நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், அரசு நிர்வாகம் ராணுவத்தின் வசம் சென்றுள்ளது.
நேபாளத்தில் செயல்படும் சமூக ஊடகத் தளங்கள், நாட்டிற்குள் பதிவு செய்யுமாறு அரசாங்கம் பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், உரிமம் பெறாமலேயே சில தளங்கள் செயல்பட்டு வந்தன. இதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், இதை உறுதி செய்யவும் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, நேபாளத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்துச் சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டுமென அந்நாட்டு அரசு வலியுறுத்தியது. மேலும், அதற்காக 7 நாட்கள் கெடு விதித்திருந்தது. இதில், ஒருசில வலைதளங்களைத் தவிர பிற சமூக ஊடகங்கள் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, அவைகளுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
இது, அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பொதுமக்கள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தத் தடையால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைய முயன்றதால், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இளைஞர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தால், நிலைமை கட்டுக்கடங்காமல் மாறியது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மக்களின் போராட்டம் கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், நேபாள தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்கிவிட்டதாக அறிவித்தார். மேலும், இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று, சமூக ஊடகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டங்களை நிறுத்தும்படி இளைஞர்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார். எனினும், போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ந்து நேபாளத்தில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுத்த நிலையில், பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு விமான நிலையத்திற்குத் தப்பிச் சென்ற கே.பி.சர்மா ஒலி, வேறொரு நாட்டில் தஞ்சமடையலாம் எனவும் கூறப்படுகிறது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி தார்மீக அடிப்படையில், தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் தனது பதவியை ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், நேபாளத்தில் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால், பதற்றம் நிலவியது. நாடெங்கும் வன்முறை தாண்டவமாடும் நிலையில், பல்வேறு அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே, போராட்டத்தைத் தடுக்கும் வகையில் அந்த நாட்டு ராணுவம் உள்ளே களமிறங்கியது. அதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை விரட்டியடித்து நேபாளத்தில் ஆட்சி நிர்வாகம் ராணுவத்திடம் சென்றுள்ளது. ராணுவத் தளபதி அசோக் ராஜ் சிக்டேல் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே பொதுச் சொத்துகள் சேதம் அடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை பேண வேண்டும் எனவும் அசோக் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், காத்மாண்டு மேயர் பாலேன் ஷா, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்று கூறியுள்ளார். நேபாள ராணுவத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்குமாறு போராட்டக்காரர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்பதையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது.காத்மாண்டு மேயர் பாலேன் ஷா
நேபாள வன்முறையில், டல்லு பகுதியில் வசித்த முன்னாள் பிரதமர் ஜலநாத் கானல் வீட்டையும் போராட்டக்காரர்கள் நேற்று தீ வைத்து கொளுத்தினர். இதில் வீட்டிலிருந்த ஜலநாத்தின் மனைவி ரபி லட்சுமி சித்ரகர் உடலில் தீப்பற்றி படுகாயமடைந்தார். போராட்டக்காரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வீட்டில் அடைத்து தீ வைத்து எரித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரபி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் அவரது மனைவியும் வெளியுறவு அமைச்சருமான அர்சு ராணா தியூபா ஆகியோரின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இதேபோல, நிதி அமைச்சர் பிஷ்ணு பவுடலை போராட்டக் கும்பல் ஒன்று தெருவில் ஓடஓட விரட்டி அடித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.
காத்மாண்டுவில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர சொத்தாக இருக்கும் ஹில்டன் ஹோட்டலையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். அதில், நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தியூபாவின் மகன் ஜெய்பீர் ஹோட்டலில் பெரும் பங்கு வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. லலித்பூரில் உள்ள குமல்தாரில் உள்ள வெளியுறவு அமைச்சர் அர்சு ராணாவுக்குச் சொந்தமான உல்லன்ஸ் பள்ளியையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது தவிர, சிங்கா தர்பார், மத்திய நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், பல மாவட்ட நீதிமன்றங்கள், அட்டர்னி ஜெனரல் அலுவலகம், நில வருவாய் அலுவலகங்கள் மற்றும் மூத்த அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை.
நேபாளத்தில் போராட்டங்கள் பெரும் சிறை உடைப்புகளுக்கு வழிவகுத்ததால், போக்ரா மற்றும் காத்மாண்டுவில் குழப்பம் வெடித்தது. போக்ராவில், போராட்டக்காரர்கள் உள்ளூர் சிறைக்குள் நுழைந்ததால், சுமார் 900 கைதிகள் தப்பியோடினர். அதேபோல், காத்மாண்டுவில் உள்ள நகு சிறையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறைச்சாலையின் சில பகுதிகளுக்கு தீ வைத்தனர். அங்கிருந்த அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் முன்னாள் உள்துறை அமைச்சர் ரவி லாமிச்சானேவும் ஒருவர். அவர், அவரது ஆதரவாளர்களால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேபாளம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் காத்மாண்டுவிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து புறப்படுவதற்கும் உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகளுக்கான மறு அட்டவணை கட்டணத்தில் ஏர் இந்தியா ஒருமுறை விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 9 வரை வழங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த விலக்கு செப்டம்பர் 11 வரை பொருந்தும் என அது தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 24/7 தொடர்பு மையத்தை 011-69329333 / 011-69329999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அது அறிவுறுத்தியுள்ளது.
நேபாளத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்இந்திய அரசு
நேபாளத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய குடிமக்கள் தங்கள் தற்போதைய வசிப்பிடங்களில் தங்கியிருக்கவும் அது வலியுறுத்தியுள்ளது. மறுபுறம், நேபாளத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதிகள் மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேபாளத்தில் நடந்த வன்முறை மனதைப் பிளக்க வைக்கிறது. பல இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.பிரதமர் மோடி
இதற்கிடையே நேபாள வன்முறை குறித்து பிரதமர் மோடி, “நேபாளத்தில் நடந்த வன்முறை மனதைப் பிளக்க வைக்கிறது. பல இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். நேபாளத்தில் உள்ள எனது அனைத்து சகோதர சகோதரிகளும் அமைதியை ஆதரிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காவும், நல்ல தலைவரை விரும்புவதற்காகவுமே இந்தப் போராட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அது, சமூக ஊடகத் தடை மூலம் எழுச்சி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேபாளத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 20.83 சதவீதமாக உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒலி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்களுக்குத் திருப்திகரமாக இல்லை. வேலையில்லாத காரணத்தால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு கூலிப்படைகளாகச் செல்லும் நிலைக்கு நேபாள இளைஞர்கள் சிலர் தள்ளப்பட்டுள்ளனர்.
உலக வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு இளைஞர்களின் வேலையின்மை 20% ஆக இருந்த நிலையில், மத்திய கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவில் வேலை தேடி ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக அரசாங்கம் மதிப்பிடுகிறது. அதேசமயம், அரசியல் தலைவர்களின் வாரிசுகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் குவிப்பதாகவும், ஊழல் மலிந்து கிடப்பதாகவும் சமூக ஊடகங்களில் சமீபகாலமாகச் செய்திகள் பரவுகின்றன. ஜென் இசட் மற்றும் ’நெப்போ கிட்ஸ்’ எனப்படும் அமைப்புகள் பல புகைப்பட ஆதாரங்களுடன் வாரிசுகளின் சொகுசு வாழ்க்கையை சமூக ஊடகங்கள் மூலம் நிரூபித்ததைத் தொடர்ந்து இளைஞர்கள் கோபத்திற்கு ஆளாகினர்.
நேபாளத்தில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிலர் கே.பி.சர்மா ஒலி சீனாவுக்கு ஆதரவானவர் என்றும், பங்களாதேஷைப் போலவே அமெரிக்காவும் இதில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். மறுபுறம், அமெரிக்கா எம்சிசி மூலம் முதலீடு செய்வதால் சீனா இந்தப் போராட்டங்களை ஊக்குவிப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். சிலர் ஜெனரல் Z இன் இயக்கத்தை இந்தியாவுக்கு ஆதரவானதாகக் கருதப்படும் முடியாட்சி ஆதரவாளர்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள்.
போராட்டங்களின் முன்னணியில் 36 வயதான சூடான் குருங் உள்ளார். இவர் இளைஞர்களால் வழிநடத்தப்படும் ஹாமி நேபாளத்தின் தலைவர் ஆவார். இது ஒரு குடிமை இயக்கமாக வளர்ந்துள்ளது. 2015 பூகம்பத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இளைஞர் அரசு சாரா நிறுவனத்தின் தலைவராக அவர் மாறினார். சூடான் பூகம்பத்தின்போது அவர், தனது குழந்தையை இழந்தார். இந்த நிகழ்வு அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒருகாலத்தில் நிகழ்வு அமைப்பாளராக இருந்த அவர், பேரிடர் நிவாரணம் மற்றும் குடிமைப் பணிகளுக்கு தன்னை மாற்றிக்கொண்டார். பிபி கொய்ராலா சுகாதார அறிவியல் நிறுவனத்தில் வெளிப்படைத் தன்மைக்காக தரனின் ’கோபா முகாம்’ போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். டிஜிட்டல் யுக விரக்தியை கட்டமைக்கப்பட்ட, அமைதியான நடவடிக்கையாக மாற்றும் அமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்த நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி, சமூக ஊடகத் தளங்கள் மீதான அரசாங்கத் தடையை உடனடியாக நீக்கக் கோரி அவர், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்களில் பலர் பள்ளி மாணவர்கள் எனக் கூறப்படுகிறது.
பதவியை ராஜினாமா செய்துள்ள கே.பி.சர்மா ஒலி, சீனாவின் ஆதரவாளர் என அறியப்படுகிறார். அவரின் 11 மாத ஆட்சியில் இந்தியா, நேபாளத்தின் உறவுகள் விரிசல் அடைந்தன. நேபாளத்தின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக அவர் பகிரங்கமாக விமர்சித்தார். 2018இல் 2வது முறையாக அவர் பதவியேற்றபோது லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளைக் கொண்ட புதிய அரசியல் வரைபடத்தை நேபாள நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரித்த பின்னர், இந்தியாவின் கோபத்திற்கு ஆளானார். இறுதியாக 2024 ஜூலையில் 4வது முறையாக பிரதமரமான ஒலி, அடுத்த மாதம் இந்தியா வர இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமராகி ஒரு வருடத்திற்கும் மேலாகியும், அவர் இந்தியாவுக்கு வருகை தரவில்லை. பிரதமரான பிறகு, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்குச் சீனாவை ஒலி தேர்ந்தெடுத்தார். இது பேசுபொருளானது. வழக்கமாக நேபாளப் பிரதமர் முதலில் இந்தியாவுக்குச் செல்வார். இது, சீனாவை நோக்கி ஒலி சாய்ந்திருப்பதைக் காட்டியது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதற்கு முன்பு, கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை, சாமான்ய மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் பாதித்தது.
இதையடுத்து ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். இது, தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். அதேபோல், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, கடந்த ஆண்டு இறுதியில் தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது. அத்துடன், அல் அசாத் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார்.
இந்த நிலையில், நேபாளின் அடுத்த பிரதமராக காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அவர் ஜெனரல் இசட் போராட்டக்காரர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தார்.
’பாலேன்’ என்று மக்களிடையே பிரபலமாக அறியப்படும் பாலேந்திர ஷா, காத்மாண்டுவின் மேயராக உள்ளார். 1990ஆம் ஆண்டு பிறந்த பாலேன் ஷா, மைதில் வம்சாவளியைச் சேர்ந்த மாதேசி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹிமாலயன் வைட்ஹவுஸ் சர்வதேசக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் (BE) பெற்ற அவர், அதன் பிறகு, கட்டமைப்பு பொறியியலில் MTech பட்டம் பெற கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பாலேந்திர ஷா சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். இதையே தனது முதல் தனிப்பாடலான ’சதக் பாலக்’கை 2012ஆம் ஆண்டு வெளியிட்டு தனது தொழிலாக மாற்றினார். ஒன்பதாம் வகுப்பில் அவர் எழுதிய பாடல் இது. அரசியலில் சேருவதற்கு முன்பு, பாலேன் ஷா ஒரு ராப்பர் மற்றும் பாடலாசிரியராக நேபாளத்தின் ஹிப்-ஹாப் அரங்கில் பிரபலமான பெயராக இருந்தார். மேலும் நேபாளத்தில் ஊழல் மற்றும் சமத்துவமின்மை பற்றிய பிரச்னைகளை எழுப்பும் பாடல்களுக்காக அறியப்பட்டார். 2022ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடந்த மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, 61,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நிறுவப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த அனுபவமுள்ள அரசியல்வாதிகளைத் தோற்கடித்து அவர் வரலாற்றைப் படைத்தார். கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, நேபாள இளைஞர்கள் இப்போது பிரதமராக 'பலேன் டாய்' பக்கம் திரும்பியுள்ளனர்.