ஆக. 1 முதல் இந்தியாவிற்கு 25% வரி.. ட்ரம்பின் அதிரடியால் அமெரிக்கர்களுக்கு பாதிப்பு!
ஆகஸ்ட் 1 முதல் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் பதில் வரி விதிக்கப்படும் என ஏற்கெனவே அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பிய யூனியன், இந்தோனோசியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் சமரசம் நடத்தி, தனித்தனியாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. சீனாவுடன்கூட, அமெரிக்கா கடந்த மே மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
அதேநேரத்தில், இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் எட்டவில்லை. இதற்கிடையே ட்ரம்ப் கொடுத்த காலக்கெடு நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. இதையடுத்து இந்தியாவுக்கும் பதில் வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 1 முதல் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
25% வரி ஏன்? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நினைவில் கொள்ளுங்கள், இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும்... பல ஆண்டுகளாக, நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வணிகத்தைச் செய்துள்ளோம். ஏனெனில், அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே மிக உயர்ந்தவை. மேலும், அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான மற்றும் அருவருப்பான பணமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் எப்போதும் தங்கள் இராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிலிருந்தே வாங்கியுள்ளனர். தவிர, ரஷ்யாவின் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வாங்குபவராகவும் உள்ளனர். ஆகையால், உக்ரைனில் நடைபெறும் போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் இந்த நேரத்தில், ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25 சதவீத வரியையும், மேற்கூறியவற்றுக்கான அபராதத்தையும் செலுத்த வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!
ட்ரம்பின் இந்த நடவடிக்கை ஸ்மார்ட்போன்கள், ஜவுளி, வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் நகைகள் போன்ற முக்கியத் துறைகளில் அமெரிக்க நுகர்வோருக்கு விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க நுகர்வோருக்கு, அத்தகைய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படுவது தவிர்க்க முடியாமல் விலையை அதிகரிக்கும். இருப்பினும் இந்த நடவடிக்கை, அமெரிக்க பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அறிக்கையின்படி, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஜெனரிக் மருந்துகளில் கிட்டத்தட்ட 40% இந்தியா இறக்குமதி செய்கிறது. புற்றுநோய், நீரிழிவு, இதயம் மற்றும் தொற்று நோய்களுக்கான முக்கிய மருந்துகள் இதில் அடங்கும். தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்திய ஜெனரிக் மருந்துகளுக்கான வரிகள் அமெரிக்க நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான மருந்துச் செலவுகளை அதிகரிக்கக்கூடும்.
அதேபோல், இந்திய ஆட்டோ உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் இந்தியா 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோ உதிரிப்பாகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இயந்திர பாகங்கள், பிரேக்குகள், கியர் அசெம்பிளிகள் மற்றும் வயரிங் ஹார்னெஸ்கள் அடங்கும். இதன்மூலம், 25% வரி கார் பழுதுபார்க்கும் செலவுகளை அதிகரிக்கக்கூடும் மற்றும் அசெம்பிளி லைன்களை சீர்குலைக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.