trump web
உலகம்

'காகித புலி' நேட்டோ அமெரிக்காவுக்கு தேவையில்லை.. டிரம்ப் கருத்தால் அதிரும் ஐரோப்பா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோவை ஒரு “காகிதப் புலி” என்று கடுமையாகத் தாக்கிப் பேசியதோடு, ஹார்முஸ் விவகாரத்திலிருந்து “விலகி இருக்குமாறு” நேட்டோவிடம் கூறியுள்ளார்.

Praveen Joshva L

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பில் நேட்டோ நாடுகள் ஒத்துழைக்காததைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பை மீண்டும் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்குத் நேட்டோ தேவையில்லை, நேட்டோவுக்குத்தான் அமெரிக்கா தேவைப்படுகிறதென அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் நேட்டோ ராணுவ கூட்டமைப்பை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கினார். இதனால் நேட்டோ அமைப்பில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. நேட்டோவுக்கு அமெரிக்காதான் அதிக பங்களிப்பு வழங்குகிறது என்றும், நேட்டோவுக்கு நிதியைச் சரியாக வழங்காத நாடுகளை ரஷ்யா தாக்கினால், அமெரிக்கா அந்த நாடுகளைப் பாதுகாக்க மாட்டேன் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

trump

இதனிடையே ஈரானுடன் தற்போது நடந்து வரும் மோதலில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனால் அந்த வழியே செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க தங்கள் கடற்படையை அனுப்ப வேண்டும் என உலக நாடுகளுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

ஆனால், இந்த அழைப்பை நேட்டோ நாடுகள் ஏற்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள டிரம்ப் நேட்டோவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் நேட்டோவின் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Strait of Hormuz

அப்போது, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தங்களிடம் உதவி தேவையா என நேட்டோ அமைப்பிடம் இருந்து கேட்கப்பட்டதாகவும், ஆனால், எங்களுக்கு உங்கள் உதவி அவசியமில்லை என்று நான் கூறினேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், எங்களுக்கு தேவைப்பட்ட முக்கிய தருணங்களில் நேட்டோ எந்த பயனும் அளிக்கவில்லை என்று விமர்சித்த அவர், உண்மையில் அமெரிக்காவுக்குத் நேட்டோ தேவையில்லை, நேட்டோவுக்குத்தான் அமெரிக்கா தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நேட்டோ அமைப்பின் பெரும்பாலான செலவு அமெரிக்காவே ஏற்று வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபரின் இந்த கருத்து ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.