pak - taliban war taliban history
உலகம்

தன்னை உருவாக்கிய பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய தாலிபான்.. பாக்-ஆப்கான் போருக்கு காரணம் என்ன?

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Praveen Joshva L

பாகிஸ்தான் உருவாக்கிய தாலிபான் அமைப்பு, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மாறியுள்ளது. பஷ்தூன் இன மக்களின் பிரிவினை கோரிக்கையை ஆதரித்து, தாலிபான் அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. பாகிஸ்தான் அகதிகளை வெளியேற்றுவது தாலிபான்களை மேலும் சினமடையச் செய்துள்ளது.

"வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்ற பழமொழிக்கேற்ப, பாகிஸ்தான் அரசு ஒரு காலத்தில் அரும்பாடுபட்டு உருவாக்கிய தாலிபான் அமைப்பே, இன்று அந்நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த மோதலின் வரலாற்றுப் பின்னணியை விரிவாகக் காண்போம்.

சோவியத் ஊடுருவலும் அமெரிக்காவின் திட்டமும்

ஆப்கானிஸ்தானில் பல நூற்றாண்டுகளாக நீடித்த மன்னராட்சி 1973-ல் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து 1978-ல் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர். அடுத்த ஆண்டே சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அப்போது அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நிலவிய பனிப்போர் காரணமாக, சோவியத் படைகளை வீழ்த்த அமெரிக்காவின் 'சிஐஏ' (CIA) உளவு அமைப்பு பல்வேறு போராளி அமைப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி மற்றும் நிதியுதவிகளை வழங்கியது. ஒரு கட்டத்தில் இந்தப் போராளிகளைச் சமாளிக்க முடியாமல் சோவியத் படைகள் வெளியேறின.

பாகிஸ்தானின் சுயலாபமும் தாலிபான் உதயமும்

சோவியத் வெளியேற்றத்திற்குப் பிறகு, அமெரிக்கா உருவாக்கிய பல்வேறு குழுக்கள் ஆப்கானிஸ்தானைத் துண்டு துண்டாகப் பிரித்துக்கொண்டு குறுநில மன்னர்களைப் போல ஆட்சி செய்தன. இது அண்டை நாடான பாகிஸ்தானுக்குப் பெரும் வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ஆப்கானிஸ்தான் வழியாகச் செல்லும் பாகிஸ்தான் சரக்கு வாகனங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதுடன், பல இடங்களில் சுங்க வரியும் செலுத்த வேண்டியிருந்தது.

இந்தச் சிக்கலைத் தீர்க்க, ஆப்கானிஸ்தானில் தங்களுக்குச் சாதகமான ஒரு வலிமையான ஆட்சியை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. அதன் விளைவாக உருவானதுதான் தாலிபான் அமைப்பு. முல்லா ஓமர் தலைமையிலான தாலிபான்களுக்குப் பாகிஸ்தான் ஆயுதப் பயிற்சி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி ஒரு பெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தது. இதன் விளைவாக, 1996-ல் ஆப்கானிஸ்தானின் 90 சதவீதப் பகுதிகளைத் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இரட்டை கோபுரத் தாக்குதலும் அமெரிக்கப் போரும்

தாலிபான்களின் நட்பு சக்தியான அல் கொய்தா, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்க அரசு அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க வலியுறுத்தியது. ஆனால், இதற்கு தாலிபான்கள் மறுத்ததால், அமெரிக்கா ஆப்கான் மீது போர் தொடுத்து தாலிபான் ஆட்சியை வீழ்த்தியது. அமெரிக்காவின் மிரட்டலால் வேறு வழியின்றி பாகிஸ்தான் இப்போரில் அமெரிக்காவிற்கு ஆதரவளித்தாலும், மறைமுகமாகத் தாலிபான் தலைவர்களுக்குத் தஞ்சம் அளித்து வந்தது.

எனினும் இந்த போருக்கு பின்னர் தாலிபான் அமைப்பின் தலைவர்கள் பாகிஸ்தானின் தலைமறைவாக வாழ பாகிஸ்தான் அரசு பல்வேறு உதவிகளை செய்தது. அதே நேரம் பாகிஸ்தான் ஆதரவோடு ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ஆதரவு படைகள் மீது தாலிபான் அமைப்பு தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களையும் நடத்தி வந்தது.

தற்போதைய மோதலுக்கான காரணங்கள்

ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தானை நிர்வகிப்பது அமெரிக்காவுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. அதே போல தாலிபான்களின் தாக்குதலால் ஏராளமான அமெரிக்க படை வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் கடந்த 2020-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்த தனது படைகளை அமெரிக்கா திரும்பப்பெறும் என அறிவித்தது.

அமெரிக்க படைகள் வெளியேறியதும் பாகிஸ்தானின் உதவியுடன் தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் பாகிஸ்தானுக்குக் கட்டுப்பட மறுத்ததுதான் மோதலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

ஆப்கானிஸ்தான் முக்கிய பழங்குடி சமூகமான பஷ்தூன் இன மக்கள் பாகிஸ்தான் எல்லைப்புறமாகவும் வசித்து வருகிறார்கள். இவர்கள் பஷ்தூன் இன மக்கள் வாழும் பகுதிகளை தனியே பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 'தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' (TTP) அமைப்பு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள 'பஷ்தூன்' இன மக்கள் வாழும் பகுதியைத் தனிநாடாகப் பிரிக்கத் துடிக்கும் 'தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' (TTP) அமைப்புக்கு ஆப்கான் தாலிபான்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். தாலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இந்த 'பஷ்தூன்' இன பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் ஆப்கான் தாலிபான்கள் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் புகலிடமும் வழங்கி வருகின்றனர்.

இப்படி ஆப்கானிஸ்தானின் உதவியோடு டிடிபி அமைப்பு பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சிதைத்துள்ளது. அதே போல பல ஆண்டுகளாகப் பாகிஸ்தானில் வசித்து வந்த லட்சக்கணக்கான ஆப்கானிய அகதிகளைப் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக வெளியேற்றி வருவது தாலிபான் அரசை மேலும் சினமடையச் செய்துள்ளது.

pakistan taliban war

இதனால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான மோதலே தற்போது பரிணாமம் அடைந்து போராக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே பொருளாதாரச் சரிவில் சிக்கியுள்ள இவ்விரு நாடுகளும் நேரடிப் போரில் இறங்கினால், அதன் விளைவுகள் ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.