ஆதிக்க சாதியினரிடமிருந்து கொடூரமான அடக்குமுறைகள், சுரண்டல் போன்றவற்றை எதிர்கொண்ட மக்கள், அவற்றிலிருந்து விடுதலை பெற 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போராட்டம் 20 ஆம் நூற்றாண்டில் மத்தியில் - குமரி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, களியக்காவிளை போன்ற தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் - திருவிதாங்கூரில் இருந்து பிரிந்து சென்னை மாகாணத்துடன் இணைவதற்கு வழிவகுத்தது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து சென்னை மாகாணத்தோடு இணைந்ததற்கு மொழி அடிப்படையிலான பாகுபாடுகள் அங்கு கடைபிடிக்கப்பட்டது மட்டும் காரணம் அல்ல. சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளை தமிழ் மக்கள் அங்கு சந்தித்ததும் மிக முக்கியமான காரணம். வட திருவிதாங்கூரில் ஈழவ சமூக மக்கள் அதிகம் என்றால் தென் திருவிதாங்கூரில் நாடார் சமூக மக்கள் அதிகமிருந்தனர். அம்மக்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளே போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
ஆனால், தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகளே இல்லையா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி. அப்போதிலிருந்து இப்போது வரை சாதியை ஒழிப்பதற்கும், சாதிய ஒடுக்குமுறைகளைக் களைவதற்கும் அரசியல் கட்சிகளும், சாதி ஒழிப்பு இயக்கங்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. ஆனால், சாதி புதிய புதிய பரிமாணத்தில் வேறுவேறு வடிவங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் பாரதியின் வலிமையான வரிகள் குழந்தைகளுக்கான இலக்கியமாக மாறிவிட்டது என்பது பெருந்துயரம்.
தமிழ்நாட்டின் கிராம மற்றும் சில நகர அமைப்புகள் சாதிய ரீதியிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். கட்டுரையாளர் ஜமாலன் காக்கைச் சிறகினிலே இதழில், “தமிழ்நாட்டின் கிராம மற்றும் நகர அமைப்புகளின் புவியியல் சாதிய புவியியலாக அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு இந்த புவியியல் அமைப்புகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் இந்நாள் வரை ஈடுபடவில்லை” என முக்கியமான வரிகளைக் குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற சாதிய அமைப்புகளில் புதிதாகப் பிறக்கும் ஒரு குழந்தை 20 முதல் 30 வயதுக்குள் எதிர்கொள்ளும் பெரும்பாலான அனுபவங்கள், சாதியை அக்குழந்தைக்கு அறிமுகப்படுத்துபவைகளாக மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தை தானாகவே அந்த அமைப்பிற்குள்தான் செல்லும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதுமட்டுமின்றி, கல்வி எல்லோருக்கும் பொதுவாக கிடைக்கக்கூடிய காலத்திலும் சாதி வளர்கிறதே என்று சிலர் கேட்பர். இதுதொடர்பாக, சமீபத்தில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில், டாக்டர் ஜோத்கா என்பவர் கூறிய வார்த்தைகள் மிக முக்கியமானது. “இந்தியா கல்வியறிவு வாய்ந்த நாடாக மாறியிருந்தாலும், சமத்துவமான அல்லது சுதந்திரமான (liberal) நெறிமுறைகளை ஏற்கும் நாடாக மாறவில்லை. குறிப்பாக, இளைஞர்கள் சமூகத்தை மேம்படுத்தவும், மாற்றவும் கல்வியைப் பயன்படுத்தாமல்.. தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டுமே கல்வியைப் பயன்படுத்துகின்றனர். தன்னிறைவு வாழ்க்கையை நோக்கி நகரும் இந்த மாற்றம் குடும்பம் அல்லது சமூகத்தின் பிடியில் இருந்து தளர்ந்துவிடவில்லை. நீங்கள் ஜெண்டர் ஸ்டடீஸ் போன்ற பாடங்களிலேயே பட்டம் பெற்றாலும் கூட உங்கள் சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுவீர்கள்” என்கிறார்.
குறிப்பாக, தனிப்பட்ட நபரிடம் சமூகம் ஒன்றை எதிர்பார்க்கும்.. அது நடக்கவில்லை என்றால் அந்த தனிப்பட்ட நபர் சமூகத்திலிருந்து எதிர்கொள்ளும் அழுத்தம் வார்த்தைகளில் சொல்லி மாளாதது. இங்கே மீண்டும் ஜமாலன் வார்த்தைகளைக் குறிப்பிடலாம். “சாதிய ரீதியான தீண்டாமை பாராட்டும் புவியியல் வாழிட அமைப்பு உருவாக்கும் ஒருபடித்தான உணர்வுகளே சாதிகளின் தனித்துவமான உணர்வுகளாக மாறுகின்றன” என்கிறார்.
இந்நிலையில், சாதி எப்படி இத்தனை ஆண்டுகள் ஆகியும், இத்தனை போராட்டங்களைக் கண்டும் இப்போதும் வலுவாக இருக்கிறது.. இளைஞர்கள் எப்படி சாதிய வளையத்திற்குள் சிக்குகிறார்கள் என்பது குறித்து சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜிடம் பேசினோம். அவர் பேசிய வார்த்தைகள் கட்டுரை வடிவில்...
சாதி எனும் நிறுவனம் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில், எல்லாவிதமான எதிர்ப்புகளையும் கடந்து நிற்கக்கூடிய தன்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதி என்பது மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நிறுவனம். குறிப்பாக, எல்லாவிதமான மாற்றங்களையும் செரிக்கும் வகையில், மிகவும் வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சாதிகள் எந்த அளவுக்கு பரவலாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மிக அதிகமாக எதிர்க்கப்பட்ட நிறுவனமும் சாதிதான்.
தமிழ்நாட்டில், அதிலும் அரசியல் தளத்தில் அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்கள், ஆலய நுழைவு போராட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சி கூலி உயர்வோடு சாதிப் பிரச்னையை இணைத்து நடத்திய கீழத்தஞ்சை மாவட்ட போராட்டங்கள், திராவிட இயக்கங்கள், அதிலும் குறிப்பாக பெரியார் சாதி ஒழிப்புக்காக செய்த முயற்சிகள் என சாதி ஒழிப்பு முயற்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம். இதை எல்லாவற்றையும் விட, ஆன்மீகத் தளத்திலேயே - ஆன்மிகத்தின் ஒரு பகுதியாகவே - வைகுண்ட சாமிகள், வள்ளலார், ராமானுஜர் போன்றோர் சாதி எதிர்ப்பில் பங்கு வகித்திருக்கிறார்கள்.
அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும், ஆன்மீகத் தளத்திலும் வலுவாக எதிர்க்கப்பட்ட சாதி இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இவ்வளவு வல்லமையாக இருக்கிறது என்றால், சாதி எனும் நிறுவனம் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில் இருக்கிறது.
அடுத்ததாக சாதி எங்கு நிலைகொண்டிருக்கிறது என்று ஆராய்ந்தால், அது ‘பழக்க வழக்கங்களில்’ இருப்பதாக பாபாசாகேப் அம்பேத்கர் சொல்கிறார். குறிப்பாக பழக்க வழக்கங்களிலும் சடங்கு சம்பிரதாயங்களிலும் சாதி வாழ்வதாக அம்பேத்கர் சொல்கிறார். அதேபோல் சாதிக்கு இருக்கக்கூடிய பொருளாதார உறவுகளைப் பற்றியும் பேசுகிறார்.
நாம் பெரிய சாதி எனும் சிந்தனையிலும், அதன் பெருமிதத்திலும் மாற்றம் வரவில்லை.
இந்தியா முழுவதிலும், தலித்துகளிடமும், பழங்குடியினரிடமும் நிலம் இல்லை. பிற்படுத்தப்பட்டோரிடம் ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால், ஒருகாலத்தில் முற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம்தான் முழுக்க முழுக்க நிலம் இருந்தது. அதேபோல் கல்வியும் சாதிபார்த்துதான் கொடுக்கப்பட்டது. சொத்து வைத்துக்கொள்ளவும் சாதித்தகுதி வேண்டும். ஓட்டு போடுவதற்கே சொத்து வேண்டுமென்ற நிலைமையெல்லாம் இருந்திருக்கிறதே.
இன்று இந்நிலைமைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. கல்வியும், இட ஒதுக்கீடும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, நம் கண்ணுக்கு முன்னே பல தீண்டாமைகள் குறைந்திருக்கிறது. உதாரணமாக,இதற்கு முன்பு இரட்டை குவளை முறை இல்லாத டீக்கடைகளே இல்லை எனும் நிலை. இதுபோன்ற நிலைமைகள் எல்லாம் மாறி தீண்டாமை வேறு வேறு நிலைமைகளை அடைந்திருக்கிறது. ஆனால், நாம் பெரிய சாதி எனும் சிந்தனையிலும், அதன் பெருமிதத்திலும் மாற்றம் வரவில்லை.
நேரடியான சாதிய வெளிப்பாடுகள் குறைந்துவரும் அதே நேரத்தில் சாதியின் பெருமிதங்களை மிகத் தீவிரமாக கட்டமைக்கிறார்கள். இன்று அதிகமான ஆய்வுகள் சாதியைப் பற்றித்தான் நடக்கிறது. குறிப்பாக சாதியப் பெருமிதங்கள் பற்றிய ஆய்வுகள் அதிகமாக நடக்கிறது. எல்லா விதமான சாதிகளும் தங்களுடைய வரலாறுகளைத் தேடி ஓடுகிறார்கள். தமிழர்கள் வரலாறு, சமண, பௌத்தம் என இனரீதியான வரலாறுகளைத் தேடிப்போன காலங்களைக் கடந்து இன்றோ சாதிய ரீதியான வரலாறுகளைத் தேடிச் செல்கிறார்கள்; அதன் வேர்களைத் தேடிச் செல்கிறார்கள். ஆனால், அது பொய்யான வேர். அவையெல்லாம் வரலாற்று புரட்டுகளால் உருவான சாதிய கதைகள். அக்கதைகளை உண்மைகளை என நம்புகின்றனர்.
இதனால், ஒருகாலக்கட்டத்தில் நிலங்கள் எங்களிடம்தான் இருந்தது; இடையே அது பிடுங்கப்பட்டது என அநியாயமான பொய்களைச் சொல்கிறார்கள். அதை அந்த சாதி இளைஞர்களும் நம்புகிறார்கள். அப்படியில்லை என்றால், வணிகத்தில் நாம்தான் முதலிடத்தில் இருந்தோம் என்றோ அல்லது அறிவில் மிகச் சிறந்தவர்களாக இருந்தோம் என்றோ கதைகளை கட்டமைக்கிறார்கள். இக்கட்டுக் கதைகளை இளைஞர்கள் நம்பக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். எனவே படித்த இளைஞர்களின் மத்தியில்தான் மிகத்தீவிரமான சாதியின் தாக்கத்தினை நம்மால் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம் கல்வி கற்ற இளைஞர்களிடம் கட்டமைக்கப்படுகிற சாதிய பெருமிதங்கள்.
இங்கே சாதிகளுக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லை. ஆனால், சாதிக்கு ஆபத்து வந்ததுபோல் கட்டமைக்கிறார்கள்.
இவையொன்றும் தானாக நடக்கவில்லை. அனைத்து சாதிகளிடமும் இருக்கும் எலைட் மக்கள் சாதியப் பெருமிதங்களை காத்துக்கொள்ள நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு எந்த சாதிச் சங்கமும் உதவி செய்யவில்லை. ஆனால், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அனைத்து சாதிச்சங்கங்களும் பாராட்டுக் கூட்டங்களை நடத்துகின்றன. ஒருநாள் முழுதும் நடக்கின்ற அதுபோன்ற கூட்டங்களில் முழுக்க முழுக்க சாதியப் பெருமிதங்களைத்தான் பேசுகிறார்கள். இங்கே சாதிகளுக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லை. ஆனால், சாதிக்கு ஆபத்து வந்ததுபோல் கட்டமைக்கிறார்கள்.
ஆண்ட பரம்பரை எனும் கதைகள் குறிப்பிட்ட சாதிகளில் முதலில் கட்டமைக்கப்பட்டது; அதைப்பார்த்து எல்லோரும் அதையே செய்வதுபோல் இருக்கிறது. அம்பேத்கர் சொல்கிறாரே, ‘சாதி என்பது பார்த்து ஒழுகுதல்’ என்று. குறிப்பாக சாதியப் பெருமிதங்கள் கட்டமைக்கப்படுவதுதான் இளைஞர்களை பெருமளவில் பாதிப்பதாக இருக்கிறது.
நவீன உலகம் என்கிறார்கள்.. நாம் என்ன நவீனம் ஆகிவிட்டோம். இந்தியாவிலிருக்கும் எந்த ஒரு கோவிலிலாவது பிராமணர்களைத் தவிர யாராவது தானாக அர்ச்சகர் ஆக முடிகிறதா? அதுதான் நிலை என்றால் இந்திய சமூகம் என்ன முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. குறிப்பாக இந்திய சமூகமும் இவை அத்தனையையும் பார்க்கிறதுதானே? அப்படியானால், சமூகத்தில் சாதிக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது என்பதுதானே அர்த்தம். இவைகள் எல்லாம் நம் கண் முன்னால் இருக்கக்கூடிய காட்சிகள். கிராமங்களில் இரட்டைக் குவளை முறைகள் ஒழிந்திருக்கிறது. ஆனால், கோவில்களில் கருவறைகளில் மாற்றங்கள் நிகழவில்லையே. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடந்துவிட்டது. ஆனால், இன்றும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டுக் கோவில்களில் பட்டியலின மக்களால் வழிபட முடியவில்லை.
இதை மீட்டுருவாக்கம் செய்யும் பணி அறிவுத்தளத்தில் மட்டும்தான் நடக்க முடியும். விஞ்ஞான உலகில் அறிமுகமாகும் அனைத்து விதமான சாதனங்களையும் அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் துடிக்கிறோம். ஆனால், நாம் சிந்தனை அளவில் நவீனமடையாமல் பிற்போக்குத் தனமான சிந்தனைகளில் மூழ்கி இருக்கிறோம். எனவே, சிந்தனை மாற்றம் மற்றும் பண்பாட்டு மாற்றம் என்பது அதுதொடர்பான சரியான கல்வி மூலமாக மட்டுமே நிகழ முடியும். இணையதளங்களில் சாதியின் பெருமிதங்களை ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் பார்க்க முடியும். ஆனால், சாதி என்பது அறிவியல் ரீதியானது அல்ல என்பதற்கு எந்தவொரு அடிப்படைத் தரவுகளும் இல்லை என்பதற்கான சான்றுகள் குறைவாகத்தான் இருக்கிறது.
உலகில் எங்கும் தச்சர்களுக்கான சாதி இல்லை. ஆனால், உலகமெங்கிலும் மேசைகள், நாற்காலிகள் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள். உலகெங்கிலும் நகைகள் செய்கிறார்கள். ஆனால், அதற்கான சாதிப்பெயர்களோடு இந்தியாவைத் தவிர வேறு எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பான விஷயங்கள் இந்திய சமூகத்தில் பேசப்பட வேண்டும். குறிப்பாக, சொத்துடமைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வர வேண்டும். நிலமற்றவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அடிப்படையில்தான் சிந்திக்கிறார்கள். குறிப்பாக ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தினைக் கொண்டுவந்தால் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களது வாக்குகளை இழந்துவிடுவோம் என பெரிய கட்சிகள் நினைக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரை மேடைகளில் சாதி ஒழிப்பை இயக்கமாக முன்னெடுத்து பேச வேண்டும். சாதிமறுப்புத் திருமணங்கள் கட்சி உறிப்பினர்களிடையே இயல்பாகவே நடைபெறுமாறு இருக்க வேண்டும்.
சாதி குறித்தான அறிவுப்பூர்வமான விளக்கங்கள் பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் இடம்பெறுமாறு செய்ய வேண்டும். பொது இடங்களில் சாதியை ஒழிப்பதற்கு ஆதரவான கருத்துகள் கொண்ட அறிவிப்புப் பலகைகள் இடம்பெற வேண்டும். சாதி ஒழிப்பிற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை அரசாங்கமே முன்னெடுத்து நடத்த வேண்டும்.