இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்ட அரசியல் புரட்சிகள்.. நாட்டைவிட்டு தப்பிய தலைவர்கள்
2022இல் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார சீரழிவு அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடங்கிவைத்தது. விலைவாசி பன்மடங்காகி அத்தியாவசிய பொருட்கள் எட்டாக்கனியான நிலையில் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். மக்கள் போராட்டம் காட்டுத்தீ போல் பரவி அதிபர் மாளிகையையே சூறையாடும் அளவுக்கு சென்றது. அதிபர் மாளிகையின் நீச்சல் குளத்தில் நீராடி கோபத்தீயை தணித்துக் கொண்டனர் மக்கள். அதிபர் கோட்டாபய ராஜபக்ச, மனைவியுடன் சிங்கப்பூர், தாய்லாந்தில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. மக்கள் எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் ராஜிநாமா செய்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச.
2024இல் வங்கதேசத்தில் ஆகஸ்ட் புரட்சி வெடித்தது. அப்போதைய பிரதமர் ஷேக் ஹசினா அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக மாணவர் புரட்சி வெடித்தது. கொந்தளிப்புடன் போராட்டக்களம் கண்டனர் இளைஞர்கள். வன்முறைகளில் சுமார் 300 பேர் இறந்தனர். போராட்டத்தை அடக்க முழு பலத்துடன் படைகளை ஏவினார் பிரதமர் ஹசினா. ஆனால் அவரது திட்டங்கள் அவருக்கே எதிராக திரும்பியது. பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் உள்ளே இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அவர் பயன்படுத்திய பொருட்களை தங்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். இதற்கு சற்றுமுன்பாக ஹசினா தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு தப்பினார்.
2022 ஜூலையில் இலங்கையிலும் 2024 ஆகஸ்டில் வங்கதேசத்திலும் நடந்தது 2025 செப்டம்பரில் நேபாளத்தில் அரங்கேறியுள்ளது. லஞ்ச ஊழல், பொருளாதார சீரழிவு காரணங்களால் வெகுண்டெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி முழங்கத் தொடங்கினர். அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்றும் ஏழைபாழைகள் வயிற்றுப்பசி தீர்க்க வழியில்லாமல் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவியது. இதன் விளைவாக ஆட்சியாளர்களுக்கு எதிரான தீ தகிக்கத் தொடங்கியது. இறுதியில் பிரதமர் கே.பி,சர்மா ஒலி ராஜிநாமா செய்தார்.
இந்த 3 நாடுகளிலுமே ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததும் இதன் விளைவாக மூன்றிலுமே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த 3 நாடுகளுமே இந்தியாவின் அண்டை நாடுகளாக அமைந்ததும் கவனம் ஈர்க்கும் ஓர் ஒற்றுமை