trump statue ani
உலகம்

எட்டரை அடி உயர தங்கச் சிலை! சர்ச்சைக்குரிய ட்ரம்ப் உருவம்.. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

டிரம்ப்பின் உருவத்தையே வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பு உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது!

PT WEB

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் 8.5 அடி உயர தங்கச் சிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆரஞ்சு கொள்ளைநோய்’ என அழைக்கப்படும் இந்த சிற்பம், ட்ரம்பின் அரசியல் நடவடிக்கைகளையும், வெளியுறவுக் கொள்கைகளையும் கேலிக்கூத்தாக சித்தரிக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்றாலே அரசியல் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை... இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்தே டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு சில நாடுகள் ஆதரவும், சில நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அரசியல் மட்டுமல்ல... டிரம்ப்பின் உருவத்தையே வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பும் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது!

trump statue

பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், டிரம்ப்பின் பிரம்மாண்டமான தங்கச் சிலை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுவும் சாதாரண சிலை கிடையாது... எட்டரை அடி உயரம் கொண்ட இந்தச் சிலையில், டிரம்ப் உருவம் ஆடையின்றி, ஒரு மனிதனின் தோள்கள் மீது அமர்ந்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு கையில் நீதித் தராசும், மற்றொரு கையில் மிகப்பெரிய கோல்ஃப் மட்டையும் இடம்பெற்றுள்ளன. மேலும், உலகத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட கோல்ஃப் பந்தும் சிலையில் இடம்பெற்றுள்ளது. 23 காரட் தங்கத் தகடுகளால் இந்தச் சிலை மெருகூட்டப்பட்டுள்ளது.

இந்தச் சிற்பத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்... ‘தி ஆரஞ்சு பிளேக்’... அதாவது, ‘ஆரஞ்சு கொள்ளைநோய்’. டேனிஷ் கலைஞர் ஜென்ஸ் கால்ஷியோட் உருவாக்கிய இந்தச் சிற்பம், ‘அநீதியின் அரசன்’ என்று வர்ணிக்கப்படுகிறது. டிரம்ப், தன்னைத் தாங்கிக்கொண்டிருக்கும் சிறிய மனிதனின் மீது தனது முழு பாரத்தையும் சுமத்துவதைப் போல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் கீழே,...“நான் ஒரு மனிதனின் முதுகில் அமர்ந்திருக்கிறேன். என் பாரத்தைத் தாங்க முடியாமல் அவன் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உதவ நான் எதையும் செய்வேன்... ஆனால், அவன் முதுகிலிருந்து மட்டும் இறங்க மாட்டேன்” என அந்த வாசகம் குறிப்பிடுகிறது.

ஆனால்... ஏன் டிரம்ப்பை இப்படி சித்தரிக்க வேண்டும்? இதற்கு கலைஞர் சொல்லும் காரணம் இருக்கிறது. டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை, பருவநிலை தொடர்பான நிலைப்பாடுகள் உள்ளிட்டவற்றை விமர்சிக்கும் வகையிலான ஒரு கேலிக்கூத்து கலைப்படைப்பாகவே இதை ஜென்ஸ் கால்ஷியோட் உருவாக்கியுள்ளார். மேலும், இந்தச் சிற்பத்துக்கு ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் ‘பேரரசரின் புதிய ஆடைகள்’ என்ற புகழ்பெற்ற கதையும் ஒரு முக்கியமான தூண்டுதலாக இருந்ததாகக் கலைஞர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கதையில்... ஆடை அணியாத பேரரசர், தான் அற்புதமான ஆடை அணிந்திருப்பதாக நம்புவார். அவரைச் சுற்றியிருப்பவர்களும் பயத்தால் உண்மையைச் சொல்லாமல் இருப்பார்கள். கடைசியில், ஒரு குழந்தை மட்டும் உண்மையைச் சொல்லும்... “பேரரசர் ஆடை அணியவில்லை!” இந்தக் கதையின் கருத்தையே, இன்றைய அரசியல் அதிகாரத்துடன் தொடர்புபடுத்தி இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

TRUMP

இந்தச் சிலை தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது டேனிஷ் அரசியல்வாதியும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினருமான Per Clausen இந்த காட்சிக்கு ஸ்பான்சர் செய்திருக்கிறார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்குள் இதுபோன்று கலைப்படைப்புகளை காட்சிப்படுத்த அதிகாரம் உள்ளது. காட்சிக்கு முன்பாக அதிகாரிகளின் அனுமதி பெற்றே இந்த படைப்பு காட்சி படுத்தப்பட்டுள்ளதால் இது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றதாகவே பார்க்கப்படுகிறது.

ட்ரம்பை விமர்சிக்கும் இந்த சிலையை நாடாளுமன்றத்தில் வைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த உலக மேடையிலேயே இடம் இருக்காது என்று Clausen குறிப்பிட்டுள்ளார். உலகத்தில் அதிகாரமும், அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் நாம் விவாதிக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்ட Clausen, ட்ரம்பின் செயல்கள் ஐரோப்பிய மக்களுக்கு மிக மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ட்ரம்பை சார்ந்திராமல் எப்படி அரசியலை உருமாற்ற வேண்டும் என்று பேச வேண்டிய தேவையிருப்பதாக குறிப்பிட்ட கிளாசன், தீவிர வலதுசாரிகளைத்தவிர அனைவரும் தனது செயலை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.