world news x page
உலகம்

Top10 உலகம் | மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டம் வென்ற சென்னைப் பெண் To பாகிஸ்தானுக்கு USA பொருளாதாரத் தடை!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. உக்ரைன் தலைநகரைக் குறிவைத்துத் தாக்கிய ரஷ்யா!

உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணை விழுந்ததில் ஏராளமான கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்தன. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஷ்யா 8 முறை ஏவுகணைகளை வீசியதாகவும், அதில் ஏவுகணை, இஸ்கன்டர் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அடங்கும் என உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சேதமடைந்த கட்டடங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிரியா

2. சிரியா: பெண்கள் ஆர்வமுடன் கல்வி கற்க புதிய வழி!

சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் பெண்கள் ஆர்வமுடன் கல்வி கற்பதற்கு புதிய வழியை அமைத்துத் தந்துள்ளது. 40 ஆண்டுகளாக சிரியாவை கட்டுக்குள் வைத்திருந்த பாத் கட்சி, கல்வித்துறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாடுகளை நிராகரித்ததுடன், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளனர். பாத் கட்சியின் ஆட்சியை புகழும் வகையில் இருக்கும் பாடங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படுமென சிரியாவின் புதிய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நசீர் முகமது அல் காத்ரி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பெண்கள் கல்வி பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அவர்களுக்கும் சம அளவில் கல்வி கற்க வழி ஏற்படுத்தப்படுமென கூறியுள்ளார். போரால் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

3. மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தை வென்ற சென்னைப் பெண்!

அமெரிக்கா வாஷிங்டன் நியூ ஜெர்சியில் நடந்த 2024 மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தை சென்னையில் பிறந்த, இந்திய அமெரிக்க இளம்பெண் கேட்லின் சாண்ட்ரா பெற்றுள்ளார். இப்போட்டியின் மூன்று பிரிவுகளில் 25 மாகாணங்களில்இருந்து 47 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 19 வயதான கேட்லின், மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தைப் பெற்றார். சென்னையில் பிறந்த கேட்லின் கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் கேட்லின், மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஜொலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

4. அமெரிக்காவில் அமேசான் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது அமேசான் நிறுவனத்திற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பணிச்சூழல் மேம்பாடு, அதிக ஊதியம் போன்ற ஊழியர்களின் கோரிக்கைகளை அமேசான் நிறுவனம் நிராகரித்ததே இந்த வேலைநிறுத்தத்திற்கு காரணமென கூறப்படுகிறது. நியூயார்க், அட்லாண்டா, சாம் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட 7 அமேசான் மையங்களில் பணியாற்றும்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக அமேசான் நிறுவனத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

5. குரோஷியா பள்ளியில் நுழைந்த இளைஞர் சரமாரி கத்திக்குத்து!

குரோஷியாவின் தலைநகர் சாக்ரெப் அருகே ஓர் இளைஞர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் மற்றும் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6. உக்ரைனுக்கு பிரிட்டன் 286 மில்லியன் டாலர் நிதியுதவி!

ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் 2 ஆண்டுகளைக் கடந்து நடந்துவருகிறது. போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இருதரப்பிலும் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்குச் சென்ற பிரிட்டன் பாதுகாப்புத்துறை செயலர் ஜான் ஹீலே, தொடர்ந்து தமது நாடு ஆதரவளிக்கும் எனத் தெரிவித்ததோடு, அடுத்த ஆண்டு உக்ரைன் ராணுவத்திற்கு 286 மில்லியன் டாலருக்கு நிதியுதவி வழங்க இருப்பதாக அறிவித்தார். இதுகுறித்து அவர், ”உக்ரைனுக்கு பிரிட்டன் தோளோடு தோள் கொடுக்கும். இந்தப் போரில் புடினால் வெற்றி பெற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

7. ஜாகிர் உசேனின் உடல் அமெரிக்காவில் நல்லடக்கம்!

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 73 வயதான அவர் நுரையீரல் பிரச்னை காரணமாக, சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் கடந்த டிச.16ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கத்தில் மனைவி அண்டோனியா உள்ளிட்ட உறவினர்கள் பங்கேற்றனர். தனது தந்தையும், பிரபல இசைக்கலைஞருமான அல்லா ரக்காவிடம் (Alla Rakha) 3 வயதிலேயே தபேலா கற்ற ஜாகீர் உசேன், 11 வயதிலிருந்தே இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 1970-இல் இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றது முதல், சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.

8. அரியவகை நோய்: 19 வயது டிக்டாக் பிரபலம் மரணம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் அரியவகை நோய் தாக்கி மரணமடைந்தார். 19 வயதான டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் மிகவும் அரிதான ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் என்ற மரபணு குறைபாட்டல் ஏற்படக்கூடிய புரோஜீரியா என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் டிசம்பர் 18ஆம் தேதி மரணமடைந்ததாக அவரது தாயார் பி.பூய்சென் முகநூல் தளத்தில் தெரிவித்துள்ளார். டிக்-டாக்கில் பிரபலமான பியென்ரி மொத்தமாக 2,69,200 ஃபாலோவர்களை கொண்டிருந்தார். அவரது இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அவரின் மரணம் டிக்-டாக் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

9. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!

பாகிஸ்தானில் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுதம் கொண்ட நீண்டதூர பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் தொடர்பாக அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தை மேற்பார்வையிடும் அரசுக்கு சொந்தமான தேசிய மேம்பாட்டு நிறுவனம் உட்பட 4 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான், “என்டிசி மற்றும் மூன்று வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையானது துரதிஷ்டவசமானது மற்றும் ஒருதலைப்பட்சமானது” எனத் தெரிவித்துள்ளது.

ஏமன்

10. ஏமனைக் குறிவைத்துத் தாக்கிய இஸ்ரேல் படைகள்!

ஏமனில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். தலைநகர் சனா மற்றும் ஹோடேய்டா மாகாணத்தில் உள்ள செங்கடல் துறைமுக பகுதிகளை குறிவைத்து, இஸ்ரேல் படைகள், போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தாக்குதலில், இரண்டு பிரதான மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் ராணுவ தளங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹவுதி அமைப்பு, இஸ்ரேல் படைகளின் இந்த நடவடிக்கைகளுக்கு அடிபணிந்து, காசாவுக்கான ஆதரவை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளது.