’எங்க நாட்டு மேகத்தை எல்லாம் திருடுறாங்க..’ அமெரிக்கா மீது ஈராக் பரபரப்பு புகார்!
ஈராக்கில் கடும் வறட்சி நீடிக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அல்-கைகானி, அமெரிக்கா விமானங்களை பயன்படுத்தி துருக்கி, ஈரான் இணைந்து ஈராக்குக்கு வரவேண்டிய மழை மேகங்களை உடைத்து ‘திருடி’ வருவதாக அதிர்ச்சிகர குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
ஈராக்குக்கு வரும் மழை மேகங்களை அமெரிக்காவும், ஈரானும் இணைந்து திருடுகிறது என ஈராக் எம்.பி கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே மழைப்பொழிவு கடுமையாக குறைந்த நிலையில், அங்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. ஈராக் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளாகப் ஈரானில் மழையளவு குறைத்துள்ளது என்றும், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஈராக்கின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான அளவிற்குத் இறங்கியுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் நதிகளுக்கு ஆதாரமாக விளங்கும் துருக்கி மற்றும் ஈரான் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் மழை குறைந்ததால், நதிகளில் நீர்வரத்து குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈராக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அல்-கைகானி (Abdullah Al-Kaikhani) என்பவர், அண்டை நாடுகளான துருக்கியும் ஈரானும், அமெரிக்காவின் விமானங்களைப் பயன்படுத்தி எங்களுக்கு வரும் மேகங்களை உடைத்து அதனை திருடி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் ஈராக் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் அமர் அல்-ஜபிரி (Amir al-Jabiri) , தனது நாட்டு எம்.பியின் கருத்தை மறுத்து, அவரின் கூற்று அறிவியல் பூர்வமானதும் அல்ல, தர்க்கரீதியானதும் அல்ல என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் ஈரானும் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு ஆய்வாளர்களும் மேகத்தை திருடும் அளவு தொழில்நுட்பம் இன்னும் உருவாகவில்லை என்று கூறி வருகின்றனர்.

