சர்மா ஒலி, சுஷிலா கார்க்கி ராய்ட்டர்ஸ், எக்ஸ் தளம்
உலகம்

நேபாளம்| பதவி விலகிய சர்மா அலியின் பகீர் அறிக்கை.. இடைக்கால பிரதமர் யார்.. வைரலாகும் மாணவர்!

வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள நேபாள ராணுவம், முன்னெச்சரிக்கையாக மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Prakash J

வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள நேபாள ராணுவம், முன்னெச்சரிக்கையாக மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நேபாள ராணுவம் கடுமையான கட்டுப்பாடுகள்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதன் எதிரொலியாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. நாடாளுமன்ற வளாகம், பிரதமர் அலுவலகம், அதிபர் மாளிகை, அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதில் அரசு சொத்துகள் கடும் சேதமடைந்த நிலையில், பிரதமர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுடன், முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கினர். போராட்டக் குழுவினர் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள ராணுவம், முன்னெச்சரிக்கையாக மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும் போராட்டத்தின்போது, கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள், பாதுகாப்புச் சாதனங்களை மீண்டும் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில், வெறிச்சோடிய வீதிகளில் ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டடம் மற்றும் முக்கிய கட்டடங்களுக்கு, ராணுவத்தினர் பீரங்கி உள்ளிட்டவற்றை நிலைநிறுத்தி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அமைதியை மீட்டெடுக்க உறுதிபூண்டுள்ளதாக, அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.

தலைமறைவானாரா சர்மா ஒலி? வெளியிட்ட அறிக்கை!

மறுபுறம், பதவி விலகியதிலிருந்து சர்மா ஒலி எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் எங்கே இருக்கலாம் என்பது குறித்து இணையத்தில் பல ஊகங்கள் பரவி வருகின்றன. சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், அவர் துபாய்க்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறினாலும், மற்றவர்கள் அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறுகின்றன. இருப்பினும், அவர் பற்றிய எந்த தகவல்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு இருந்தாலும், அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை என நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜாராம் பாஸ்நெட் ’டைம்ஸ் நவ்’விடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், நேபாளத்தில் வன்முறைக்கு மத்தியில் கே.பி.சர்மா ஒலி, ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், பாதுகாப்பான இராணுவ சுற்றிவளைப்பின்கீழ் சிவபுரியில் இருப்பதாக ஒலி தெரிவித்துள்ளார். மேலும், நேபாளத்தில் அமைதி காக்கவும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், “இன்று ஜெனரல்-இசட் தலைமுறை அழைப்பு விடுத்த போராட்டத்தின்போது நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். எங்கள் குழந்தைகள் தங்கள் கோரிக்கைகளை அமைதியாகக் குரல் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் பல்வேறு சுயநலவாதிகள் போராட்டத்தில் ஊடுருவியதால் ஏற்பட்ட சூழ்நிலை குடிமக்களின் துயரமான உயிர் இழப்பிற்கு வழிவகுத்தது” எனத் தெரிவித்துள்ள ஒலி, ”தனது பதவி இழப்புக்கு இந்தியா மீதான தனது நிலைப்பாடே காரணம்” என்று தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் பிறந்ததை எதிர்த்ததால்தான் ஆட்சியை இழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், காலாபனி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானவை என்று தான் வலியுறுத்தியதும் தனது பதவி இழப்புக்கு ஒரு காரணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சர்மா ஒலி சர்ச்சைக்குப் புதியவர் அல்ல.. இந்தியா மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள்!

சர்மா ஒலி சர்ச்சைக்குப் புதியவர் அல்ல. கடந்த 2020ஆம் ஆண்டு நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “கலாசார ரீதியாக நாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம். பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இளவரசன் ராமருக்கு நாம் சீதையைக் கொடுத்ததாக இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் அயோத்தியைச் சேர்ந்த இளவரசனுக்குத்தான் சீதையைக் கொடுத்தோமே தவிர, இந்தியாவுக்குக் கொடுக்கவில்லை. அயோத்தி என்பது பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். இப்போது உருவாக்கி வைத்திருக்கிறார்களே, அந்த அயோத்தி அல்ல. அந்தக் காலகட்டத்தில் எந்தத் தொடர்பும், போக்குவரத்து வசதியும் இல்லாத சமயத்தில் அவ்வளவு தொலைவில் உள்ள இருவருக்கும் கல்யாணம் நடப்பது என்பது சாத்தியமில்லை. தசரத் நேபாளத்தின் அரசர் என்பதால், அவர் மகன் ராமனும் இங்குதான் பிறந்திருப்பார்” எனப் பேசியிருந்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு இந்திய அரசியல் கட்சித் தலைவகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பின்னர், அவர் பேசியது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம், விளக்கமளித்திருந்தது. அதில், ‘அயோத்தியின் மாண்பைக் குறைக்கும் வகையில் கேபி சர்மா ஒலி அந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அயோத்தி என்பது பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். இப்போது உருவாக்கி வைத்திருக்கிறார்களே, அந்த அயோத்தி அல்ல.
சர்மா ஒலி
கே.பி.சர்மா ஒலி

அதேபோல், அவருடைய ஆட்சியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடியது. அப்பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டது. இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. மேலும், அவரது அரசாங்கம் இந்தியா அந்தப் பகுதியில் சாலைகள் அமைப்பதையும் வர்த்தகம் செய்வதையும் நிறுத்துமாறு வலியுறுத்தியது. தவிர, அந்தப் பகுதி நேபாளத்திற்குச் சொந்தமானது என்று சீனாவிடம் தெரிவித்தது. இந்தக் கூற்றுகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்தது. நேபாளத்தின் கூற்றுகள் நியாயமற்றவை என்றும் வரலாற்றுச் சான்றுகள் இல்லாதவை என்றும் வெளியுறவு அமைச்சகம் விவரித்தது. லிபுலேக் மூலம் இந்தியா-சீனா வர்த்தகம் 1954 முதல் நடந்து வருவதாகவும், சமீபத்திய ஆண்டுகளில் தற்காலிகமாக மட்டுமே தடைபட்டுள்ளதாகவும் அது வலியுறுத்தியது. (இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்துகொள்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்புறவு தொடர்ந்து வந்தாலும், பல தசாப்தங்களாக எல்லைப் பிரச்னையும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகத்தான் தற்போது வெடித்த வன்முறையின்போது இந்திய எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது).

இடைக்காலப் பிரதமராகும் சுஷிலா கார்க்கி

இதற்கிடையே, நேபாளத்தில் ஒருபுறம் வன்முறை முடிவுக்கு வந்து அமைதி திரும்பியுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் ஆன்லைன் மூலம் கலந்துரையாடல் நடத்தி முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நாட்டின் இடைக்காலப் பிரதமராக நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர் நேர்மையானவர், ஊழலுக்கு எதிரானவர் என்பதாலேயே அவரைப் போராட்டக்காரர்கள் தேர்வு செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளரை கலந்தாலோசித்த பிறகு சுஷிலா கார்க்கியின் பெயர் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேபாளத்தில் பிறந்த சுஷிலா கார்க்கி, இந்தியாவுடன் தொடர்புடையவர். அவர் பிராட்நகரில் உள்ள மகேந்திர மொராங் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். 2016ஆம் ஆண்டு நேபாளம் உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரலாறு படைத்தவர்.

சுஷிலா கார்க்கி

இதனால், அரசுடன் கடுமையான மோதலையும் அவர் சந்தித்தார். தவிர, அவரைப் பதவி நீக்கம் செய்ய தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இதனால், அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆயினும் கார்க்கி பதவிநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அரசியல் ஊழலால் விரக்தியடைந்தார். அவரது குறிப்பிடத்தக்க தீர்ப்பு, அரசமைப்பு சார்ந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பின் தலைவராக லோக்மான் சிங் கார்க்கியின் நியமனத்தை ரத்து செய்தது. மாணவப் பருவத்தில், ஜனநாயகத்துக்காகப் போராடிய நேபாள காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய கார்க்கி, தனது ஆசிரியரும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான துர்கா சுபேதியைத் திருமணம் செய்துகொண்டார். துர்கா சுபேதி, 1973ஆம் ஆண்டு ஜூன் மாதம் நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய நான்கு பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் மாணவரின் பழைய பேச்சு

இன்னொரு புறம், நேபாள பள்ளி மாணவர் ஒருவர், ஆவேசமான உரையை நிகழ்த்தும் பழைய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓரா என்ற சிறுவன் பேசும் அந்தக் காணொளி, அவனது பள்ளியின் ஆண்டு நிகழ்ச்சி நிரலின்போது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த காணொளியில், "இன்று, ஒரு புதிய நேபாளத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவுடன் நான் இங்கே நிற்கிறேன். நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் நெருப்பு என்னுள் எரிகிறது. ஆனால், இந்த கனவு நழுவிச் செல்வதுபோல் தோன்றுவதால் என் இதயம் கனமாக இருக்கிறது. நேபாளம், எங்கள் தாய், எங்களைப் பெற்றெடுத்து வளர்த்த நாடு, அதற்கு ஈடாக அது என்ன கேட்டது? எங்கள் நேர்மை, எங்கள் கடின உழைப்பு, எங்கள் பங்களிப்பு. ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

நாம் குரல் எழுப்பவில்லை என்றால், யார் குரல் கொடுப்பார்கள்? இந்தத் தேசத்தை நாம் கட்டியெழுப்பவில்லை என்றால், யார் குரல் கொடுப்பார்கள்?
ஓரா

நாங்கள் வேலையின்மை சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளோம். அரசியல் கட்சிகளின் சுயநல விளையாட்டுகளில் சிக்கியுள்ளோம். ஊழல் நமது எதிர்காலத்தின் ஒளியை அணைக்கும் ஒரு வலையை பின்னியுள்ளது. நாங்கள் எதிர்காலத்தின் ஜோதி ஏந்திகள். நாம் குரல் எழுப்பவில்லை என்றால், யார் குரல் கொடுப்பார்கள்? இந்தத் தேசத்தை நாம் கட்டியெழுப்பவில்லை என்றால், யார் குரல் கொடுப்பார்கள்? இருளை எரிக்கும் நெருப்பு நாங்கள். அநீதியைத் துடைத்தெறியும் புயல் நாங்கள்" என உணர்ச்சிபொங்க பேசுகிறார். அவருடைய பேச்சுதான் தற்போது நனவாகி இருப்பதாக அந்நாட்டு இளைஞர்கள் உணருகின்றனர்.

போராட்டம் வெடித்ததன் பின்னணி

நேபாள வன்முறை

நேபாளத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 20.83 சதவீதமாக உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒலி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்களுக்குத் திருப்திகரமாக இல்லை. வேலையில்லாத காரணத்தால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு கூலிப்படைகளாகச் செல்லும் நிலைக்கு நேபாள இளைஞர்கள் சிலர் தள்ளப்பட்டுள்ளனர். உலக வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு இளைஞர்களின் வேலையின்மை 20% ஆக இருந்த நிலையில், மத்திய கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவில் வேலை தேடி ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக அரசாங்கம் மதிப்பிடுகிறது. அதேசமயம், அரசியல் தலைவர்களின் வாரிசுகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் குவிப்பதாகவும், ஊழல் மலிந்து கிடப்பதாகவும் சமூக ஊடகங்களில் சமீபகாலமாகச் செய்திகள் பரவுகின்றன. ஜென் இசட் மற்றும் ’நெப்போ கிட்ஸ்’ எனப்படும் அமைப்புகள் பல புகைப்பட ஆதாரங்களுடன் வாரிசுகளின் சொகுசு வாழ்க்கையை சமூக ஊடகங்கள் மூலம் நிரூபித்ததைத் தொடர்ந்து இளைஞர்கள் கோபத்திற்கு ஆளாகினர்.