Trumph, Pete Hegseth pt desk
உலகம்

தொடர் தாக்குதல் | கருணைக்கு இடமில்லை.. போர் விதிகளை மீறும் அமெரிக்கா!

நாங்கள் ஈரான் மீது ஒரு துளி கருணைகூடக் காட்டமாட்டோம் என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளதை மனித உரிமை குழுக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

PT WEB

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், போர் விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மனித உரிமைகள் குழுக்கள் கடுமையாக விமர்சிக்கின்றன.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 2 வாரங்களை கடந்து நடைபெற்றுவரும் நிலையில், ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமெரிக்காவின் போர் விமானம் விபத்துக்குள்ளானது இதில், இராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கத் தரப்பில் இருந்து இது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தே எனக் கூறும் நிலையில், ஈரான் தரப்பிலிருந்து, அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ஆதரவு குழுவின் தாக்குதலே காரணம் எனக் கூறுகிறது. இந்த சூழலில் விபத்து குறித்து விளக்கம் அளிப்பதற்காக அமெரிக்கச் பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

file photo

அப்போது அவரிடம் போர் சம்பந்தமான சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ”முட்டாள்தனமான விதிகள் மற்றும் அரசியல்ரீதியாக போரை நடத்துவது ஆகியவற்றைக் கடைப்பிடிக்க மாட்டேன். நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம், தொடர்ந்து முன்னேறுவோம். எங்கள் எதிரிகள் மீது ஒரு துளி கருணையும் காட்ட மாட்டோம்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

ஈரானுடனான போர் இரக்கமற்ற, கருணையற்ற சண்டை என்று கூறியதற்காக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தை மனித உரிமைகள் குழுக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஹேக் (Hague) சர்வதேச ஒப்பந்தங்களின்கீழ், போரில் ஈடுபடுவோருக்கு எந்த உரிமையும் வழங்கப்படாது என்று அச்சுறுத்துவது சட்டவிரோதமானது. (ஹேக் உடன்படிக்கைகள் என்பது போர்ச் சட்டங்கள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட ஒத்துழைப்பை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது போரின்போது கட்டுப்பாடுகளை மீறாமல் விதிகளைப் பின்பற்றுவது, ஆயுதங்களை கீழே போட்டவர்களை தூக்கிலிடுவது மனிதாபிமானமற்றது மற்றும் எதிர்மறையானது என்பதே போர் விதிகளின் அடிப்படைக் கருத்து) அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டங்களும், இராணுவ கையேடுகளும் ஹெக்செத்தின் அச்சுறுத்தல் சட்டவிரோதமானது என்று எச்சரிக்கின்றன.

iran war image

சர்வதேச நெருக்கடி குழுவின் (International Crisis Group) மூத்த ஆலோசகரான பிரையன் ஃபினுகேன் அல்ஜசீரா செய்தி சேனலிடம் பேசியபோது, ”ஹெக்செத்தின் கருத்துக்கள் உரிமைகளை மீறுவதாக இருக்கிறது. இந்தப் போர்க்குணமிக்க, சட்டவிரோதமான பேச்சு போர்க்களத்தில் போர் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதின் பிரதிபலிப்போ என்ற கேள்வியும் எழுகிறது” எனக் கூறியுள்ளார்.

சர்வதேச சட்டத்தை மீறிய அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான போரின்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே சர்வதேச சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவில் கடற்படைப் பயிற்சி முடித்துவிட்டு திரும்பிய IRIS தேனா என்ற ஈரானிய ராணுவ கப்பலை, ​​இலங்கை கடற்கரையில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது. அந்தத் தாக்குதலில் குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர். போர்க்கப்பல்கள் சட்டப்பூர்வ இராணுவ இலக்குகளாகக் கருதப்பட்டாலும், கப்பல் முழுமையாக ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை என்று ஈரான் கூறியது. அது மூழ்கடிக்கப்படுவதற்குப் பதிலாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் கூறப்பட்டது

Days before IRIS dena Sinking

கப்பல் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவி தேவைப்பட்டாலும், தேனாவிலிருந்து மாலுமிகளை மீட்க, அமெரிக்கப் படைகள் உதவ மறுத்ததாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்க இலங்கை கடற்படை இறுதியில் உதவியது. இந்த செயல் போர் தொடர்பான விதிகளை மீறியதாகும்.

தாக்குதலுக்கு பதிலளித்த ஹெக்செத், கப்பல் மூழ்கியதை அமைதியான மரணம் என்று விவரித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம், "நாங்கள் வெற்றி பெற போராடுகிறோம்" என்று கூறினார்.

மினாபில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். இதுவும் போர் நடத்தை விதிகளை மீறியதாகும். இந்தப் போர் குறைந்தது 1,444 ஈரானியர்களைக் கொன்றுள்ளது மற்றும் லட்சக்கணக்கானவர்களை இடம்பெயர வைத்துள்ளது.

Mass graves of school girls , iran

இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்களைக் கொன்றதற்காக அமெரிக்க இராணுவம் பல தசாப்தங்களாக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ’பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்’ என்று அழைக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு திருமண விருந்தில் நடந்த தாக்குதல் உட்பட வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இதில் அடங்கும்.

ஈரானுடனான போருக்கு முன்பே, கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் என்று கூறப்படும் கப்பல்களைத் தாக்கி சர்வதேச சட்டத்தை மீறியதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.