?”

“அதெல்லாம் சொல்லிட்டேன். அவனுக்கு ஓகேதானாம். உள்ளூர்ல பத்தாயிரம் கொடுக்க உங்கள விட்டா இன்னும் ஒண்ணுரெண்டு ஆள்தான் இருக்கு. முதல்ல உங்களைக் கேப்போமே, ஆளு தேவைனு சொன்னீங்களேனு கேட்டேன்”

“அப்ப வரச்சொல்லுங்க சார்!”

“சாய்ங்காலம் வரச்சொல்லவா? பேசிப் பாக்குறீங்களா?”

“அவன்கிட்ட பேச என்ன சார் இருக்கு? நாளையிலருந்து வேலைக்கே வரச்சொல்லிடுங்க”

பதற்றம்
ஒரு வணிகனின் கதை 4 | நெட் பிராஃபிட்ட பாக்கனுமா? சேல் பிராஃபிட்ட பாக்கனுமா?

சிரித்தபடி போனை வைத்தார். மனசுக்கு இதமாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த ஒரு நபர் வேறு வேலை கிடைத்துப் போய்விட, முத்து, கதிர் மற்றும் நான் என மூவர் மட்டுமே கடையை சமாளித்துக்கொண்டிருந்தோம். முன்பைப் போல என்னால் லோடு ஏற்ற இறக்க சிரமமாக இருந்தது. 28 கிலோ எடையுள்ள டைல்ஸ் பெட்டிகளை பத்துக்கு மேல் ஏற்ற வேண்டியது வந்தால், முதுகு பிடித்துக்கொள்ளும் போலிருந்தது. தெரிந்த ஆட்களிடமெல்லாம் சொல்லிவைத்ததும், மூன்று மாதங்களாகக் காத்திருந்ததும் வீண் போகவில்லை. டிகிரி படித்த பையன், கடை வேலை மட்டுமல்லாமல், வெளி மார்க்கெட்டிங் பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் அவசரப்பட்டுப் பயனில்லை, கேகே! சில விஷயங்கள் எல்லாம் தன்னால் அமைவதற்காகக் காத்திருக்கத்தான் வேண்டும்!

மாலை 4 மணிக்கெல்லாம் நேர்காணலுக்கு வந்துவிட்டான் சரவணன். இதெல்லாம் எதுக்கு தம்பி என்று சொல்லிவிட்டு, சில அடிப்படை விசயங்களைத் தெளிவுபடுத்திவிட்டு நாளையிலிருந்து வேலைக்கு வந்துவிடும்படி சொல்லி அனுப்பினேன். அழகாகத் தலையாட்டிவிட்டுப் போனவன் மறுநாள் காலை எட்டரைக்கெல்லாம் வேலைக்கு வந்துவிட்டான்.

வழக்கம் போல இரண்டு மூன்று நாட்களுக்கு, அதைச் சொல்லித் தருகிறேன், இதைச் சொல்லித் தருகிறேன் என்று படுத்தாமல் எனது வேலையை நான் பார்த்துக்கொண்டிருக்க, முத்துவும், சரவணனும் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முத்து வழக்கம் போல கஸ்டமர்களைக் கவனிக்கும் நேரத்தில், அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சரவணன். முத்து தேவைப்படும் சதுரடிகளுக்கேற்ப பெட்டிகளைக் கணக்கிட்டு, வண்டியில் ஏற்றத்தொடங்கிய போது, முத்து, கதிரோடு சேர்ந்து சரவணனும் எந்தத் தயக்கமுமின்றி பெட்டிகளைத் தூக்கி ஏற்றிக்கொண்டிருந்தான்.

பின்பொரு நாள் அவனை அழைத்து அமரவைத்து சேல்ஸ் என்றால் என்ன? கஸ்டமர் என்றால் யார்? அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியம்? மார்க்கெட்டிங் என்றால் என்ன? நமக்கு என்னென்ன வெளிவேலைகள் இருக்கின்றன? அடுத்து நமது இலக்கு என்ன? என்பதெல்லாம் பற்றி ஒரு பெரிய விரிவுரையை ஆற்றினேன். ஒன்றரை மணி நேரம் பேசி முடித்தபோது எனது தொண்டை வறண்டு போயிருந்தது. தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தேன்.

பதற்றம்
ஒரு வணிகனின் கதை 3 | எல்லோரையுமே சந்தேகிக்கத்தான் வேண்டுமா?

“இதெல்லாம் பார்த்து பயப்பட வேண்டாம், எல்லாவற்றையும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். இங்கு கடையில் நடக்கும் சேல்ஸை மட்டும் ஒரு மாதத்துக்கு கவனித்துக்கொண்டிரு. ஒரு மாதம் நமது பொருட்களைப் பற்றியும், கடைக்கு வரும் கஸ்டமரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் கற்றுக்கொள். மற்றதெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்”

என்று சொன்னதும் தலையாட்டினான். அவன் கண்களில் ஓர் ஒளி தெரிந்தது.

அதற்கும் அடுத்த நாள், அவனை அழைத்து உட்காரவைத்து எப்படி டைல்ஸ்களின் அளவுகளைக் கணக்கிட்டு வரும் கஸ்டமரின் தேவைக்கேற்ப எடுத்துத் தர வேண்டும் என்பது பற்றிப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு ஒரு பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு ஆரம்பித்தேன்.

“மொத்தமே டைல்ஸ்களில் ஒரு பத்து வகைதான் இருக்கும்! அதுவும் நம் கடையில் அஞ்சாறு வகைகள்தான் இருக்கின்றன. அதில் முதலாவது இந்தாக் கிடக்குதே இதுதான். வீட்டுக்குள் ஹால், கிச்சன், பெட்ரூமில் பதிக்கத்தகுந்த 2 அடி நீள, அகலமுள்ள டைல்! இதுல டிசி, மேட், நானோ, ஜிவிடினு மூணு, நாலு வகை இருக்கு. அதை அப்புறம் பார்ப்போம். முதல்ல டிசியை எடுத்துக்குவோம். 2 அடி நீளம், 2 அடி அகலம்! அப்ப ஒரு டைல் எவ்வளவு சதுர அடி?”

விழித்தான். சேச்சே! கேள்வியை எதிர்பாராமல் இருந்திருப்பான், இன்னொரு முறை கேட்போம்.

“ஒரு டைல், 2 அடி நீளம், 2 அடி அகலம்! அப்ப எவ்வளவு சதுர அடி?”

விழித்தான். என்ன கேகே, லூசு மாதிரி கேள்வி கேட்கிறே. படிச்ச பையன், கேள்வியைச் சரியாக் கேளு.

“ஒரு டைல்! சதுரமா இருக்கு. அதன் ஒரு பக்க லெங்த் 2 அடி. அந்த டைலோட பரப்பளவு, அதான் ஏரியா ஆஃப் தி ஸ்கொயர் எவ்வளவு?”

விழித்தான்.

“அதான்ப்பா, பரப்பளவு, ஏரியா, சதுரடி, ஸ்கொயர்ஃபீட்! எவ்வளவு?”

விழித்தான்.

“எவ்வளவு?”

“எவ்வளவு?” என்று என்னையே திருப்பிக் கேட்டான்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். இதுதான் முதல் வேலையாகக் கூட இருக்கும். பதற்றப்பட்டிருப்பான்.

“ஏரியாப்பா, நீளம்x அகலம்! 2x2 = 4 சதுரடி!”

கூர்ந்து கவனித்தான். ம்ம்ம், பிடித்துக்கொண்டான்!

”சரி, ஒரு பாக்ஸில் எத்தனை டைல்ஸ் இருக்கும்?”

விழித்தான். சேச்சே! வந்தே 5 நாள்தானே ஆகுது, கவனிச்சிருக்கமாட்டான்.

“நாலு இருக்கும்! எவ்வளவு?”

“நாலு”

“ஆங். இப்ப ஒரு பாக்ஸில் மொத்தம் எவ்வளவு சதுரடி இருக்கும்?”

விழித்தான். கூல்டவுன் கேகே! இது நிச்சயம் பதற்றம்தான்.

பதற்றம்
ஒரு வணிகனின் கதை 2 | தொழிலும் நட்பும்! “கடன் கொடுப்பதால்தான் நல்ல நட்பு கிடைக்குமென இல்லை; ஆனால்...”

“இல்லப்பா, பதற்றப்படாதே! ஒரு டைல் 2 அடி நீள, அகலம். 2x2= 4 சதுரடி. ஒரு பெட்டியில் 4 டைல்ஸ் இருக்கும். அப்ப, 4x4 = 16 சதுரடி!”

கூர்ந்து கவனித்தான். குட்!

”சரி, இப்ப ஒரு கஸ்டமர் வந்து 160 சதுரடி கேட்கிறார். அவருக்கு எத்தனை பெட்டிகள் எடுத்துக்கொடுப்பே?”

விழித்தான். சரி, கேள்விகளே இனி வேண்டாம். முழுமையாக சொல்லிக் கொடுத்துவிடுவோம். வறண்டு போயிருந்த தொண்டைக்குக் கொஞ்சம் தண்ணீரைக் காட்டிவிட்டுத் தொடர்ந்தேன்.

“ஒரு டைல் 2x2 சைஸ். அப்ப, 4 சதுரடி. ஒரு பெட்டியில் 4 டைல்ஸ். அப்ப 4x4 = 16 சதுரடி. ஒரு கஸ்டமருக்கு 160 சதுரடி தேவை. அப்ப 160 வகுத்தல் 16 = 10 பெட்டி!”

கூர்ந்து கவனித்தான்.

“புரிஞ்சுதா?”

“ம்ம்ம்” சத்தம் மெலிதாக வந்தது.

“புரிஞ்சுதா?”

“ஆங், புரிஞ்சது சார்!”

“எங்க திரும்பச் சொல்லு!”

“எதை?”

“இப்ப நான் சொன்னதை?”

“அதான் எதை?”

“கடைசியா சொன்னேன்ல… ஒரு டைல் 2x2 சைஸ், அப்ப 4 சதுரடி… ப்ளா, ப்ளா…”

“இன்னொரு வாட்டி சொல்லுங்க சார்”

நாம ஏதாவது மனப்பாடப்பகுதி சங்க இலக்கியச் செய்யுள் நடத்திக்கொண்டிருக்கிறோமோ எனும் சந்தேகம், மனதுக்குள் மெல்லத் தோன்றி மறைந்தது.

”சரி, நல்லா கேட்டுக்கோ… ஒரு டைல் 2x2 அடி சைஸ். அப்ப, 4 சதுரடி. ஒரு பெட்டியில் 4 டைல்ஸ். அப்ப 4x4 = 16 சதுரடி. ஒரு கஸ்டமருக்கு 160 சதுரடி தேவை. அப்ப 160 வகுத்தல் 16 = 10 பெட்டி! அவ்வளவுதான், சொல்லு!”

”ஒரு டைல் 2x2 சதுரடி. அப்ப ஒரு பெட்டியில் 4 டைல்ஸ் இருக்கும். ஒரு கஸ்டமருக்கு 16 அடி தேவை. அப்ப 16x16… ம்ம்.. 16x16… கால்குலேட்டரை எடுத்துக்கவா சார்?”

லேசாக தலை சுற்றிக்கொண்டு வந்தது எனக்கு.

“இல்லை, இல்லை, பொறு தம்பி, உன் பெயர் சரவணன்தானே, சாமித்துரை சார்தானே அனுப்பினாரு?”

“ஆமா சார்”

“நீ பிஎஸ்ஸி மேத்ஸ்தானே படிச்சிருக்கே?”

“ஆமா சார்”

“ஃபுல்லா பாஸ் பண்ணிட்டியா? அடுத்து எம்மெஸ்ஸி போடப்போறதா சொன்னாரே!”

“ஆமா சார்”

“ஓகே, இந்த டைல்ஸை விட்டுரு. ஒரு செவ்வகம் இருக்கு. அந்தாருக்கு பாரு ஒரு டைல். அதான் செவ்வகம். அதோட பரப்பளவு என்ன? அதோட அளவு 1.5 அடி நீளம், 1 அடி அகலம்.”

விழித்தான்.

“சொல்லுப்பா”

“1 x 1.5 = 1. ஒரு சதுரடி!”

கூல் டவுன் கேகே. இது நிச்சயம் முதல் வேலைங்கிறதான வந்த பதற்றம்தான். இரண்டு நாள் கழிச்சு எல்லாம் சொல்லிக்கொடுத்துக் கொள்ளலாம், இன்னிக்கு இது போதும், ஏறக்கட்டு!

“சரி தம்பி, மற்றதை நாளைக்குப் பார்ப்போம். ஆமா, ஏன் இப்படிப் பதற்றப்படுறே, பதற்றப்படாதே, கூலா இரு! இதெல்லாம் சிம்பிளான விஷயம்தான்”

பதற்றம்
ஒரு வணிகனின் கதை 1 | குறுந்தொழில் முனைவோரிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்னென்ன..?

“நான் பதற்றமெல்லாம் படலை சார்! ஏன் அதையே திரும்பத்திரும்ப சொல்லிகிட்டு இருக்கீங்க?”

அவனது குரல் அழுத்தமாக, சத்தமாக, சற்றுக் கோபமாக வந்தது. இப்போது எனக்குத்தான் பதற்றமாக இருந்தது.

சரவணன் அளவுக்கு மறதியான, கவனக்குறைவான, புரிதலற்ற ஒரு நபரை நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் மீதான உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்? பதில் தாருங்கள். பணியாளர்களைக் கையாள்வது பற்றித் தொடர்ந்து அடுத்த அத்தியாயத்திலும் பேசுவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com