அமெரிக்கா–ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை முடங்கியதால் மீண்டும் மோதல் வெடிக்கும் அச்சம் நீடிக்கிறது. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான், அமெரிக்கா முற்றுகை தொடர்ந்தால் கப்பல் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என எச்சரிக்கிறது.
பாகிஸ்தான் தலையீடு காரணமாக சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையேயான போரில் 10 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியை தழுவிய நிலையில், எந்நேரம் வேண்டுமானாலும் போர் மீண்டும் வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்த சூழலில் ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை முடக்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவான கப்பல்கள் வெளியேற முடியாமல் அந்த பகுதியில் தனது கடற்படை கப்பல்களை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இதனால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போதுவரை பாகிஸ்தான் தலையீட்டின் பேரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை முட்டாள்தனமானது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது என்றாலும், இறுதி உடன்பாட்டை எட்ட இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் சில அடிப்படை விஷயங்களில் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்கா தனது முற்றுகையைத் திரும்பப் பெறவில்லை என்றால், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து நிச்சயமாகத் தடை செய்யப்படும் என்றும், ஈரான் ஒன்றும் வெனிசுலா கிடையாது என்றும் அவர் எச்சரிகை விடுத்துள்ளார்.
அதே போல, ஈரான் தனது போர் உத்தியின் மூலம் எதிரியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளதாகவும், அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் தங்கள் இலக்குகளை அடையத் தவறி அவர்கள் தோல்வியடைந்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதோடு, ஈரானின் ஆட்சி மாற்றத்தையோ அல்லது ஏவுகணைத் திறனையோ அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.