Top 10 உலகச் செய்திகள் | ‘இந்தியா வரும் இலங்கை அதிபர்’ முதல் ’உக்ரைனுக்கு ட்ரம்ப் எதிர்ப்பு’ வரை
ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
1. சிரியாவில் ராணுவப் படைகளை வாபஸ் பெற்ற ரஷ்யா
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள தனது படைகளை ரஷ்யா வாபஸ் பெற்று வருகிறது. சிரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவத்தினர் நாடு திரும்ப ஆயுத்தமாகி வருகின்றனர். டார்ட்டஸ், லதாகியா மாகாணங்களில் ரஷ்யா தனது ராணுவ முகாம்களை அமைத்து முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு உதவி வந்தன. தற்போது நாடு கிளர்ச்சியாளர்கள் வசம் சென்ற நிலையில், ரஷ்யா தனது படைகளை நாடு திரும்ப உத்தரவிட்டது. அதன்படி, ரஷ்யாவின் மிகப்பெரிய இரண்டு விமானங்கள், அங்குள்ள வீரர்கள், ராணுவத் தளவாடங்களுடன் ரஷ்யாவிற்கு செல்கின்றன. இதுதொடர்பான செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகிவுள்ளன.
2. அமெரிக்காவின் நீரிழிவு நோய் தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்
பிரபல அமெரிக்கா மருந்து நிறுவனமான எலி லில்லி, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் தடுப்பு மருந்தினை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் செப்பவுண்ட் (zepbound) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இவ்வகை மருந்தினை இந்தியாவில் மெளஞ்சரோ (maunjaro) என்ற மாற்றுப் பெயரில் சந்தைக்குக் கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஆம் வகைநீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் அவதியடைந்து வருபவர்களுக்கு இது பயனளிக்கும் என எலி லில்லி மருந்து நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் கள்ளச்சந்தைகளில் இவ்வகை மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் சூழலில், அதனை தடுக்க லில்லி நிறுவனம் நேரடியாக களமிறங்குகிறது.
3. ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதம்: உக்ரைனுக்கு ட்ரம்ப் எதிர்ப்பு
உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷ்யா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் ’டைம்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை ரஷியாவுக்குள் பல கி.மீ. தொலைவில் வீசி தாக்குதல் நடத்துவதை நான் கடுமையாக எதிா்க்கிறேன். அவ்வாறு தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு நாம் அனுமதி வழங்கத் தேவையில்லை. இருந்தாலும், எனது அரசு அமைந்தபிறகு உக்ரைனை நான் கைவிடப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். எனினும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க ஏவுகணைகளை ரஷியா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கும் அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளது.
4. இஸ்ரேலுக்கு உதவினாரா சிரியாவின் முன்னாள் ராணுவ அமைச்சர்?
சிரியாவிலுள்ள ராணுவ நிலைகளைத் தாக்கி, அங்குள்ள தளவாடங்களை இஸ்ரேல் அழிப்பதற்கு, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபா் அல்-அசாத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சா் உதவியிருக்கலாம் என செய்தி வெளியாகி உள்ளது. மூசா என்ற இடைத் தரகா் மூலம் பாதுகாப்பு குறுந்தகவல் செயலிகளைப் பயன்படுத்தி, இஸ்ரேல் ராணுவ நிலைகளைத் தாக்குதவதற்கான ஒருங்கிணைப்பை மஹ்மூத் அப்பாஸ் வழங்கியதாக அது குறிப்பிட்டுள்ளது. எனினும், அல்-அசாத்துக்கு இந்த நடவடிக்கையுடன் தொடா்பு இருக்கிறதா என்பதை அந்த ஊடகம் தெரிவிக்கவில்லை. அல்-அசாத் அரசு அகற்றப்பட்டதற்குப் பிறகு, சிரியா அரசுப் படைகளின் நிலைகள்மீது இஸ்ரேல் மிகத் தீவிரமாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சிப் படையினருக்கு அந்த ஆயுத தளவாடங்கள் கிடைத்து, அதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்ரேல் கூறிவருகிறது.
5. அமெரிக்கா: ஒலிம்பிக் பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது. பையத்லட்டுகள் பலர் அளித்த குற்றச்சாட்டை விசாரிக்க, அமெரிக்க பையத்லான் (U.S. Biathlon) உறுப்பினர்களுக்கு அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆணையம் (USOPC) மின்னஞ்சல் அனுப்பியது. அதில், ’பயிற்சியாளர் ஒருவர் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், புகார் அளித்த வீரர்களின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது’ என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பயிற்சியாளரின் பெயர் விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. இதற்கிடையே, பயிற்சியாளர் கேரி கோலியண்டர் மீது வில் வீராங்கனை கிரேஸ் பௌடோட் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
6. நாளை இந்தியா வரும் இலங்கை அதிபர்
இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக 2 நாள் பயணமாக நாளை (டிச.15) இந்தியா வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அதிபராக பதவியேற்ற பின் திசநாயக மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை அதிபர் திசநாயக சந்திப்பார் என இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் நளிந்த ஜெயதிசா தெரிவித்தார். இரு நாட்டு பொருளாதார, பாதுகாப்பு ரீதியிலான உறவுகள் குறித்தும் குறிப்பாக இலங்கைத் தமிழர் நலன் குறித்தும் இச்சந்திப்புகளின் போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
7. விபத்தில் சிக்கிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்
லக்சம்பர்க் நாட்டிற்கு சென்றுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி விபத்தில் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தனது பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8. ரூ.133 கோடிக்கு லண்டனில் ஏலம் போன 3 டைனோசர்கள்
லண்டனில், அருங்காட்சியகத்தில் 3 டைனோசர்களின் எலும்புக்கூடுகள் 133 கோடி ரூபாயிற்கு ஏலம்போயின. ஜூராசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த இந்த டைனோசர்களின் எலும்புகள், அமெரிக்காவின் வயோமிங் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. லண்டன் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த டைனோசர்கள் அலோசரஸ், ஸ்டெகோரொரஸ் வகையைச் சேர்ந்தவை.
9. மெக்சிகோவில் 50க்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரேநேரத்தில் திருமணம்
மெக்சிகோவில் 50க்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. மெக்சிகோ சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தம்பதியினர் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றியும், முத்தம் கொடுத்தும் தங்களது இணையுடன் அன்பை பரிமாறிக் கொண்டனர். இதில் தன்பாலின ஈர்ப்பாளர்களும் கலந்துகொண்டு திருமணம் செய்துகொண்டனர். பல தம்பதிகள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டது பலரையும் கவர்ந்தது. திருமணச் செலவை குறைக்கவும், நேரமின்மை காரணமாகவும் மெக்சிகோவில் இவ்வாறு குழுவாக இணைந்து திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
10. அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு நடைபயிற்சி மேற்கொண்ட பிரேசில் அதிபர்
அறுவைசிகிச்சைக்குப் பின் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மருத்துவமனையில் நடைபயிற்சி மேற்கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அதிபர் சில்வாவுக்கு, கடந்த ஒரே வாரத்தில் இரண்டு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், அவர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வீடியோ ஒன்றை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. எந்த சிரமமுமின்றி, மருத்துவருடன் சேர்ந்து அதிபர் நடைபயிற்சி மேற்கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அதிபர் பூரண குணமடைய பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.