trump, modi meta ai
உலகம்

மேலும் 25 % வரி.. இந்தியா மீது இறங்கிய இடி.. சொன்னபடி 24 மணி நேரத்தில் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கு 25% வரியுடன், கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.

Prakash J

இந்தியாவிற்கு 25% வரிவிதித்த அமெரிக்கா

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு பிறகு இந்த வரிவிதிப்பு அமலுக்கு வர இருக்கிறது. ‘’அமெரிக்காவுக்கான வரி அதிகளவில் இருப்பதாலும், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதாலுமே இத்தகைய வரி விதிப்பு’’ என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்தும் அமெரிக்கா விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ”உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா மறைமுகமாக நிதியுதவி அளித்து வருகிறது” எனக் காட்டமாக விமர்சித்திருந்தது. மேலும், ”ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும்” என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

modi, trump

இருப்பினும், ’தேச நலனைக் கருத்தில் கொண்டே வர்த்தக விஷயங்களில் முடிவெடுக்கப்படும்’ என இந்தியா பதிலளித்திருந்தது. மேலும், ”இந்தியாவின் இறக்குமதிகள் உலகளாவிய சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு தேவை என்றாலும், அதை விமர்சிக்கும் நாடுகள் அத்தகைய வர்த்தகம் ஒரு முக்கிய கட்டாயம்கூட இல்லாதபோதும் தாங்களாகவே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் எச்சரித்த அதிபர் ட்ரம்ப்

இதற்கிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெகுவாக அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அவர் சொன்னதுபோலவே, இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்துள்ளார். ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்ட வரி மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப வரி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் அதேவேளையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

trump, modi

இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிப்பு

இந்தியாவுக்கு தற்போது 50% வரி விதிக்கப்பட்டிருப்பதால், அது பிரேசிலுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் மிகமிக அதிகமாக 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. 2வது இடத்தில் சிரியா 41% வரியுடனும், 3வது இடத்தில் லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் தலா 40% வரியுடனும், 4வது இடத்தில் ஸ்விட்சர்லாந்து 39% வரியுடனும் 5வது இடத்தில் கனடா, செர்பியா, ஈராக் ஆகிய நாடுகள் 35% வரியுடனும் உள்ளன. சீனாவுக்குக்கூட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், அது இன்றுவரை இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையேதான் ட்ரம்ப் வரிவிதிப்பையும் கூடுதல் வரிவிதிப்பையும் அமல்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கும் ட்ரம்புக்கும் என்ன பிரச்னை?

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே பொதுவில் நல்லுறவு நிலவியபோதிலும், சமீபத்திய வாரங்களில் அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா சற்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மே 10 அன்று சமூக ஊடகங்களில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காக ட்ரம்ப் பலமுறை பெருமை சேர்த்துள்ளார். ஆனால் அவரது கூற்றை இந்தியா மறுக்கிறது. அடுத்து, இந்தியப் பொருளாதாரம் மூழ்கிவிட்டதாக அறிவித்ததன் மூலம், ட்ரம்ப் மோடியையும் அவரது கட்சியையும் சிக்கலில் சிக்க வைத்துள்ளார்.

modi, trump

தவிர, சமீபகாலமாக அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவதாலும் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அதேநேரத்தில், ட்ரம்ப் இப்படி இந்தியாவை மிரட்டுவதற்குக் காரணம், அதிக அமெரிக்க எண்ணெய் மற்றும் எல்என்ஜி வாங்கத் தொடங்கினால், அது அமெரிக்க எரிசக்தி செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும்.

இந்தியா மீதான அமெரிக்க அரசின் வரி விதிப்பு நியாயமற்றது என்று அதிபர் டொனால்டு ட்ரம்பின் அறிவிப்புக்கு மத்திய அரசு எதிர்வினை ஆற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்கதக்கதல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது.