model image
model image twitter
உலகம்

இஸ்ரேல் | இறந்துபோன கர்ப்பிணியிடமிருந்து காப்பாற்றப்பட்ட சிசு.. 5 நாட்களுக்குப் பிறகு உயிரிழப்பு!

Prakash J

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது.

ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், காஸாவின் தெற்கு முனையில் உள்ள ரபா நகரில் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. ஆனாலும், அங்கு வான்வழியாகத் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் கர்ப்பிணிப் பெண்ணான சப்ரீன் அல் சகானியும் ஒருவர். இவர் தனது வயிற்றில் 30 வார சிசுவை சுமந்து வந்துள்ளார். இந்த விபத்தில் அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி.. பக்ரைனில் சடலமாக மீட்பு!

இந்தச் சூழலில் கர்ப்பிணிப் பெண்ணான இறந்த சப்ரீன் அல் சகானின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் உடனே அறுவைச்சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். இருப்பினும் குழந்தையானது வெறும் 1.4 கிராம் எடை மட்டுமே இருந்ததால், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில், இன்குபேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டது.

மேலும், 4 வாரங்கள் அந்த குழந்தை மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் அந்தக் குழந்தைக்கு ’சப்ரின் ஜௌடா’ எனவும் பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தக் குழந்தை நேற்று இறந்துபோனதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தை

அந்தக் குழந்தையை தனது கண்காணிப்பில் பராமரித்து வந்த மருத்துவர் முகமது சலாமா, “நானும், இதர மருத்துவர்களும் அந்தக் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தோம், ஆனால் அது இறந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் இது, எனக்குக் கவலையைத் தந்துள்ளது. சுவாச அமைப்பு முதிர்ச்சியடையாத நிலையில்தான் அந்தக் குழந்தை பிறந்தது. மேலும் அந்தக் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமாக இருந்தது. அதுவே அந்தக் குழந்தையின் மரணத்திற்கு வழிவகுத்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஸ்பைடர்மேன் உடையணிந்து சாகச ரீல்ஸ்| இளம் ஜோடியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டெல்லி போலீஸ்!