ஒரு வணிகனின் கதை 3 | எல்லோரையுமே சந்தேகிக்கத்தான் வேண்டுமா?

ஒரு விநாடி கண்ணயர்ந்தால், ஏமாற்றப்படும் வாய்ப்புகள் இருக்கும் நிலையில், எல்லோரையுமே சந்தேகிக்கத்தான் வேண்டுமா?
business stress
business stressfreepik

முன்குறிப்பு:

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை தொடர்
ஒரு வணிகனின் கதை தொடர்

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

அத்தியாயம் 3 - மயக்கம்

எறும்பு கடித்தாற் போன்ற சிறுவலியைப் பொறுத்துகொண்டு, விரல் நுனியிலிருந்த இரத்தப் பொட்டை டிஷர்ட்டின் முனையில் துடைத்துப் பிடித்துக்கொண்டே, க்ளூகோ மீட்டரைப் பார்த்தேன். 230 என்றது. ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்ட இரண்டு கேழ்வரகுத் தோசையை நினைத்துக்கொண்டேன். காபி கூட அருந்தவில்லை. அப்படியும் 230 காட்டுமா என்ன? எழுந்த ஒரு சின்ன எரிச்சலை விழுங்கிக்கொண்டே மீட்டரை அதற்குரிய பெட்டியில் போட்டு மேஜை டிராயருக்குள் போட்டுவிட்டு நிமிர்ந்தேன்.

“சார், வணக்கம் சார்!” என்றபடியே உள்ளே வந்த ரகுராமன் என் எதிரேயுள்ள சேரில் அமர்ந்தான். ஒரு செயற்கையான புன்னகையோடு வரவேற்றேன்.

“வாங்க ரகு!”

“எப்படி சார் இருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் ரகு! சொல்லுங்க!”

“ஒண்ணுமில்லை சார், பெரியவங்களை பாத்துட்டுப் போகலாமேனுதான். வேறென்ன? சார்தான் போனையே எடுக்க மாட்டிங்கிறிங்களே? நேர்ல வந்தாதான் பேச முடியுது!”

ரொம்ப மரியாதையாகப் பேசினான். போலியாகச் சிரித்தேன்.

ரகுராமன், நெல்லையிலிருக்கும் ஒரு பெரிய டைல்ஸ் ஸ்டாக்கிஸ்டின் விற்பனைப் பிரதிநிதி. ஒரு விற்பனைப் பிரதிநிதிக்குத் தேவையான சிலபல இலக்கணங்களோடு இருப்பவன். சரியாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை பத்து மணிக்கு போன் செய்வான். அவனிடமிருந்து போன் வந்தாலே இது மூன்றாம் நாள், மணி இப்போது காலை சுமார் பத்து என்று முடிவு செய்துவிடலாம். போனை கட் செய்தால் மீண்டும் போன் வராது. இதெல்லாம் நல்ல குணங்கள்தான். ஆனால், ரகு சாதாரணமானவனல்லன்!

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ரகு! பிசியா இருந்திருப்பேன்”

“அது பரவாயில்ல சார், ஆனா, ஆர்டர்னு வந்தாதான் என் ஞாபகமே உங்களுக்கு வரமாட்டேங்குது. எப்பவும் எஸ்பி இல்லைனா கிரகா டைல்ஸ்க்குத்தான் போகுது. எங்க மேலயும் கொஞ்சமாச்சும் இரக்கம் காட்டுங்க சார்!”

தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பயன்படுத்துவான்.

“அப்படியெல்லாம் இல்ல ரகு! இதுல மறைக்க என்ன இருக்கு? உங்களுக்கேத் தெரியும். நானே டைரக்ட் பர்ச்சேஸ் பண்ண ஆரமிச்சதுக்கு அப்புறம் இங்க லோக்கல் பர்சேஸ் ரொம்பவும் குறைஞ்சு போச்சுன்னு! ஏதாவது இல்லாதது மட்டும் எடுக்குறது அவ்வளவுதான்”

“அதை எங்ககிட்ட எடுக்குறதுதானே சார்?”

“கொஞ்சமா எடுக்குறது எங்க எடுத்தா என்ன? கிரகாவோட எனக்கு கடை ஆரமிச்சதிலிருந்து நல்ல தொடர்பிருக்கு. அதை மீறி எப்படிச் செய்யறது? நானே உங்ககிட்ட பல தடவை சொல்லியிருக்கேன். என்னோட டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. நான்லாம் பொட்டன்ஷியல் கஸ்டமரே இல்லைனு”

“அப்படில்லாம் சொல்லாதீங்க சார்! கிரகாவுல மட்டுமே மாசம் அம்பதாயிரம் பில்லு பண்ணுறீங்க. எனக்கு ஒரே ஒரு பத்து குடுக்கக்கூடாதா?”

“அடுத்துப் பண்ணுவோம் ரகு!”

“அப்படித்தான் சொல்லுறீங்க, ஆனா கண்டுக்கவே மாட்டேங்குறீங்க!”

விடவே மாட்டான். நச்சுப் பிடித்தவன். ஆனால், எடுத்தெறிந்துப் பேசிவிட முடியாது.

எப்போது யாருடைய உதவி தேவைப்படுமென்பது தெரியாத தொழில் இது!

“ரேட்டையும் பார்க்கணும்ல ரகு!”

“என்ன ரேட்டு சார் தர்றாங்க, சொல்லுங்க சார்! அதிலிருந்து ஒரு ரூபா கம்மியா பண்ணிடுவோம்”

“உங்களுக்கா கிரகா ரேட்டு தெரியாது?”

“எனக்கெப்படி சார் தெரியும்? அவங்க ஆளு பாத்து குடுப்பாங்க!”

“அதெல்லாம் கிரகா எல்லோருக்கும் ஒண்ணாதான் பண்ணுறாங்க!”

“சும்மா சொல்லாதீங்க சார்! சரி சார், மேட்டு (ஒரு வகையான டைல்ஸ்) என்ன ரேட்டுக்கு சார் தர்றாங்க? சொல்லுங்க சார்!”

“28!”

“பாத்தீங்களா சார், உங்களுக்கு 28க்கு பண்றாங்க, களக்காட்டுல ஒரு பார்ட்டிக்கு 29க்கு பண்றாங்க!”

“அட, சும்மா சொல்லாதீங்க!”

“நிஜமா சார்! அவங்க ஆள் பாத்துதான் சார் பண்ணுவாங்க!”

மனதுக்குள் ஒரு சின்ன பெருமை எட்டிப்பார்த்தது. நம் மீது எவ்வளவு மரியாதை இருந்தால் மார்க்கெட்டில் 29 ரூபாய்க்குத் தருவதை கிரகா நமக்கு 28க்குத் தருவார்கள்? களக்காட்டுக்காரனை விட நாம்தான் கெட்டிக்காரன்!

”சரி சார், நாங்களும் 28க்குத்தான் சார் பண்ணிகிட்டு இருக்கோம், உங்களுக்காக 27க்கு பண்ணித்தர்றேன். எங்க சார்கிட்ட நான் பேசிக்கிறேன். என்ன சார் சொல்றீங்க?”

“இல்ல வேணாம். ஸ்டாக் நிறைய இருக்கு! வேணுங்கிறப்ப சொல்றேன்”

“சார் எப்படியாச்சும் ஒரு ஆர்டர் குடுங்க சார், ஒரு பத்தாயிரத்துக்கு?”

“அடப் பணமில்ல ரகு! அடுத்த வாரம் ஏதாச்சும் தேவைப்படுமில்ல, அப்ப குடுக்குறேன்”

“பணத்தை விடுங்க சார், ஒரு வாரம்தானே, நான் பேசிக்கிறேன்.”

யோசிக்கத் தொடங்கினேன்.

“வாங்க சார், பாத்ரூம் ப்ளோர் ஆண்டிஸ்கிட் எவ்வளவு சார் வைச்சிருக்கீங்க? அந்தத் துக்கடா ஐட்டத்தைத்தானே சார் எனக்குத் தருவீங்க, பரவால்ல சார், வந்ததுக்கு அதையாச்சும் குடுங்க சார்?”

தொடக்கத்தில் அவன் எதிர்பார்த்த இரக்கம் இப்போது என் மனதில் லைட்டாக எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.

“என்ன டிசைன் இருக்கு?”

போனை எடுத்துக் கடகடவென 20-30 போட்டோக்களை அனுப்பினான். எனது போனை எடுத்துப் பார்த்தேன்.

“நீங்க வழக்கமா எடுக்குற எல்லா டிசைனும் இருக்குது. எது சார் வேணும்?”

“ரேட்டு என்ன?”

“24தான் சார்”

“இதானே ஆகாதுங்கிறது? கிரகாவுல 23.5க்கு பண்றாங்க? நான் எதுக்கு 24க்கு உங்ககிட்ட வாங்கணும்?”

“சரி சார், அவ்வளவுதானே 23க்கே பண்ணிடுவோம் சார். எதை சார் போடணும்?”

business stress
ஒரு வணிகனின் கதை 2 | தொழிலும் நட்பும்! “கடன் கொடுப்பதால்தான் நல்ல நட்பு கிடைக்குமென இல்லை; ஆனால்...”

இரண்டு டிசைன்களைக் காண்பித்தேன். குறித்துக்கொண்டான்.

”நூறுநூறு போட்டுரலாமா சார்?”

“என்னது நூறா? அதை வைச்சிகிட்டு நான் என்ன பண்றது? தலா 25 பாக்ஸ் போடுங்க போதும்”

“சார் சார், 23க்குப் பண்றோம்… வண்டிக்காவது கிடைக்கவேண்டாமா? ஒரு அம்பதம்பதாவது போடுங்க சார்”

“ஆமா, டெலிவரி யார் பொறுப்பு?”

”சார் கிரகாவுல 24க்கே உங்க டெலிவரிதான் எடுக்குறீங்க. 23க்கு என்னை பண்ணச்சொன்னால் எப்படி சார்? டெலிவரிக்கு ஒரு 500 குடுங்க போதும் சார், என் வண்டியிலயே போட்டுர்றேன்”

நம் வண்டியானால் 800 தரவேண்டும். டைலுக்கு 1 ரூபாய் மற்றும் வண்டிக்கு 300 ரூபாய் குறைகிறது. நன்றாக பேரம் பேசிவிட்டதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.

“அம்பதம்பதுதானே சார்?”

“ம்ஹூம், நாப்பது நாப்பது போதும்”

“என்ன சார்? சரி சார். பேமண்ட் 18900 வருது சார்”

என்றபடி பேமண்டுக்கான கமிட்மெண்டை எதிர்பார்த்த ஒரு தொனியுடன் என்னைப் பார்த்தான்.

”சொன்னேன்ல, ஒரு வாரத்துல தர்றேன்”

“நல்லது சார்!” என்றபடி கிளம்பிவிட்டான்.

மாலை 5 மணிக்கெல்லாம் ரகுவின் வண்டி வந்துவிட்டது. முத்து ஆர்வமாக பெட்டிகளை இறக்கி அடுக்க ஆரம்பித்தான். நான் இன்னும் ஜிஎஸ்டி போர்ட்டலில்தான் இருந்துகொண்டிருந்தேன்.

அடுத்த ஐந்து நிமிடத்துக்கெல்லாம் முத்து உள்ளே கூப்பிட்டான். எழுந்து உள்ளே போனேன்.

“சார், நிறைய டேமேஜ் இருக்கு”

“என்னாச்சு?”

”ஒண்ணு ரெண்டுனா பரவாயில்ல, அஞ்சாறு பாக்ஸ் கலகலத்துப் போய் கிடக்கு”

“நல்லா பாரு, எத்தனைன்னு?”

ஐந்து நிமிடம் எடுத்துக்கொண்டு 7 பெட்டிகளை தனியே எடுத்து வைத்தான்.

“ஏழு சோலி முடிஞ்சது”

ஏழு பெட்டிகள் நொறுங்கிக் கிடந்தன.

“வேற நல்ல பாக்ஸிலிருந்து ரெண்டு பீஸை எடு…”

இரண்டை எடுத்து எங்களிடமிருந்த மற்ற டைல்ஸ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். சட்டென தலையை உதறிக்கொண்டேன். காலையில் ரகு எனக்கு அடித்துவிட்டுப் போன விபூதி இப்போது மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மனதில் இரக்க உணர்வு சுரந்த இடத்தில் இப்போது வெறுப்பு பரவிக்கொண்டிருந்தது. இதுக்குத்தான் அந்தப்பயலை உக்கார வைச்சிப் பேசறது கூட கிடையாது.

business stress
ஒரு வணிகனின் கதை 1 | குறுந்தொழில் முனைவோரிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்னென்ன..?

அப்போதுதான், முத்து இந்த நான்கு வருடத்தில் நாங்கள் பார்த்திராத ஒரு காரியத்தைச் செய்து காண்பித்தான். இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு பெருவிரலால் அழுத்தி ஒரு பிஸ்கட்டை இரண்டாக உடைப்பது போல அந்த டைல் ஒன்றை அழுத்திப் பார்த்தான். அழகாக உடைந்தது. இப்படி தரத்திலும் கூட டைல்ஸ்கள் தயாராகிறதா என்று ஆச்சரியம் ஒரு பக்கம்! இதை என்ன விலைக்கு எடுத்துவந்து மார்க்கெட் விலைக்கு நமது தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டான் ரகு எனும் கோபம் ஒருபக்கம்!

போனைப் போட்டேன்

“என்ன சார் இது? இதென்ன செங்கலா சார், கராத்தே போட்டு உடைச்சுப் பார்க்க? உங்களுக்குத் தெரியாததா? சில லோடுல ஒண்ணு ரெண்டு டேமேஜ் வர்றதுதான். பாக்ஸ் பிரிக்காமத்தானே சார் வருது? இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்? இறக்கும் போது உங்காளுங்க உடைச்சாங்களானு கவனிச்சீங்களா சார்? இந்த பில்லுக்கு எப்படி சார் ரிட்டர்ன் எடுக்குறது? அடுத்த வாட்டி பாத்து பண்ணிக்கலாம் சார்! ஆமா, பேமண்ட் என்னிக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுவீங்கனு சொன்னீங்க?”

கோபத்தில் போனை கட் பண்ணிவிட்டு, வங்கிச் செயலியைத் திறந்து ரூபாய். 18,900த்தை உடனடியாக டிரான்ஸ்ஃபர் பண்ணினேன். அப்போதுதான் அந்த குறுஞ்செய்தி கண்ணில் பட்டது. ‘உங்களுக்கு டயபெடிஸ் வருவதற்கு, உணவுப்பழக்கம் மட்டுமே காரணமில்லை, அதிகமான ஸ்ட்ரெஸ்ஸும் ஒரு காரணமாக அமையலாம்!’

“இன்னொரு வாட்டி அவன் வந்தான்னா, கடைக்குள்ள காலை வைக்க விடாதே முத்து!” கத்தினேன்.

*

நீங்கள் சொல்லுங்கள், என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் ரகுராமனிடம் ஏமாறாமல் இருந்திருப்பீர்களா? அவனுக்குப் பணத்தைத் தராமல் நான் இழுத்தடித்திருக்கலாமா? ஒரு விநாடி கண்ணயர்ந்தால், ஏமாற்றப்படும் வாய்ப்புகள் இருக்கும் நிலையில், எல்லோரையுமே சந்தேகிக்கத்தான் வேண்டுமா? பதில் தாருங்கள். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com