ஒரு வணிகனின் கதை 4 | நெட் பிராஃபிட்ட பாக்கனுமா? சேல் பிராஃபிட்ட பாக்கனுமா?

நம்பிக்கையை விதைக்கும் மனிதர்களையும், நிகழ்வுகளையும் நாம் சந்திப்போம். நாம் தொடர்ந்து இயங்கும் சக்தியைத் தருவன அவை! வாழ்க்கை அப்படியானதுதான்.
லாபம்
லாபம்freepik

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 4 - கணக்கு

"சார் நாலு வருஷமா தொழில் பண்ணிகிட்டிருக்கேன். முடிஞ்சி போன ரெக்கார்ட்ஸ்லாம் பார்த்தால், 25% பிராஃபிட்தான் வருது"

- என்றேன் சோகமாக! உடனடியாக ஓர் அதிர்ச்சிதான் அவர் முகத்தில் உருவானது.

“என்னது 25% எப்படி சார் வரும்? வாய்ப்பே இல்லையே?”

”சார் நீங்க வேற! நெட் பிராஃபிட்டைச் சொல்லல! சேல் பிராஃபிட்டை சொல்றேன்”

“சேல் பிராஃபிட்டா? அப்படின்னா?”

“கிராஸ் பிராஃபிட்டுக்கு முன்னால இருக்குற ஃபிகர். வாங்குற விலைக்கும், விற்குற விலைக்கும் இருக்கிற வித்தியாசம்! ஜஸ்ட் சேல் பிராஃபிட்!”

“ஏன் சார் நீங்க வேற புதுசு புதுசா கண்டுபுடிச்சி வயித்தைக் கலக்குறீங்க?”

சிரித்தேன்.

“என்னைக் கேட்டா கிராஸ் பிராஃபிட்டே பார்க்கக்கூடாதும்பேன்.

நம்ம மைண்ட்ல எப்பவும் நெட் பிராஃபிட் மட்டும்தான் இருக்கணும். கிராஸைப் பார்த்தாலே பெரிய நம்பரா இருக்கும், நம்ம மனசு நிம்மதியாக உணரக்கூடிய வாய்ப்பாயிடும். நெட் மட்டும்தான் நமக்கு சோறு போடுது. அதுக்காகத்தானே இவ்வளவு போராட்டமெல்லாம்?

நெட்ல ஒண்ணுமில்லைன்னா நாம என்னத்துக்கு இந்தத் தொழிலைப் பண்ணனும்? அதுக்காக என்னென்ன கஷ்டங்களையெல்லாம் தினசரி சந்திச்சிகிட்டு இருக்கோம், நிம்மதியா ஒரு நேரம் சாப்பிட முடியுதா? தூங்க முடியுதா? அதனால நெட் பிராஃபிட் மட்டும்தான் நம்ம மைண்ட்ல இருக்கணும். மற்றதெல்லாம் பேப்பர்ல இருக்கலாம்.

நம்ம குறிக்கோள் எப்பவும் நெட் பிராஃபிட் எத்தனை சதவீதம்? அதை எப்படி ஒவ்வொரு சதவீதமா அல்லது 0.1 சதவீதமானாலும் சரி, எப்படிக் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கிறதுங்கிறதுல மட்டும்தான் இருக்கணும்!

கிராஸே நம்பளை ஏமாத்திடும்னு சொல்லிகிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா அதுக்கும் பெருசா ஒரு நம்பரைக் கணக்கு பண்ணி வைத்துக்கொண்டு அதுக்கு ஒரு பேரை வைச்சிக்கிட்டு உங்களையே ஏமாத்திகிட்டு இருக்கீங்க!

அதையெல்லாம் பார்க்கவே செய்யாதீங்க, டீ, காபி, நாளிதழ், சாமி படத்துக்கு வைக்கிற பத்தி, உள்ளூர்காரர்களுக்குக் கொடுக்கும் நன்கொடைகள், கூர்கா முதலாக ஆரம்பித்து சம்பளம், மின்கட்டணம், போன் பில், தரகர்களுக்கான கமிஷன் உள்ளிட்ட முழுமையான இயக்கச்செலவுகள், கடன்கள், அவற்றுக்காகக் கட்டப்படும் வட்டி, விளம்பரச் செலவுகள், விற்பனை செய்யப்படுகிற பொருட்கள் மட்டுமின்றி, டேபிள், சேர் முதலாகப் போட்ட முழுமையான முதலீட்டுக்கான குறைந்த பட்ச வங்கி வட்டி என்று முற்றிலுமான வரவு செலவுகள், வருடாந்திர செலவுகள், பார்த்துக் கணக்கிட்டு கடைசியாகக் கிடைக்கும் நெட் பிராஃபிட் மட்டுமே நீங்கள் சம்பாதிப்பது!

இனி அந்த எண்ணை மட்டுமே மனதில் வையுங்கள். மறந்தும் கூட இப்படி சேல் பிராஃபிட் என்று எதையாவது சொல்லாதீர்கள். அட்லீஸ்ட் என்னிடமாவது சொல்லாமலிருங்கள், பயமாக இருக்கிறது எனக்கு!”

“சரிதான் சார். நீங்க சொல்ற மாதிரிதான் நானும் கணக்குப் பார்க்கிறேன். ஆனா, நெட் பிராஃபிட்டைப் பார்த்தா பயமா இருக்கு, ரொம்ப ஏமாற்றமான ஒரு ஃபீல் வரத்தான் செய்யுது! எனக்குலாம் மைனஸ்ல போகாம இருந்தாலே பெரிய விஷயம்! அதுக்காகத்தான் இந்தமாதிரி சேல், கிராஸ் இதையெல்லாம் பார்த்து மனசைத் தேத்திக்குவேன்”

இருவரும் சிரித்துக்கொண்டோம்.

“நானே இந்த சிட்டிக்குள்ள 8 வருஷமா குட்டிக்கரணம் அடிச்சிகிட்டு இருக்கேன். என்னோட நெட் பிராஃபிட்டே 5%க்குள்ளதான் இருக்கும்! நீங்க வந்து நாலு வருஷத்துக்குள்ள மைனஸ் போகாம பண்றீங்கன்னா பெரிய விஷயம்தான், பெருமைப் பட்டுக்கலாம்!”

“ஆமா, அது ஒண்ணுதான் குறைச்சல்!”

செந்தில்முருகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். செந்தில் திருநெல்வேலியின் ஒரு பிரபலமான டைல்ஸ் ஸ்டாக்கிஸ்ட்! என்னைப் போல 20 மடங்கு பெரிய வியாபாரம் அவருடையது. முதல் முறை அறிமுகமாகும் போதே, நட்பாகிவிட்டோம். என்னைப் போன்ற குட்டிக் கடைக்காரர்கள் அவரைப் பொறுத்தவரை கஸ்டமர்கள், அந்த வகையிலும் என்னோடு அவர் அன்பாகப் பேசியிருக்கலாம்.

ஆனால், என்னைப்போலவே சென்னை, பெங்களூர், மும்பை என்று எஞ்சினியரிங் தொழிற்துறையில் பல்லாண்டுகள் பணியாற்றிக் கடுப்பாகி சொந்த ஊருக்கு வந்து இப்படித் தொழில் ஆரம்பித்து முக்கிக் கொண்டிருக்கும் வகையில் எங்களுக்குள் சில ஒற்றுமைகள் இருந்ததால் சற்று நெருக்கமாகிவிட்டோம். நான் செய்யும் நேரடிக் கொள்முதல் தவிர்த்து, என்னிடம் இல்லாத பொருட்களை நெல்லை ஸ்டாக்கிஸ்ட்கள் சிலரிடம் தொடர்ச்சியாக வாங்கும் வழக்கமுண்டு எனக்கு.

அதில் செந்தில் முதன்மையானவர். அதோடு பிற கஸ்டமர்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள் ஏதும் என்னிடம் இல்லாததால், எங்கள் நட்பும் சிதைவுறாமல் நன்றாகவே இன்று வரை சென்றுகொண்டிருக்கிறது. வேறொரு தொழிற்சிக்கல் குறித்து அவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டுப் போகவே இன்று அவரது அலுவலகத்துக்கு வந்திருந்தேன்.

லாபம்
ஒரு வணிகனின் கதை 1 | குறுந்தொழில் முனைவோரிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்னென்ன..?

”சரி, வந்த விஷயத்தைச் சொல்லுங்க!”

“இல்ல சார், இந்த வாட்டி சும்மா கதை பேசிட்டுப் போக வரலை! ஒரு ப்ரொப்போஸல்! உங்களுக்கு ஓகேயானு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்.”

“சொல்லுங்க!”

“சார், மற்றதெல்லாம் நேரடியாகக் கொள்முதல் பண்றேன்ங்கிறது உங்களுக்குத் தெரிஞ்சதுதான். ஆனா, நானும் முகப்புச் சுவர் டைல்களை வைக்கணும்னு பார்க்கிறேன். பட்ஜெட் பத்த மாட்டேன்குது, ஒவ்வொரு வாட்டியும், அடுத்த வாட்டி பாத்துக்கலாம், அடுத்த வாட்டிப் பாத்துக்கலாம்னு ரெண்டு வருஷமா தள்ளிப் போட்டுகிட்டிருக்கேன். ஒண்ணு ரெண்டு ஐட்டங்களை வைச்சு கஸ்டமர்களை கன்வின்ஸ் பண்ணவும் முடியல! சேல்ஸ் கைவிட்டுப் போகுது.

இது வரை ஒருதடவை கூட கடனுக்கு நான் உங்களிடம் கேட்டதுமில்லை, வாங்கியதுமில்லை! இப்பவும் கடன் கேட்கல, பதிலா நீங்க 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள டைல்ஸை என்னோட குடோன்ல வைக்கணும். சேல் நடந்துச்சுன்னா உடனே பணத்தைத் தந்துடுவேன். பிராஃபிட்ல ஷேர் பண்ணிக்குவோம். உங்களுக்கு ஒரு சேல் பாயிண்ட் அதிகரிச்ச மாதிரி இருக்கும்!”

“ஐடியா என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனா, சாரி, இப்போதைக்கு இது செட்டாகாது! ஏன்னா, இங்க எனக்குத் தேவையான ஸ்டாக்கையே என்னால வாங்கி வைக்க முடியல. அதனால முடியாது!!”

“ரிஸ்க்குனு நினைக்கிறீங்களா?”

“இல்லை கேகே! நிஜமாத்தான் சொல்றேன். என்னோட மார்க்கெட்டுக்குத் தேவையான ஸ்டாக்கே என்னிடம் இல்லை. என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். ராங் கமிட்மெண்ட் கொடுக்குறதை விட முதலிலேயே வெளிப்படையாகப் பேசிவிடுவது பெட்டர்னு நினைக்கிறவன். சாரி!”

“சாரிலாம் சொல்லத் தேவையில்லை சார், எனக்குப் புரியுது! அப்ப, வழக்கமா எடுக்கறாப்பல இப்போதைக்கு ரெண்டு டிசைன் எடுத்துக்குறேன். இந்த வாரயிறுதியிலேயே பே பண்ணிடுறேன்”

மேனேஜர், ராஜனை வரவைத்து,

“சாருக்கு நல்லதா ரெண்டு டிசைன் எடுத்துக்கொடுங்க!”

பின்னர் கைகொடுத்துவிட்டு எழுந்து ராஜனுடன் குடோனுக்குப் போய் பத்திருபது டிசைன்களைப் பார்த்து இரண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு வந்தேன். பில்லிங் ஏரியாவில் செந்தில் நின்றுகொண்டிருந்தார். தற்செயலாக அவற்றைக் காண்பித்தேன். அங்கேதான் செந்தில் அவரொரு பெரிய மனிதன் என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராஜனுடன் காதைக் கடித்துவிட்டு என்னிடம் சொன்னார். நான் தேர்ந்ததில் ஒன்றை வேண்டாம் என்றும், பதிலாக வேறொன்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னார். ஏனென்பது போல ஏறிட்டேன்.

லாபம்
ஒரு வணிகனின் கதை 2 | தொழிலும் நட்பும்! “கடன் கொடுப்பதால்தான் நல்ல நட்பு கிடைக்குமென இல்லை; ஆனால்...”

“வேணாம் கேகே, அந்த ஐட்டம் சரியா போகவே இல்லை, வந்து ஆறு மாசமாச்சு. உங்களுக்கு டெட் ஸ்டாக்காயிடும். நானாவது டிஸ்கவுண்ட்ல தள்ளி சமாளிச்சிடுவேன்”

இதுதான் அக்கறை, இதுதான் பிசினஸ் எதிக்ஸ், இதுதான் நேர்மை!

புன்னகைத்தார். புன்னகைத்தேன். கிளம்பினேன். எனது புன்னகையில் இருந்தது நன்றி!

ரகுராமனுக்கும், செந்தில்முருகனுக்கும் உள்ள வித்தியாசம் எத்தனைப் பெரிது என்பதை உணர்கிறீர்களா? நான்கு ரகுராமன்களுக்கு நடுவில், ஒரு செந்தில் நமக்குக் கிடைப்பார்! நம்பிக்கையை விதைக்கும் மனிதர்களையும், நிகழ்வுகளையும் நாம் சந்திப்போம். நாம் தொடர்ந்து இயங்கும் சக்தியைத் தருவன அவை! வாழ்க்கை அப்படியானதுதான். மீண்டும் சந்திப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com