நேபாளம் | போராட்டத்திற்கு பின்னே இந்தியாவும் அமெரிக்காவும்? நெபோகிட் போராட்டத்தின் விரிவான பின்ணி..
நேபாளத்தில் ஆட்சியாளர்களை நடுங்கச் செய்துள்ள சமூக வலைதள பதிவாளர்களான Nepo kids அமைப்பினர், Gen Z புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். இமய வரம்பில் இருக்கும் நேபாள தேசத்தில் தற்போது என்னதான் நடக்கிறது. Nepo kids சமூக வலைதள பதிவாளர்கள் யார்? வங்கதேசம் போன்று Gen z புரட்சியும் ஆட்சியை அகற்றும் வல்லமை பெற்றதா? விரிவாக பார்க்கலாம்.
செய்தியாளர் பால வெற்றிவேல்
உலகில் உள்ள அனைத்து ஜனநாயக தேசத்தை போன்று நேபாளத்திலும், சமூக வலைதளங்களின் பயன்பாடு அரசு அதிகாரத்திற்கு தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் இருந்து வந்துள்ளது. சொல்லப்போனால் நேபாள மக்கள் யாவரும் ஜனநாயக சுவாசத்தை அனுபவித்து 20 வருடங்கள் கூட ஆகவில்லை. 2001 ஆம் ஆண்டில் நேபாள அரச குடும்பத்தில் நடந்தகொலைதான் 2008ல் நேபாளத்தை ஜனநாயக பாதையில் மாற்றி அமைத்தது. அதுவரை முடியாட்சி தேசமாக இருந்த நேபாளம் குடி ஆட்சியை நோக்கி நகரத் தொடங்கியது.
இந்துக்கள் அதிகமாக உள்ள தேசம். கம்யூனிச சித்தாந்தமும், கூர்கா கலாச்சார பெருமிதமும் இரு கண்களாக கொண்ட ஜனநாயக நேபாளத்தில் ஆட்சி நடத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனால்தான் கடந்த 18 வருடங்களில் பத்து பிரதமர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். அதில் நான்கு வருடம் மாவோயிஸ்ட் ஆட்சி நடந்துள்ளது. அதோடு சேர்ந்து அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனாவின் தலையீடு நேபாள அரசியலில் எப்போதும் அழுத்தத்தை ஏற்படுத்துபவையாக இருக்கிறது.
தற்போது பிரதமராக இருக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான கே.பி ஷர்மா ஓலி, கடந்த பத்து வருடங்களில் மூன்று முறை ஆட்சிக்கு வந்துள்ளார். இவர் ஆட்சி நிலையில்லாமல் இருப்பதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று இவரின் நிர்வாகத்தின் மீதான அதிகப்படியான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இவருக்கும் சீனாவிற்கும் இருக்கக்கூடிய உறவு. இத்தகைய சூழலில்தான் ஆட்சி செய்வதற்கு எதிராக செயல்படுவது சமூக வலைதளங்கள் என்பதை புரிந்து கொண்டார் ஓலி.
இந்நிலையில்தான், கடந்த கூட்டணி ஆட்சியின் போது சமூக வலைதள பயன்பாட்டை மேலாண்மை செய்வதற்கான வழிமுறைகள், 2023 என்ற சட்டத்தின் கீழ், அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தளங்களும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் (MoCIT) பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், Meta-வின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், Alphabet-ன் யூடியூப், எக்ஸ் தளம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏழு நாள் காலக்கெடுவை புறக்கணித்துவிட்டன. அதனால், “ஏற்கனவே பதிவு செய்த 5 தளங்களும், பதிவு செய்யும் நிலையில் உள்ள 2 தளங்களும் தவிர, அனைத்தும் சமூக வலைதளங்களையும் நேபாள அரசு தடை செய்தது. ஓலி அரசு சமூக வலைதளங்களை தடை செய்யும் அளவிற்கு நிலையை ஏற்படுத்தியது நேபாளத்தில் இருக்கும் 35 வயது உட்பட்ட இளைஞர்கள்தான்.
"நெபோ கிட்” என்ற ஆன்லைன் இயக்கம் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பயன்படுத்தும் வெளிநாட்டு கார்கள், பண்ணை வீடுகள், சொகுசான வாழ்க்கை வாழ்வதை அம்பலப்படுத்தியது. “நெபோ கிட்ஸ் இன்ஸ்டாகிராமிலும் டிக்-டாக்கிலும் இதை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேறு நாடுகளுக்கு குடிபெயரும் நேபாள மக்கள் படும் இன்னல்களுக்கு நடுவே அரசியல்வாதிகளுக்கு மக்கள் குறித்தான எந்தவித கவலையும் இல்லை என்கிற நோக்கத்தோடு "நெபோ கிட்” சமூக வலைதள பக்கம் செயல்பட்டது.
இதனால் "நெபோ கிட்” சமூக வலைதள பக்கத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. நெபோ கிட் சமூக வலைதள பக்கத்தை நேபாள அரசு இதற்கு முன் பலமுறை தடை செய்திருந்தாலும் அதன் செயல்பாடுகள் பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதள பக்கத்தில் எதிரொலித்தது. இந்நிலையில்தான் மொத்த சமூக வலைதளத்தையும் தணிக்கை செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் அனைத்து சமூக வலைதள பக்கங்களும் நேபாளத்தில் தடை செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தனது குழந்தையை இழந்து அதனால் சமூகப் பணிக்கு திரும்பிய 36 வயது இளைஞரான சுதன் குருங் நெபோ கிட் அமைப்பில் முக்கிய முகமாக இருந்தார். செப்டம்பர் 8ம் தேதி சமூக வலைதள பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இவரது தலைமையில் நியூ பனேஷ்வரில் அமைதியாக தொடங்கிய பேரணி, மதியத்திற்குள் போலீஸ் தடுப்புகளை உடைத்துச் சென்று பாராளுமன்ற வளாகத்தை கைப்பற்றியது.
பின்னர் பாலுவட்டர், சிங்கதர்பார், ஷீதல் நிவாஸ், பிரதமர் ஒலியின் சொந்த ஊரான தமாக் ஆகிய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் ஒலியின் வீட்டில் கற்களை எறிந்ததால் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினருக்கும், Gen Z அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலால் இதுவரை 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதோடு "அமைதியான போராட்ட உரிமை அரசியலமைப்பிலும் சர்வதேச சட்டத்திலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளின் அதிகப்படியான வன்முறை வருத்தத்துக்குரியது” என நேபாள அரசுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இளைஞர்கள் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, “அரசின் நோக்கம் சமூக வலைதளங்களை தடை செய்வது அல்ல, ஒழுங்குபடுத்தல் மட்டுமே” என்று விளக்கினார்.
பாலுவட்டரில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, சமூக வலைத்தளத் தடையை நீக்கும் செயல்முறையும் தொடங்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததால், பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நமது அண்டை நாடான வங்கதேசத்தில் இளைஞர்களின் போராட்டத்தால் ஆட்சி அகற்றப்பட்ட நிலையில் அதேபோன்று நிலை மீண்டும் நேபாளத்தில் ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவுகிறது. அதே நேரத்தில் இளைஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு பின்னால் இந்தியாவும் அமெரிக்காவும் இருக்கிறது என்கின்ற செய்தி தலைப்புகளாக இன்று நேபாள நாளிதழ்களில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.