ஈரான் போர் எதிரொலி | 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு.!
ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவாக, 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது. வியட்நாமில் 50% வரை விலை உயர்ந்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீதான போரை பிப்ரவரி 28 அன்று ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்கியது. முதல் நாளே ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி மற்றும் பிற உயர் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஏராளமான ஏவுகணைகளை ஏவி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், போர் காரணமாக ஈரான் பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஹார்முஸ் நீரிணையை மூடியிருக்கிறது. இதன் காரணமாக, உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அந்த வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைத் தாண்டியுள்ளது.
இதனால், பல நாடுகளில் பெட்ரோல் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக வியட்நாமில் 50 விழுக்காடு பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. வியட்நாமில் பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் சுமார் 69 ரூபாயாக இருந்தது. இப்போது, அது 104 ரூபாயாக உயர்ந்துள்ளது. நைஜீரியாவில் 54 ரூபாயிலிருந்து 73 ரூபாயாக 35 விழுக்காடு அதிகரித்துள்ளது.
லாவோஸில் 33 விழுக்காடு (ரூ123 லிருந்து -ரூ164 ), கனடாவில் 28 விழுக்காடு (ரூ.107 - ரூ137) பாகிஸ்தானில் 24 விழுக்காடு (ரூ84 -ரூ106) பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. மாலத்தீவில் 19 விழுக்காடு (ரூ80 - ரூ96), கம்போடியாவில் 18 விழுக்காடு (ரூ102 -ரூ121),. ஆஸ்திரேலியாவில் 18 விழுக்காடு (ரூ102 -ரூ120). அமெரிக்காவில் 16 விழுக்காடு (ரூ80 - ரூ93) மற்றும் சிங்கப்பூரில் 15 விழுக்காடு (ரூ199 - ரூ230) விலை உயர்ந்துள்ளது. இந்த விநியோகத் தட்டுப்பாடு உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

