ட்ரம்ப், கிரீன்லாந்து எக்ஸ் தளம்
உலகம்

கனடா, பனாமா கால்வாயைத் தொடர்ந்து கிரீன்லாந்து.. ட்ரம்ப் வைக்கும் அடுத்த குறி - பின்னணி இதுதான்!

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், கிரீன்லாந்தின் உரிமை பற்றி மீண்டும் பேசத் தொடங்கியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். இதையடுத்து தனது அமைச்சகத்தில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள், அதிகாரிகளை அவர் நியமித்து வருகிறார். அவருடைய நியமனங்களே பெருமளவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பதவியேற்பதற்கு முன்பாக அவர் பல்வேறு திட்ட அறிவிப்புகளையும் கருத்துகளையும் வெளியிட்டு வருவது உலகையே கலங்கடித்து வருகிறது.

டொனால்டு ட்ரம்ப்

அந்த வகையில், டென்மார்க் நாட்டிற்கான அமெரிக்கத் தூதரை அறிவித்த ட்ரம்ப், ”கூடவே நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலகம் முழுவதற்குமான சுதந்திரம் ஆகியவற்றுக்காக கிரீன்லாந்து மீதான உரிமையும் கட்டுப்பாடும் மிகவும் அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது” எனத் தெரிவித்திருந்தார். அதாவது, ”டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே கடந்த முறை அதிபராக இருந்தபோது முயன்று முடியாமல்போன விஷயம்தான் இது. 2019ஆம் ஆண்டு அவர் அதிபராக இருந்தபோது, கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக அறிவித்த ட்ரம்ப்பின் யோசனையை டென்மார்க் அரசு நிராகரித்துவிட்டதைத் தொடர்ந்து, அவர் டென்மார்க் பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது மீண்டும் அவர் அதிரபாக உள்ள நிலையில், கிரீன்லாந்தின் உரிமை பற்றிப் பேசத் தொடங்கியுள்ளார். இதற்கு கிரீன்லாந்தின் பிரதமர் முச்ச பெ ஈகே பதிலடி கொடுத்துள்ளார். ”கிரீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது பற்றிய ட்ரம்பின் தற்போதைய பேச்சும், அவருடைய முந்தைய ஆட்சிக்காலத்தில் சொன்னதைப் போலவே பொருளற்றது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கிரீன்லாந்து எங்களுடைய நாடு. நாங்கள் விற்பனைக்கு அல்ல: ஒருபோதும் விற்பனைக்கு இணங்க மாட்டோம். ஆண்டாண்டுக் கால சுதந்திரத்தை எந்நாளும் இழக்க மாட்டோம். டென்மார்க் பிரதமர் அலுவலகமோ, அமெரிக்க தூதரை வரவேற்க, புதிய நிர்வாகத்துடன் ஒத்துழைக்கக் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

அதேநேரத்தில், இதற்கு டென்மார்க் நாட்டின் பிரதமரோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமோ இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அட்லான்டிக் பெருங்கடலுக்கும் ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள உலகின் மிகப்பெரிய தீவுதான் கிரீன்லாந்து. இந்தத் தீவின் 80 சதவிகிதப் பரப்பு பனிக்கட்டியால் போர்த்தப்பட்டிருக்கிறது. இப்பகுதி அரிய கனிமங்கள் உள்ளிட்ட அபரிமிதமான இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டின்கீழ், 1979 முதல், ஓரளவு தன்னாட்சி பெற்றதாக இருக்கும் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் பிடுஃபிக் விண்வெளி தளம் (Pituffik Space Base) உள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்க ராணுவத்திற்கும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை எச்சரிக்கை அமைப்பிற்கும் கிரீன்லாந்து முக்கியமானதாக இருக்கிறது. மேலும், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் மிக எளிதாக இணைக்கும் பாலமாக இது இருக்கிறது.

மேலும், உலக நாடுகள் தங்களின் வர்த்தக வரம்பை ஆர்க்டிக் வட்டத்தில் விரிவுபடுத்த முயல்கின்றன. குறிப்பாக, ரஷ்யா இந்தப் பகுதியை ஒரு மூலோபாய சந்தர்ப்பமாகப் பார்க்கிறது. இதையடுத்தே, ட்ரம்ப் அதன்மீது பார்வையைச் செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் கொள்கை என்பதையே உலகம் முழுவதும் நிலைநாட்ட வைக்கும் வகையிலேயே ட்ரம்ப் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அவர் கனடாவையும், பனாமா கால்வாயையும் அவர் வம்புக்கு இழுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்படியும் நியாயப்படியும் பனாமா நாடு நடந்துகொள்ளாவிட்டால், எந்தக் கேள்விக்கும் இடமின்றி, உடனடியாக, முழுமையாக பனாமா கால்வாயை அமெரிக்காவுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று பேசியிருந்தார். அதேபோல், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா மாற வேண்டும் என சமூக ஊடகத்தில் ட்ரம்ப் பகிர்ந்திருந்தார்.