ஏமன் உள்நாட்டுப் போர், ஹவுதி- STC மோதல், OPEC அதிகாரப் போட்டி ஆகியவற்றின் நடுவே, சவூதி அரேபியாவுக்கு நெருங்கிய பாகிஸ்தான், துபாயில் வசிக்கும் மாலிக் ரியாஸுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்தது, ஐக்கிய அரபு அமீரகத்தை நேரடியாக சவால் செய்கிறது. கடன் விவகாரம், ஒப்படை மறுப்பு போன்றவை இரு நாடுகளின் உறவை மேலும் மோசமாக்குகின்றன.
மத்திய கிழக்கு பகுதியின் சக்திவாய்ந்த நாடாக சவுதி அரேபியா திகழ்ந்து வருகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக திகழும் சவுதி அரேபியாவே OPEC அமைப்பில் செல்வாக்கு வாய்ந்த நாடாகவும் திகழ்ந்து வருகிறது.
நீண்ட காலமாக சவூதி அரேபியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நெருங்கிய உறவுகள் தொடர்ந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் இந்த உறவு மோசமடைந்துள்ளது. குறிப்பாக ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பு அங்கு ஆட்சியில் இருந்த சவூதி அரசுக்கு ஆதரவான அரசை வீழ்த்தி ஏமனின் தலைநகர் சனாவை கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து ஹவுதி அமைப்புக்கு எதிராக சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் களமிறங்கின. ஆனால் ஒரு கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் இந்த கூட்டணியில் இருந்து விலகி ஏமனில் வளர்ந்து வரும் STC அமைப்புக்கு தனது ஆதரவை வழங்கியது.
இதனால் சவூதி அரேபியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவுகள் மோசமடைந்தது. இந்த சூழலில் சவூதி அரேபியா பாகிஸ்தானுடனான தனது உறவுகளை அதிகரித்தது. ஒரு காலத்தில் பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதியுடன் ஒரே போன்ற உறவை பேணிய நிலையில், சமிபத்தில் பாகிஸ்தான் சவூதிக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியது.
இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கிய கடனை உடனடியாக திரும்பத்தரவேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கூற, சவுதியின் நிதியுதவியை பெற்று அமீரகத்தின் கடனை பாகிஸ்தான் அடைத்தது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை பெற்றுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் மாலிக் ரியாஸை (Malik Riaz), பிடிக்க பாகிஸ்தான் காவல்துறை சர்வதேச அளவில் பிடியாணை பிறப்பித்துள்ளது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான மாலிக் ரியாஸ், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையை பெற்று துபாயில் வசித்து வருகிறார். இவரை ஒப்படைக்க பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில், அதனை அமீரகம் தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்த சூழலில் மாலிக் ரியாஸை பிடிக்க பாகிஸ்தான் காவல்துறை இண்டெர்போல் உதவியுடன் சர்வதேச அளவில் பிடியாணை பிறப்பித்து அவரைக் கொண்டு வரத் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தை வேண்டுமென்றே சீண்டும் நடவடிக்கையாக பார்க்கப்படும் நிலையில், சவூதி அரேபியாவின் அழுத்தம் காரணமாகவே பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக பார்க்கப்படுகிறது.