’தினம் விடிந்தாலே பதற்றம்.. இப்படி ஒரு உலகில் வாழமுடியாது’ - டிரம்ப்பை விமர்சித்த பிரேசில்!
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்கியதால் போர் பரவியது. பாகிஸ்தான் முயற்சியால் 10 நாள் போர்நிறுத்தம், அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை வாய்ப்பு உருவானது. ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, பின்னர் மீண்டும் மூடப்பட்டது உலகை பதற்றத்தில் ஆழ்த்தியது. இந்த சூழலில், தினமும் உலகை அச்சுறுத்தும் டிரம்ப்புடன் எப்படி வாழ முடியும் என்று பிரேசில் அதிபர் லுலா கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் போராக பரிமாணம் அடைத்தது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முயற்சியால் 10 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதோடு, அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒரு வாய்ப்பு அமைந்தது.
பின்னர், அமெரிக்கா தலையீட்டில் லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முன்வந்துள்ளன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இதற்கு இஸ்ரேலும் ஒப்புதல் அளித்த நிலையில், போர் படிப்படியாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிவித்தார்.
ஆனால் மீண்டும் ஹார்முஸை மூடுவதாக ஈரான் அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஈரான் ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் வெளியேற முடியாமல் அமெரிக்க கடற்படை தடுத்து வருவதாகவும், இதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா (Lula da Silva) அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிபர் ட்ரம்ப் ஒவ்வொரு நாள் காலையில் எழுந்து ஒரு நாட்டை அச்சுறுத்தி வருகிறார். தினமும் உலகை அச்சறுத்தும் ஒரு நாட்டின் அதிபரோடு எப்படி வாழ முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் இது போன்ற செயல்களை செய்வதற்க்கு டிரம்ப்புக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும், அவர் ஏன் போரை கைவிட்டு, அமெரிக்காவிடம் உலகின் மிகப்பெரிய உற்பத்தித் திறன் உள்ளது என்று சொல்லக்கூடாது? அது கேட்பதற்கு நன்றாக இருக்குமே என்று கூறியுள்ளார்.

