60 ஆண்டுகளில் முதல்முறை.. ராணுவ மேஜருக்கு மரண தண்டனை.. ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
2009-ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள 'போர்ட் ஹூட்' (Fort Hood) ராணுவ முகாமில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற முன்னாள் அமெரிக்க ராணுவ மேஜர் நிடால் ஹசனுக்கு (Nidal Hasan) மரண தண்டனையை நிறைவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1961-க்குப் பிறகு) யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த உத்தரவின் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தில் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாக இது அமையும்.
ஜோர்டான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனான ராணுவ மேஜர் நிடால் ஹசன், டெக்சாஸின் கில்லீன் அருகே உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தில் ஒரு ராணுவ மனநல மருத்துவராகப் பணியாற்றி வந்தார். 2009-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி, லேசர் குறி பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கியை ஏந்தியிருந்த ஹசன், ’அல்லாஹு அக்பர்’ என்று முழக்கமிட்டவாறே, போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். இதுகுறித்த விசாரணையின்போது, ‘வெளிநாடுகளில் உள்ள தலிபான் தலைவர்களைப் பாதுகாப்பதே தனது நோக்கம்’ என ஹசன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, 2013-இல் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இவரைத் துப்பாக்கியால் சுட்டு (Firing Squad) மரண தண்டனையை நிறைவேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். டென்னசியில் மரண தண்டனைக் கைதியான கிறிஸ்டா பைக்குக்கு விஷ ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த சில நாட்களுக்குப் பிறகு, ஹசனின் மரணதண்டனைக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ராணுவ விதிகளின்படி, அதிபரின் ஒப்புதல் கிடைத்த 60 நாட்களுக்குப் பிறகும், 150 நாட்களுக்குள்ளும் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். மரணதண்டனை நிறைவேற்றப்படும் நேரம் மற்றும் இடத்தை ராணுவச் செயலாளர் தீர்மானிப்பார் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ஹசன் இந்த முடிவை எதிர்த்து குடிமைசார் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். அமெரிக்க ராணுவத்தின் 'ஆர்மி லாயர்' இதழில் மே மாதம் வெளியான ஒரு கட்டுரையின்படி, ஆட்கொணர்வு மனு ஒன்று மரண தண்டனையை, பல ஆண்டுகள் வரை தாமதப்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கிறது.
அமெரிக்க ராணுவத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1961-க்குப் பிறகு) யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த உத்தரவின் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தில் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாக இது அமையும். முன்னதாக, 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக சிப்பாய் ஜான் பென்னட் தூக்கிலிடப்பட்டார். அடுத்து, 2008-இல் அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் ராணுவ சிறப்பு நிபுணர் ரொனால்ட் கிரேயின் மரணதண்டனையை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தார். ஆனால் பின்னர் அது நீதிபதியால் நிறுத்திவைக்கப்பட்டது. அவர் தற்போது தடுப்புக் காவலில் உள்ளார்.

