Top10 உலகச் செய்திகள்|போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் பேச விருப்பம்.. இலங்கைக்கு அதிகனமழை எச்சரிக்கை
ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
1. இலங்கைக்கு அதிகனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்சரிவு, கடல்சீற்றம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
2. இத்தாலியில் களைகட்டிய கிறிஸ்துமஸ்
இத்தாலி தலைநகர் ரோமில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீதிகள் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த அலங்காரங்கள் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை எதிரொலிப்பதாக கூறப்படுகிறது. இதை ஏராளமான பார்வையாளர்கள் நாள்தோறும் கண்டுகளித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று 3 கோடி சுற்றுலா பயணிகள் ரோமிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. கொண்டாட்டத்திற்குத் தயாராகும் சீன மக்கள்
சீனாவுடன் மக்காவ் நகரம் இணைந்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளதை வரும் 20ஆம் தேதி சீன மக்கள் கொண்டாட உள்ளனர். 25வது ஆண்டு விழாவை கொண்டாடவும், மக்காவ் நகரத்தின் ஆறாவது தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி சாம் ஹூ ஃபாய் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக மக்காவ் வரவுள்ளார். 450 ஆண்டுகள் போர்ச்சுகல் நாட்டிடம் இருந்த மக்காவ் நகரம், 1999ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமி
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மெடிசன் நகரில் இயங்கி வரும் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்த சிறுமி, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுமியும் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. மயோட்டே தீவிற்கு நிவாரணப் பொருட்கள்
இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் அருகே அமைந்துள்ள மயோட்டே தீவை, ‘சிண்டோ’ என்ற புயல் கடுமையாக தாக்கியது. கனமழையுடன் வீசிய புயலால் மயோட்டே தீவில் ஏராளமான வீடுகள், குடிசைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன. பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள், மரங்கள், சாலைகள், கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கடுமையாகச் சேதமடைந்துள்ளன. புயல் தாக்கிய மயோட்டே தீவிற்குத் தேவையான நிவாரணப் பொருட்களை பிரான்ஸ் அரசு அனுப்பி வருகிறது.
6. கருங்கடலில் புயலில் சிக்கிய எண்ணெய்க் கப்பல்
கருங்கடலில் 14 ஊழியர்களுடன் சென்ற ரஷ்யாவைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பல் ஒன்று புயலில் சிக்கிய நிலையில், அதன் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாக நகர்த்தப்படுகிறது. இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை, புயலில் சிக்கிய கப்பலில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக கெர்ச் ஜலசந்தியில் ஏற்பட்ட கடும் புயலில் சிக்கி 15 ஊழியர்களுடன் சென்ற ரஷ்யாவின் சரக்கு கப்பல் இரண்டாக உடைந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது.
7. ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பேச விருப்பம்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக புடின் மற்றும் செலன்ஸ்கியுடன் பேசவிருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும்உதவிகள் தொடர்பாக பேச அவர் மறுத்துவிட்டார். சிரியா விவகாரம்தொடர்பாக பேசிய அவர், அங்கு வளமான ஆட்சி அமைய துருக்கி மிகப்பெரிய பங்காற்றும் எனக் குறிப்பிட்டார். வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் எனவும் தனது வரிவிதிப்பு திட்டத்தை ட்ரம்ப் நியாயப்படுத்தினார்.
8. வனுவாட்டுத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவின் கடல்பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. விலா துறைமுகப் பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் 57 கிலோ மீட்டர் ஆழத்தில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடுநடுக்கத்தால், பீதியடைந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தின் காரணமாக, வனுவாட்டு தீவு நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
9. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண் உடல்நிலையில் முன்னேற்றம்
அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த மாத இறுதியில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு லூனியின் உடல்நிலை தேறிய நிலையில், 11 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாரஜ் செய்யப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்வதுடன், வேகமாக குணமடைந்து வருகிறார் என அலபாமா பல்கலைக்கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
10. வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் தேர்தல்
”வங்கதேசத்தில் அடுத்த ஆண்டின் இறுதியில் பொதுத்தோ்தல் நடைபெறலாம்” என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் கூறினாா். ”அரசியல் கருத்தொற்றுமை காரணமாக சில சீா்திருத்தங்களுடன் தவறுகளில்லாத வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் தோ்தலை நடத்த தீா்மானிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தோ்தலை நடத்துவது சாத்தியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டம் காரணமாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.