ஒரு வணிகனின் கதை 1 | குறுந்தொழில் முனைவோரிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்னென்ன..?

கடையின் முகப்பிலேயே எனது மேஜை இருந்ததால், முற்றத்தில் முப்பதடிக்கு முன்னால் யாராவது ஒரு விநாடி தயங்கியவாறே கடையைப் பார்த்தால் கூட எனக்குத் தெரிந்துவிடும். யாராக இருந்தாலும், அவர் வாடிக்கையாளராக இருப்பாரோ? என்ற பார்வைதான் எனக்கு எப்போதும்
தொழில் ஆலோசனை
தொழில் ஆலோசனைfreepik

முன்குறிப்பு:

ஒருமுறையாவது, ஏதாவது பிசினஸ் செய்துபார்க்க வேண்டும் என்ற ஆவல் எழாத மனிதர்கள் இங்கு யாருமே இருக்க முடியாது. வேலை கிடைக்காத, சரியான வருமானமில்லாத நபர்கள் மட்டுமல்ல, நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட இந்த எண்ணத்துக்கு விதிவிலக்காக மாட்டார்கள். ஆனால், நம்மில் பலரும், பல காரணங்களினால் அதை செயல்படுத்த முடியாத சூழலில் சிக்கியிருப்போம். முதலீடும், கோர் ஸ்ட்ரெங்த் எனப்படும் செய்யவிருக்கும் உற்பத்தி, வணிகம், பொருள் மற்றும் சேவை குறித்த அறிவும் மட்டுமே ஒரு தொழிலில் வெற்றி பெற போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு இன்னும் ஏராளமான நுட்பங்கள், குணாதிசயங்கள் தேவைப்படுகின்றன. அவற்றிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றால்தான் தொழில் செய்யமுடியும் என்பதில்லை.

ஆனால், அவை குறித்த குறைந்தபட்ச அறிமுகமும், புரிதலும் நிச்சயம் தேவை. ஒரு தொழிலில் ஜெயிக்க, நூறு விஷயங்களில் நாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியிருக்கலாம், ஆனால், நாம் தோற்க ஒரு விஷயத்தைக் கோட்டைவிட்டாலே போதுமானது.

இன்றைய தமிழ்ச்சூழலில் தொழில் குறித்த புத்தகங்கள், ஆன்லைன் கோர்ஸ்கள் ஏராளம் கிடைக்கின்றன. ஆனால், கிட்டத்தட்ட எல்லாவற்றிலுமே, ஒரு பாடப்புத்தகத்துக்கு இணையான அணுகுமுறையே காணக்கிடைக்கிறது. எப்படி ஒரு சரியான விற்பனை விலையை நிர்ணயிப்பது? எப்படி ஒரு வெற்றிகரமான மார்க்கெட்டிங் உத்தியை வடிவமைப்பது? எனது விற்பனை இலக்கை அடைவது எப்படி? என்பது போன்ற நேரடியான கேள்விகளுக்கு நீங்கள் மேற்சொன்ன புத்தகங்களை, பயிற்சிகளைத்தான் நாடவேண்டும். ஆனால், வணிகம் குறித்த இத்தொடர், அவற்றிலிருந்து ஒரு விஷயத்தில் வேறு படுகிறது. அது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் கதை போன்ற களம்!

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முதல் அத்தியாத்தை பார்க்கலாம்...

1. வாக்கு

வழக்கம் போலவே, காலை 9 மணிக்கெல்லாம் கடைக்கு வந்துவிட்டேன். இன்றைக்கு நிறைய வேலை இருக்கிறது. செல்போன் சனியனைத் தூக்கி ஓர் ஓரமாய் வைத்தேன். இது மாதத்தின் முதல் வாரம். சென்ற மாதத்தில் போடப்பட்ட பில்களை எல்லாம் ஒழுங்கமைத்து, ரிப்போர்ட்டுகளைத் தயாரித்து ஸ்டாக் ஃபைலை அப்டேட் செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட ரகங்களுக்கு ஸ்டாக் சரியாக இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். முடிந்ததும், தேவைப்பட்ட திருத்தங்களைச் செய்துவிட்டு ஜிஎஸ்டியின் முதல் பகுதியான ஜிஎஸ்டிஆர்1 –ஐ ஃபைல் செய்ய வேண்டும். இதெல்லாம் முடிப்பதற்கே மதியமாகிவிடும்.

லேப்டாப்பைத் திறந்து உயிர்ப்பித்துவிட்டு, பில் புக்கை எடுத்துப் பிரித்தபடி நிமிர்ந்தேன்.

ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார்.

கடையின் முகப்பிலேயே எனது மேஜை இருந்ததால், முற்றத்தில் முப்பதடிக்கு முன்னால் யாராவது ஒரு விநாடி தயங்கியவாறே கடையைப் பார்த்தால் கூட எனக்குத் தெரிந்துவிடும். யாராக இருந்தாலும், அவர் வாடிக்கையாளராக இருப்பாரோ? என்ற பார்வைதான் எப்போதும்! இப்போது இவரைத் தவற விட்டிருக்கிறேன்.

போலீஸ் யூனிபார்மைப் பார்த்ததுமே இயல்பாக ஏற்படுகிற ஜெர்க்கை அடக்கிக் கொண்டு,

சொல்லுங்க சார், டைல்ஸ் ஏதும் பார்க்கணுமா?

கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வரமுடியுமா? எஸ்.ஐ கூட்டிகிட்டு வரச்சொன்னார்

இப்போது நிஜமாகவே ஜெர்க் ஆனேன். 45 வயது ஆகிறது. இந்த நீண்ட வாழ்க்கையில், ஒரு முறை கூட போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்ததில்லை. இதயம் தடக்தடக்கென்று அடித்துக்கொண்டது. எப்போதாவது அரிதிலும் அரிதாக போக்குவரத்துக் காவலர்களால், நிறுத்தப்பட்டு அப்போதும் ஹெல்மெட், லைசன்ஸ், இன்னபிற பேப்பர்கள் சரியாக இருந்து மரியாதையுடன் அனுப்பப்பட்டிருக்கிறேன். அவ்வளவுதான் எனக்கும், போலீசுக்குமான உறவு. இப்போது என்னவாக இருக்கும்?

என்ன விஷயம் சார்?

ஒண்ணுமில்ல, ஒரு சின்ன என்கொயரி!”

இந்தா வந்துடுறேன்!

என்றபடியே, கடைக்குள் பார்த்தபடி,

முத்தூ, இதோ வந்துடுறேன், பாத்துக்க. ஆள் யாரும் வந்தா போன் பண்ணு

அடுத்த லோடு இன்னும் சில நாட்களில் வரும் திட்டமிருந்தமையால், அதற்குரிய இடத்தை தயார் செய்யும் வேலையிலிருந்தனர் மாரிமுத்துவும், கதிரும்! மொத்தம் மூன்று ஊழியர்கள் பேர் இருந்தனர். ஒன்றரை மாதத்துக்கு முன்னர்தான் கார்த்திக் எனும் பையன் திருநெல்வேலியில் வேறு நல்ல வேலை கிடைத்துச் சென்றுவிட்டான். ஆள் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு பேரை வைத்துத்தான் இப்போது சமாளித்துக் கொண்டிருக்கிறேன். முத்து வெளியே எட்டிப்பார்க்காமலேயே, “சரி சார்!” என்று சொல்லிவிட்டு அவனது வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

அந்த போலீஸ்காரருடன் கிளம்பினேன். என்னவாக இருக்கும்? யாரையாவது கூப்பிடணுமா? நண்பர்கள், உறவினர்களில் யார் யார் போலீசில் இருக்கிறார்கள்? அரசியலில் இருக்கிறார்கள்? மனதில் யாரோரோ வந்துபோனார்கள். சட்! முதலில் என்னவென்று பார்த்துவிட்டு அப்புறம் தேவையென்றால் யாரையாவது கூப்பிடுவோம்!

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எஸ்.ஐ முன்னால் நின்றுகொண்டிருந்தேன்.

உங்க பேரென்னங்க?

மரியாதையாகத்தான் போகிறது. தோற்றத்துக்கும், உடைக்குமான மரியாதையா என்று தெரியவில்லை.

கிருஷ்ணகுமார்

கேகே டைல்ஸ் உங்களோடதுதானே?

ஆமா சார்

எவ்வளோ நாளா நடத்துறீங்க?

நாலு வருஷமாச்சு சார்!

கடன்லாம் கொடுப்பீங்களா?

இல்ல சார், இப்ப யாருக்கும் கொடுக்குறதில்ல, ஆரம்பத்துல கொடுத்துட்டு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.”

கொடுக்கிறதேயில்லையா?

ரெகுலர் கஸ்டமர்ஸா வர்ற நாலைஞ்சி காண்ட்ராக்டர்ஸ்க்கு மட்டும் கொடுக்குறேன் சார்

யாருக்கெல்லாம் இப்ப கொடுத்திருக்கீங்க?

பிரபு பவுண்டேஷன்ஸ், ஜிகே பில்டர்ஸ், மேசன் குமரேசன், காண்ட்ராக்டர் சக்திமுருகன்…

யோசித்தபடியே,

அவ்வளவுதான் சார். மற்றதெல்லாம் ஆயிரம், ஐநூறுக்குள்ளதான் இருக்கும்

ம்ம்… யாராச்சும் பணம் திருப்பித் தர லேட் பண்ணாங்கன்னா என்ன பண்ணுவீங்க?

திடுக்கென்றிருந்தது.

ஆள் வைச்சு மிரட்டுவீங்களா? அவ்வளவு பெரிய ரவுடியா நீங்க?

பதற்றப்பட்டேன்.

சார், அப்படியெல்லாம் இல்லை சார்! எம்பியே படிச்சிருக்கேன். இருபது வருஷமா சென்னையில் பெரிய கம்பெனிஸ்ல ஒர்க் பண்ணியிருக்கேன். இங்க சொந்த ஊருக்கு வந்து செட்டிலாகி அஞ்சி வருசம் ஆகுது. இந்த கடை ஆரம்பிச்சி நாலு வருஷம்தான் ஆச்சி! இது வரை யார் கூடயும் எந்தத் தகறாறும் வந்ததுமில்லை. ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க?

ஆளு வைச்சி மிரட்டுறதா மேசன் குமரேசன், உங்க மேல கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு

ஒரு நிமிசத்தில் எல்லாம் விளங்கிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முந்தைய தகறாறு ஸ்டேஷன் வரை வந்துவிட்டது. அதோடு ரொம்பவும் அதிர்ச்சியாகவும், அடிபட்டது போலவும் உணர்ந்தேன். குமரேசன் என்னுடைய ரெகுலர் கஸ்டமர்களில் ஒருவர். சில மாதங்களில் அவருடைய விற்பனை மட்டுமே, எனது மொத்த விற்பனையில் 20%க்கும் அதிகமாகவெல்லாம் இருந்திருக்கிறது. ஆனால், சொல்லில் சுத்தமில்லாதவர். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கடன் தொகை உயர்ந்துவிட்ட பின்னர் காணாமல் போய்விடுவார். இது இரண்டாவது முறை அவரோடு அவஸ்தைப் படுகிறேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. மாட்டைவிட மோசமாக இருந்தது எனது நிலைமை.

அந்த அளவுக்கா கூரற்று நடந்துகொண்டேன்? முதல் முறையாக சென்றாண்டு பிரச்சினை வந்தபோது அவர் எனக்கு சுமார் ஐம்பதாயிரம் தரவேண்டியிருந்தது. மூன்று மாதங்களாகப் போன் மேல் போன் செய்து, போராடி, வீட்டுக்கெல்லாம் சென்று வாக்குவாதம் செய்து, காத்துக்கிடந்து ஒரு வழியாக வாங்கியிருந்தேன். இனி இந்த ஆளுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்கும் கூட ஒரு பைசா கடன் கொடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். ஆனால், மூன்றாவது நாளே, எதுவும் நடக்காதது போல சிரித்துக்கொண்டே கடைக்கு வந்துவிட்டார் குமரேசன்.

எடுத்தப் பொருளுக்கு பைசா சுத்தமாக பணத்தைக் கொடுத்தார். ஆகா, இவரிடமா இத்தனைக் கடுமையாக நடந்துகொண்டோம், தொழில் என்றால் சற்றே முன்பின்னாகத்தான் இருக்கும்? எதுவுமே நடக்காதது போல மீண்டும் நம்மிடமே பொருள் வாங்க வந்துவிட்டாரே என்று என் மனம் இளகிவிட்டது. அடுத்த வாரமும் அதே போல பொருளை வாங்கிவிட்டு பணத்தைக் கொடுத்தார். மெல்ல மெல்ல மூன்றாவது, நான்காவது தடவை என வாங்கிய பொருளுக்கு முக்கால் வாசி பணத்தைக் கொடுத்துவிட்டு மிச்சத்தைப் பாக்கி வைத்தார். அதுவே தொடர்ந்தது.

சுதாரித்துக் கொள்வதற்குள் தொகை நாற்பதாயிரத்துக்கு வந்துவிட்டது. சட்டென காணாமல் போய்விட்டார். போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது. ஆளைக் கண்ணிலேயே பார்க்கமுடியவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகவிட்டன. கொடுத்த தொகை கிணற்றில் போட்டது போல ஆகிவிட்டது. தலைகீழாக நின்றும் பிரயோசனமில்லை. கடைசியில் ஓர் இரவு நேரத்தில் வீட்டுக்கே போய் ஆளைப் பிடித்துக்கேட்டால், பேச்சில் மரியாதையே இல்லை!

எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது. விரலுக்குத் தகுந்த வீக்கம் மாதிரிதான் கடனும். என் கடையின் லட்சணத்துக்கு இதெல்லாம் ரொம்பப் பெரிய தொகை. இப்படி இருந்தால் நான் கடையை எப்படி நடத்துவது? கொஞ்சமாவது மனசாட்சியோடு நடந்துகொள்ளுங்கள் குமரேசன்

எனக்கு வர வேண்டிய இடத்திலிருந்து வரவில்லை, நாலு வீடு வேலை பாத்துருக்கேன். பாக்கி மட்டுமே ரெண்டு லட்சம் வரவேண்டியிருக்குது. ஒருத்தனும் தரமாட்டேங்கிறான். நான் என்ன ஊரை விட்டு ஓடியாப்போயிட்டேன்? வந்தா தரப்போறேன். அதுக்காக வீட்டுக்கு வந்து அசிங்கப்படுத்துவீங்களா?

குரலில் இருந்த தெனாவெட்டு எரிச்சலைக் கிளப்பியது.

இப்ப என்ன அசிங்கப்படுத்திட்டேன்? கொடுத்த பணத்தைக் கேட்கிறது தப்பா? இதெல்லாம் கொஞ்சமும் நல்லாயில்ல குமரேசன்.”

அதெல்லாம் தரும் போது தருவேன். ஆனதைப் பாத்துக்குங்க!

இப்ப இடத்தைக் காலி பண்ணு என்பது போல கத்தினார்.

வெறுப்பாக இருந்தது. பணமும் வரவில்லை, அடுத்தடுத்து அவரால் வரவேண்டிய வியாபாரமும் வரவில்லை. மூன்று மாதங்களாக அவரது லோடு வண்டியில் டைல்ஸ் எங்கெங்கிருந்தோ வந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இப்போது அவமானமும் கூடுதலாக!

அப்பா நினைவுக்கு வந்தார்.

தொழில்லாம் சரிப்பட்டு வருமா நமக்கு? நல்லா யோசிச்சிக்கோப்பா” என்று சொன்னவரிடம், 25 வருசமா எவ்வளவு பேரைப் பார்த்திருக்கிறேன் என்ற துணிவு. “அதெல்லாம் பாத்துக்கலாம்ப்பா!” அலட்சியமாக சொல்லியிருந்தேன்.

ச்சை!

”ஆனதைப் பாத்துக்குறதா? இதுதான் தொழில் பண்றவர் சொல்ற பதிலா? சரி, இன்னும் பத்து நாள்ல என் பணம் வரலைன்னா, எங்க ஊர்லயும் ஆளிருக்காங்க, என்னால் ஆனதைப் பார்த்துக்குறேன்.” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அதுதான், அந்த ‘எங்க ஊர்லயும் ஆளிருக்காங்க’ என்ற சொற்றொடர்தான் இப்போது பொய்க்கேசாக மலர்ந்திருக்கிறது. இயன்றவரை எஸ்.ஐயிடம் நடந்ததை விளக்கினேன். அவர் என்னை நம்பியதை விடவும், குமரேசன் ஊருக்குள் தொழில் செய்யும் லட்சணம் ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகமென்பதால், பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார். நன்றி சொல்லிவிட்டு ஸ்டேஷனிலிருந்து கடைக்கு வந்தேன்.

இன்னொரு ரெகுலர் கஸ்டமர் குணசேகரன் காத்திருந்தார். அவரது வண்டி வேறு காத்திருந்தது. எடுக்கும் முடிவோடு வந்திருக்கிறார்.

எடுக்க வேண்டிய பொருட்களின் அளவுகளைச் சொல்லச்சொல்ல, பட்டியலிட்டேன். 800 சதுரஅடிக்கும் மேலானவை. முப்பதாயிரம் வரும் போலிருந்தது. வாரத்துக்கு இதுபோல இரண்டு விற்பனை இருந்தாலே பெரிது. ஒரு சின்ன மகிழ்ச்சி மனதுக்குள்!

குணா எழுந்து என்னருகில் நெருங்கி வந்து குரலை மெலிதாக்கிக்கொண்டு கேட்டார்.

நாளைக்கு வீட்டுக்காரர் தந்துடுறேனு சொல்லியிருக்கார். இப்ப டைல்ஸ் எடுத்துட்டுப் போறேன், காலையில பத்து மணிக்கெல்லாம் பணம் வந்துடும், என்ன சரிதான!

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? குமரேசன் மாதிரி ஆட்களை நீங்கள் எப்படிக் கையாளுவீர்கள்? நான் கையாண்ட விதம் சரியா? குறிப்பாக இரண்டாவது தடவையாக நான் கடனுக்கு பொருட்களைத் தந்தது சரியா? இப்போது குணாவுக்குக் கொடுக்கலாமா? கூடாதா? பதில் தாருங்கள்.

அதே நேரம் கடனுக்கு வாங்காமலோ, கடனுக்குக் கொடுக்காமலோ பிசினஸ் சாத்தியமில்லாத ஒன்றுதான். இன்றைய வேகமான சூழலில், குறிப்பாக கொரோனாவுக்குப் பின்பான சூழலில் கடனுக்கு வாங்குவதும், கொடுப்பதும் மிகவும் குறைந்திருக்கிறது. இருப்பினும் 24 காரெட் தங்கத்தைப் போல முறுக்கிக் கொள்வதும் பயன் தராது.

அது பற்றிய அனுபவங்களை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com