ஒரே பதிவில் கவர்னர் ஆன கனடா பிரதமர்.. டொனால்டு ட்ரம்ப் செய்தது என்ன?
அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, அவர் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். குடியேற்றக் கொள்கை, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு, டாலருக்கு எதிரான எச்சரிக்கை என பல அதில் அடக்கம். அந்த வகையில், கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
‘ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களால் போதை மருந்து கடத்தல்கள் மற்றும் குற்றங்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்கும் வகையிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு கனடா தரப்பிலும் பதில் தரப்பட்டிருந்திருந்தது.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த சில நாட்களுக்கு அமெரிக்கா சென்று டொனால்டு ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது ட்ரம்ப், அதிக கட்டணங்களை தவிர்ப்பதற்காக கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து கேலி செய்திருந்தார். அதாவது கனடா பிரதமர், “கனடா மீதான வரி நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாகக் கொன்றுவிடும் என்பதால், 25 சதவீத வரியை ஏற்க முடியாது” என ட்ரம்ப்பிடம் கோரிக்கை வைத்தார்.
அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “உங்கள் நாடு 100 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவைப் பிடுங்கினால் ஒழிய, உங்களால் பிழைக்க முடியாதா” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், “கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாகப் பிரிக்கலாம். அதற்கு ஆளுநராக உங்களை நியமிக்கலாம்” என்றார். இதைக்கேட்டு இருவருமே சிரித்துள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே பொருள்படும்படியான கருத்தை, டொனால்டு ட்ரம்ப் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய ‘ட்ரூத் சோஷியல்’ தளப் பக்கத்தில், “ஸ்டேட் ஆஃப் கனடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இரவு உணவருந்தியது மகிழ்ச்சியாக இருந்தது’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கனடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவை விரைவில் மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்களிடையே நடக்கும் வர்த்தகம், வரி குறித்த பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கும் வகையில் அமையும்” எனப் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருவதுடன், உலக நாடுகளிடையேயும் பேசுபொருளாகி உள்ளது.