"சனாதன தர்மம் இந்தியாவை அழித்துவிட்டது” - சரத் பவார் எம்.எல்.ஏ கருத்தால் பாஜக எதிர்ப்பு!
தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் அணியின் எம்.எல்.ஏ. ஜிதேந்திர ஆவாத், "சனாதன தர்மம் இந்தியாவை அழித்துவிட்டது" எனத் தெரிவித்த கருத்து, மகராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாகூர் உட்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆவாத் சனாதன தர்மத்தை விமர்சித்துப் பேசினார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் பிருதிவ்ராஜ் சவான், காவி பயங்கரவாதத்தை சனாதன பயங்கரவாதம் என்று குறிப்பிட வேண்டும் என்று கூறியிருந்தார். பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆவாத், "சனாதன தர்மம் என்று ஒரு மதம் ஒருபோதும் இருந்ததில்லை. நாங்கள் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் முடிசூட்டு விழாவை தடுத்ததே இந்த சனாதன தர்மம் தான்" என்றார்.
பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பெளத்த துறவிகள் புலே போன்ற சீர்திருத்தவாதிகள், டாக்டர் அம்பேத்கர், போன்றோரை ஒடுக்கியவர்கள் "சனாதன பயங்கரவாதிகள்" என்று அவாத் குறிப்பிட்டிருந்தார். பாஜக எம்.பி. சம்பித் பத்ரா, ஆவாத் மற்றும் சவானை கடுமையாக விமர்சித்துள்ளார். "காங்கிரஸ் கட்சியின் முழு அமைப்பும் சனாதன தர்மத்தை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்துகிறது" என்றும் பத்ரா கூறினார். சனாதன தர்மம் குறித்து ஆவாதின் கருத்துதான் சரத்பவார் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடா என்று அவர் கேள்வி எழுப்பினார். ஆவாத் உண்மையையும் இந்து மதக் கடவுளான சிவனையும் இழிவுபடுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம், சிவசேனா தலைவர் ஷைனா என்.சி. மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ஷம்புராஜ் தேசாய் ஆகியோரும் ஆவாத்தின் கருத்துக்களை விமர்சித்துள்ளனர். சனாதன தர்மம் நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்துவதாகத் தெரிவித்தனர்.