"நெருப்புடன் விளையாடுகிறார்கள்" - பாகிஸ்தானுக்கு பறந்த எச்சரிக்கை.. தலிபான்களின் அடுத்த ஸ்கெட்ச்..?
தாலிபான்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், 'சிலர் தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடனும் விளையாடுகிறார்கள், நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், பிராந்தியத்தை காப்பாற்ற முன்னுரிமை கொடுப்போம்" என தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி எச்சரிக்கை விடுத்திருப்பது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எல்லையை பகிந்து கொள்வது தொடர்பாக ஆப்கனிஸ்தானுக்கும்- பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அவ்வப்போது, பாகிஸ்தான் ராணுவத்தை குறி வைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்படியான சூழலுக்கு மத்தியில் கடந்த 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லையில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தனர்.
அதே போல கடந்த வாரம் காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று தலிபான் அரசு குற்றம்சாட்டியது. இதையடுத்து துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் தலையிட்டதன் பேரில் இரு தரப்புக்குமான மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், "நாம் அனைவரும் இஸ்லாமிய சகோதரர்கள் ஆனால், சிலர் தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடனும் விளையாடுகிறார்கள். நாங்கள் போரை விரும்பவில்லை அதே வேளையில் எங்கள் பிராந்தியத்தை காப்பாற்ற முன்னுரிமை கொடுப்போம்" என ஆவேசமாக பேசினார். இவரது பேச்சுக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


