நேபாளம் | இளைஞர்கள் போராட்டத்தால் நடந்த ஆட்சி மாற்றம்.. பதவியேற்கும் சுஷிலா கார்கி..
இரண்டே நாளில் நேபாள அரசியலையே புரட்டிப் போட்டிருக்கிறார்கள் அந்நாட்டு இளைஞர்கள். நேபாளத்தில் வெடித்த இளைஞர் போராட்டங்களால் பிரதமரும் அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அந்நாட்டின் இடைக்கால தலைவராக சுஷிலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு அரசு மீது இளைஞர்களுக்கு என்ன கோபம்? போராட்டம் தொடங்கியதில் இருந்து தற்போதுவரை நேபாளத்தில் என்னதான் நடந்தது?...விரிவாகப் பார்க்கலாம்.
நேபாளத்தில் இப்போது வெடித்திருக்கும் போராட்டங்களுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, அரசின் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள். மற்றொன்று, சமூக வலைதளங்கள் மீதான அரசின் கட்டுப்பாடு. நேபாளம் 2008-க்குப் பிறகுதான் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது. அதுவரையில் அங்கு மன்னராட்சிதான். எனினும், ஜனநாயகத்திற்கு வந்த பிறகு அங்கு அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் 14 முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கே.பி. ஷர்மா ஒலி ஏற்கெனவே மூன்று முறை பிரதமராக இருந்தவர். அவர் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சீனாவுடனான அவரது உறவும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்தச் சூழலில் தான், சமூக வலைதளங்களில் ‘நெபோ கிட்ஸ்’ (Nepo Kids) என்ற பெயரில் ஒரு இயக்கம் உருவானது. இந்த இயக்கம், நேபாள அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் ஆடம்பரமாக வாழும் வாழ்க்கையை அம்பலப்படுத்தியது. இது, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அவதிப்பட்டு வந்த நேபாள இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த இயக்கம் ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களை தொடர்ந்து வெளிச்சம்போட்டுக் காட்டியது. இது ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேபாள அரசு ஒரு சட்டத்தை முன்மொழிந்தது. இதன் தொடர்ச்சியாக, பேஸ்புக், எக்ஸ், யூடியூப் போன்ற முக்கிய சமூக ஊடகங்களை செப்டம்பர் முதல் வாரத்தில் அரசு தடை செய்தது.
சமூக வலைதள தடை, இளைஞர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது. சுதன் குருங் போன்ற சமூக ஆர்வலர்கள் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். வேலையின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட Gen Z தலைமுறையினர் என்று அழைக்கப்படும் 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள், அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்தனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து, வன்முறையாக மாறின. காவல்துறையினருடன் நடந்த மோதலில் 22க்கும் மேற்பட்டோர் இறந்தனர். போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக வெடித்த நிலையில், பிரதமரும் அதிபரும் ராஜினாமா செய்துள்ளனர். Gen Z தலைமுறையினர் அரசியல் ஆர்வமற்றவர்கள் என்று பரவலான கருத்து உண்டு. அந்தப் பார்வையை உடைத்து எறிந்து இருக்கிறார்கள் நேபாள ஜென் சி -யினர்.
நேபாளத்தில் அரசு கவிழ்ந்துள்ள நிலையில் புதிதாக வந்துள்ள ராணுவ நிர்வாகத்திடம் போராட்டம் நடத்திய இளைஞர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அரசமைப்பு சாசனம் திருத்தி எழுதப்பட வேண்டும் என்றும் கடந்த 30 ஆண்டுகளாக பதவியில் இருந்த அரசுகள் செய்த ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படவேண்டும் என்றும் இளைஞர்கள் தரப்பு வலியுறுத்தியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது கொல்லப்பட்டவர்களை தியாகிகளாக அறிவித்து அவர்களுக்கு தேசிய மரியாதையும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவிகளும் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை அதிகரித்து சமூக பாகுபாடுகளைகளையவும் முயற்சிகள் தேவை என இளைஞர் குழுக்கள் கோரியுள்ளன.
தொடர்ந்து, நேபாளத்தில் வன்முறை காரணமாக காத்மாண்டு விமான நிலையம் திடீரென மூடப்பட்டது. முன்னறிவிப்பின்றி விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் 300 முதல் 400 பயணிகள் அவதிக்குள்ளாகினர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து விமான சேவையை வழங்கும் நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்பையும் வழங்காததால், பயணம் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் பயணிகள் தவிப்பதாக, இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ப்ரீத்தி சவுத்ரி தெரிவித்திருந்தார். விமான நிலையத்தில் மூன்று பேர் மட்டுமே பாதுகாப்பிற்கு உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்திய தூதரகம் மூலம் தாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேபாள சிறைகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் 2 நாட்களாக நடைபெற்ற வன்முறைகளால், பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி 3 சிறைகளில் இருந்து ஆயிரத்து 47 கைதிகள் தப்பினர். இதில் 147 பேரை தேடிப்பிடித்து ராணுவம் கைது செய்துள்ளது. மீதமுள்ள 900 பேர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர்களை காவல் துறையினரும் ராணுவத்தினரும் தேடி வருகின்றனர்.
”தெற்காசிய நாடுகளின் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயற்சி”
தெற்காசிய நாடுகளில் அரசுகளை கவிழ்க்க திட்டமிட்ட முயற்சிகள் நடைபெறுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். வங்கதேசத்திலும் அதைத்தொடர்ந்து நேபாளத்திலும் நடைபெற்ற நிகழ்வுகளை எதேச்சையானதாக கருத முடியாது என்று அவர் தெரிவித்தார். ஆட்சி மாற்றங்கள் மூலம் தெற்காசிய நாடுகளின் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார். இதுபோன்ற முயற்சிகள் மற்ற நாடுகளிலும் எந்த நேரத்திலும் நடைபெறக்கூடும் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாணவர் போராட்டங்களின் வரலாறு:
உலக வரலாற்றில் பல நாடுகளில் வீரம்செறிந்த மாணவர் போராட்டங்கள் அழியாச் சுவடுகளாகப் பதிவாகியுள்ளன . பூமிப் பந்தின் கிழக்கிலும் மேற்கிலும் பல நாடுகளில் மாணவர் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டிருக்கின்றன. 1968இல் நடைபெற்ற ஃபிரான்ஸ் புரட்சியில் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்காக தொழிலாளர்களும் மாணவர்களும் இணைந்து நடத்திய போராட்டங்கள், அதிபர் சார்லஸ் டி கோல் தலைமையிலான அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் தள்ளின. 1979இல் ஈரானில் மாணவர்கள், இஸ்லாமிய மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய ஈரானியப் புரட்சி, அமெரிக்க சார்பு மன்னரான ஷாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1960களில் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்க மாணவர்கள் நாடு முழுவதும் நடத்திய போராட்டங்கள், அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தின. 1989இல் சீனாவில் ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் கோரி தியானென்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம், சீன அரசாங்கத்தால் ராணுவ பலம் கொண்டு கொடூரமாக ஒடுக்கப்பட்டது .
1990களின் தொடக்கத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் வி.பி. சிங் தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. 2011-13 காலகட்டத்தில் சிலி நாட்டில் அனைவருக்கும் தரமான மற்றும் இலவசக் கல்வி கோரி சிலி மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள், கல்வி அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர வழிவகுத்தன. 2024இல் அரசு வேலைவாய்ப்புகளில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவான இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் ஷேக் ஹசீனா தலைமயிலான ஆட்சியை அகற்றியது.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய 3 நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய 3 நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி நாட்டை விட்டு தப்பும் நிலை கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. 2022இல் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார சீரழிவு அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு தொடங்கிவைத்தது. விலைவாசி பன்மடங்காகி அத்தியாவசிய பொருட்கள் எட்டாக்கனியான நிலையில் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். மக்கள் போராட்டம் காட்டுத்தீ போல் பரவி அதிபர் மாளிகையையே சூறையாடும் அளவுக்கு சென்றது. அதிபர் மாளிகையின் நீச்சல் குளத்தில் நீராடி கோபத்தீயை தணித்துக்கொண்டனர் மக்கள். அதிபர் கோட்டாபய ராஜபக்ச, மனைவியுடன் சிங்கப்பூர், தாய்லாந்தில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. மக்கள் எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் ராஜிநாமா செய்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச.
2024இல் வங்கதேசத்தில் ஆகஸ்ட் புரட்சி வெடித்தது. அப்போதைய பிரதமர் ஷேக் ஹசினா அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக மாணவர் புரட்சி வெடித்தது. கொந்தளிப்புடன் போராட்டக்களம் கண்டனர் இளைஞர்கள். வன்முறைகளில் சுமார் 300 பேர் இறந்தனர். போராட்டத்தை அடக்க முழு பலத்துடன் படைகளை ஏவினார் பிரதமர் ஹசினா. ஆனால், அவரது திட்டங்கள் அவருக்கே எதிராக திரும்பியது.
பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் உள்ளே இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அவர் பயன்படுத்திய பொருட்களை தங்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். இதற்கு சற்றுமுன்பாக ஹசினா தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு தப்பினார்.
2022 ஜூலையில் இலங்கையிலும் 2024 ஆகஸ்டில் வங்கதேசத்திலும் நடந்தது 2025 செப்டம்பரில் நேபாளத்தில் அரங்கேறியுள்ளது. லஞ்ச ஊழல், பொருளாதார சீரழிவு காரணங்களால் வெகுண்டெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி முழங்கத் தொடங்கினர். அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்றும் ஏழைபாழைகள் வயிற்றுப்பசி தீர்க்க வழியில்லாமல் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவியது. இதன் விளைவாக ஆட்சியாளர்களுக்கு எதிரான தீ தகிக்கத் தொடங்கியது. இறுதியில் பிரதமர் கே.பி,சர்மா ஒலி ராஜிநாமா செய்தார்.
இவ்வாறு, இந்த 3 நாடுகளிலுமே ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததும் இதன் விளைவாக மூன்றிலுமே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த 3 நாடுகளுமே இந்தியாவின் அண்டை நாடுகளாக அமைந்ததும் கவனம் ஈர்க்கும் ஓர் ஒற்றுமை.
இடைக்கால தலைவராக சுஷிலா கார்கி
இந்நிலையில், அமைதி திரும்பியுள்ள நேபாளத்தில், இன்று 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணொளி வாயிலாக கூடி நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என விவாதித்து இருக்கின்றனர். அதில் பெரும்பாலோரின் தேர்வாக அந்நாடு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி (73) இருந்துள்ளார். இதை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் குமார் கர்ணா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்திருக்கிறார். இந்த இளைஞர்கள் குழு, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கியை நியமிப்பதற்கான பரிந்துரையுடன் நேபாள ராணுவத் தலைவர் சந்திப்பார்கள் என்று ராமன் குமார் கர்ணா தெரிவித்திருக்கிறார். அதேவேளையில் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்க தயாராக இருப்பதாக சுஷிலா கார்க்கியும் தெரிவித்திருக்கிறார்.