இந்தியாவுக்கு 25% வரி.. பாகிஸ்தானுடன் எண்ணெய் ஒப்பந்தம்.. ட்ரம்ப் போட்ட மெகா கணக்கு இதுதான்!
இந்தியாவுக்கு 25% வரி.. பாகிஸ்தானுடன் ஒப்பந்தம்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் பதில் வரி விதிக்கப்படும் என ஏற்கெனவே அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய வரிவிதிப்பு நாளை முதல் (ஆக.1) அமல்படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. ‘’அமெரிக்காவுக்கான வரி அதிகளவில் இருப்பதாலும், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதாலுமே இத்தகைய வரி விதிப்பு’’ என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் கச்சா எண்ணெய் வளம் பூமிக்கடியில் ஏராளமாக உள்ளதாகவும் அதை எடுக்க அமெரிக்கா உதவும் என்றும் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான பணியை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனத்தை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பாகிஸ்தான் கச்சா எண்ணெய் விற்கும் நிலை ஒருநாள் வரக்கூடும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் மற்றும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப் இடையே வாஷிங்டனில் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி தங்கள் நாட்டு கட்டமைப்புத் திட்டங்களில் அமெரிக்கா அதிகளவில் முதலீடு செய்யும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க செய்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அந்நாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரு நாட்டு ஒத்துழைப்பு இன்னும் மேம்படும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ஷெரிஃப் தன் சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மையில் பாகிஸ்தானில் கச்சா எண்ணெய் இருக்கிறதா?
பாகிஸ்தான் நீண்டகாலமாக தனது கடற்கரையில் பெரிய எண்ணெய் வைப்புகளைக் கொண்டிருப்பதாக கூறி வருகிறது. ஆனால், அந்த வைப்புகளைப் பயன்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாகிஸ்தானில் ஷேல் எண்ணெய் பிரித்தெடுத்தல் இன்னும் உருவாக்கப்படவில்லை, இருப்பினும் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் 2015ஆம் ஆண்டு ஆய்வில், பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியாக மீட்டெடுக்கக்கூடிய ஷேல் எண்ணெய் வளம் 9.1 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருப்புகளைப் பயன்படுத்தி, முதலீடுகளை ஈர்க்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதன் விளைவே இந்த அமெரிக்க ஒப்பந்தம் எனக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம், பரந்த இராஜதந்திர அம்சங்களைக் கொண்டுள்ளது.
240 மில்லியன் மக்களைக் கொண்ட அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானை, சீனாவைச் சார்ந்திருப்பதிலிருந்து விலக்க அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. மறுபுறம், பாகிஸ்தானே தற்போது தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானின் மிகப்பெரிய இறக்குமதிப் பொருளான எண்ணெய், ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த ஆண்டில் 11.3 பில்லியன் டாலர் ஆகும். இது, அதன் மொத்த இறக்குமதி செலவில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகும் என்று மத்திய வங்கி தரவுகள் குறிப்பிடுகின்றன. தற்போதைய தகவல்கள்படி, 234 மில்லியன் முதல் 353 மில்லியன் பீப்பாய்கள் வரை, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதி்ல் அது உலகில் 50வது இடத்தில் உள்ளது.