"ஈரானிலிருந்து எங்களால் வர முடியாது.." இந்திய மாணவர்களுக்கு என்ன நடந்தது? வெளியான அதிர்ச்சி வீடியோ!
ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள், அந்நாட்டின் போர் பதற்ற சூழல் காரணமாக இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் உள்ள மாணவர்கள், இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி பட்டங்கள் செல்லாமலாகும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
ஈரானில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக வைத்து உள்ளே நுழைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறார்.
அதனை தொடர்ந்து, ஈரான் கடற்பரப்பில் USS ஆபிரகாம் லின்கன் மற்றும் USS ஜெரால்டு ஆர் ஃபோர்டு விமான தாங்கி போர் கப்பலை அமெரிக்கா நிலைநிறுத்தி அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்து ஒரு ஒப்பந்தத்தை எட்ட பிப்ரவரி 19 முதல் 10 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார். இல்லையெனில் கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதனால் அந்த பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்த காரணத்தால் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈரான் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனே நாடு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
பரபரப்பை உண்டாக்கிய இந்தியரின் பேச்சு..
தற்போது, ஈரானில் இருக்கும் இந்திய மாணவர் ஒருவர் வீடியோ வாயிலாக தாங்கள் இந்தியா வர முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் மருத்துவப் படிப்பு பயின்று வரும் இந்திய மாணவர் (Bilal Bhat), அந்நாட்டில் நிலவும் போர் பதற்ற சூழலை இந்திய மாணவர்களின் தற்போதைய இக்கட்டான நிலையை வீடியோ வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானில் உள்ள இந்திய தூதரகம், பதற்றமான சூழல் காரணமாக இந்தியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், மார்ச் 5 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் முக்கிய தேர்வுகள் இருப்பதால், மாணவர்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
தேர்வை எழுதாமல் வெளியேறினால், இந்திய தேசிய மருத்துவ ஆணையம் (NMC) விதிகளின்படி மருத்துவப் பட்டங்கள் செல்லாமலாகிவிடும் அபாயம் உள்ளதாக Bilal Bhat கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் நாங்கள் எவ்வளவு விரைவில் இந்தியா திரும்ப முடியுமோ திரும்புவோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு இதில் தலையிட்டு தூதரக ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வுகளை ஒத்திவைக்க உதவ வேண்டும் என்று ஈரானில் வசித்து பயின்று வரும் மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
போர் குறித்த அச்சம் இருந்தாலும், எதிர்காலக் கல்வியைக் கருத்தில் கொண்டு அவர்கள் ஈரானிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அகில இந்திய மருத்துவ மாணவர்கள் சங்கம் (AIMSA), இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி அவசர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

