பனாமா கால்வாயை ஏன் குறிவைக்கிறார் ட்ரம்ப்.. பின்னணியில் சீனா இருக்கிறதா? நடப்பது என்ன?
”பனாமா கால்வாய் திருப்பித் தரப்பட வேண்டும்” -ட்ரம்ப்
அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்டு ட்ரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, பனாமா கால்வாயை கைப்பற்ற போவதாக அறிவித்திருப்பது உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் அரிசோனாவில் பேசிய ட்ரம்ப், ”அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் பனாமா கால்வாய், எங்கள் நாட்டின் தேசியச் சொத்து. அமெரிக்காவின் வர்த்தகம், கடற்படை விரிவாக செல்லுவதற்கும், அமெரிக்க துறைமுகங்களுக்கு பொருட்களை விரைவாகக் கொண்டு செல்வதற்கும் இக்கால்வாயின் பங்கு மிகவும் முக்கியமானது. இக்கால்வாயை அதிகம் பயன்படுத்தும் நாடு அமெரிக்கா. அமெரிக்கக் கப்பல்கள், கடற்படைக்கு பனாமா வசூலிக்கும் வரி அதிகமானது. இதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் அக்கால்வாயைத் திரும்பக் கேட்போம். எவ்வித கேள்வியும் இன்றி எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றிய பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோ, ”பனாமா கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் தங்களுடையது. மற்றொரு நாட்டின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன் என்பது வரலாற்றில் மிகவும் புதுமையான ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் சொல்லும் காரணம்..
பனாமா கால்வாயின் இரண்டு துறைமுகங்கள் ஹாங்காங் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இதனால், பனாமா கால்வாய் மீதான சீனாவின் கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது என்பது ட்ரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல என்றும் தவறானவர்களின் கைக்குச் சென்றுவிட்டது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
பனாமா அதிபர் விளக்கம்!
எனினும் பனாமா கால்வாய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை என பனாமா அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.
அதேநேரத்தில், பனாமா அரசு, தைவானுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டு சீனாவுடன் கைகோர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது. காரணம், தைவான் சீனாவின் எதிரி நாடாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்தே பனாமாவில் பெரும் முதலீடுகளை சீனா செய்திருப்பதுடன், அதன் ஒரு நட்பு நாடாகவும் வலம் வருகிறது.
பனாமா கால்வாய் பின்னணி!
வடக்கு மற்றும் தென் அமெரிக்காவுக்கு இடையே அட்லாண்டிக் கடலையும், பசுபிக் கடலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது பனாமா கால்வாய். சுமார் 82 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் கால்வாயை, அமெரிக்கா கடந்த 1914இல் வடிவமைத்தது. தற்போது இந்தக் கால்வாய் திறக்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகின்றன. பிறகு, 1999 டிசம்பர் 31 அன்று பனாமா நாட்டிடம் ஒப்படைத்தது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 14,000 கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. கார்களை ஏற்றிச்செல்லும் கொள்கலன் கப்பல்கள், எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றைக் கொண்டுசெல்லும் கப்பல்களும் இதில் அடங்கும். ஆண்டுக்கு சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம், இந்தப் பாதை வழியாக மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக இந்திய மதிப்பில் ரூ. 8,500 கோடிவரை போக்குவரத்துக் கட்டணமாக பனாமா வசூலித்து வருகிறது. இதில், அமெரிக்காவின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன. இதற்காக பனாமா பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் வசூலிக்கிறது என்பதுதான் டொனால்டு ட்ரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது.