25% வரி | ரஷ்யாவுடன் இணைத்து விமர்சித்த ட்ரம்ப்.. இந்தியாவில் இந்த துறைகளெல்லாம் பாதிக்கும்!
சர்ச்சைக்குரிய வகையில் இந்தியாவை விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் பதில் வரி விதிக்கப்படும் என ஏற்கெனவே அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய வரிவிதிப்பு நாளை முதல் (ஆக.1) அமல்படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. ‘’அமெரிக்காவுக்கான வரி அதிகளவில் இருப்பதாலும், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதாலுமே இத்தகைய வரி விதிப்பு’’ என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர், “இந்தியாவும் ரஷ்யாவும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை; அவர்கள் இருவரும் இணைந்து தங்கள் இறந்துபோன பொருளாதாரங்களை ஒன்றாக இழுத்துச் செல்லலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து உதிர்த்துவரும் ட்ரம்ப் இந்தியாவையும் ரஷ்யாவையும் இவ்வளவு காட்டமாக விமர்சித்திருப்பது சர்வதேச அரசியல் களத்தில் அதிர்விலைகளை ஏற்படுத்தியுள்ளது. ”உலகில் மிக அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா; அதனால்தான் நாங்கள் இந்தியாவுடன் குறைவாக வணிகம் செய்கிறோம்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ”அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து எந்த வணிகமும் செய்வதில்ல” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்
இந்தியாவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் துறைகள்
அதேநேரத்தில், ட்ரம்பின் இந்த வரி நடவடிக்கையால் ஸ்மார்ட்போன்கள், ஜவுளி, வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் நகைகள் போன்ற முக்கியத் துறைகளில் அமெரிக்க நுகர்வோருக்கு விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அமெரிக்கா விதித்துள்ள 25% வரியால் இந்தியாவில் குறிப்பிட்ட சில துறைகள் பெரிய பாதிப்புகளை சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது.
1. ஆடை உற்பத்தி துறை
இந்தியாவில் மிக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் தொழில்களில் ஆடை உற்பத்தியும் ஒன்று. உள்நாட்டு தேவை தவிர வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஆடைகள் அனுப்புவதே இத்தொழிலின் பெரும் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் 10.8 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவுக்கு மட்டுமே செல்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியான 38 பில்லியன் டாலரில் 28.5% ஆகும்.
2. ஸ்மார்ட் போன்கள்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஸ்மார்ட்போன்கள் மதிப்பு 24.1 பில்லியன் டாலராக உள்ளது. இது ஒட்டுமொத்த ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதியில் 55% ஆகும்.
3. மருந்துப் பொருட்கள்
மருந்து பொருட்கள் ஏற்றுமதி 8.7 பில்லியன் டாலரிலிருந்து 10.9 பில்லியன் டாலர்கள் வரை உள்ளது. இது ஒட்டுமொத்த மருந்து ஏற்றுமதியில் 31 முதல் 35% பங்கு ஆகும்.
4. கடல் உணவுப்பொருட்கள்
இந்தியாவின் இறால் போன்ற கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி 7.2 பில்லியன் டாலராக உள்ளது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் 2.4 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியாகின்றன.
5. வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி
அமெரிக்காவுக்கான வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி 2.2 பில்லியன் டாலராக உள்ளது. இது ஒட்டுமொத்த ஏற்றுமதியான 21.2 பில்லியன் டாலரில் சுமார் 10% ஆகும்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இத்துறைகள்தான் அதிகம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. இதற்கேற்ப இத்துறை பங்குகள் பங்குச்சந்தையில் கணிசமான விலை குறைந்து விற்பனையாகின.