வங்காள மொழி வங்கதேச மொழியா? - டெல்லி காவல்துறையின் செயலால் மம்தா பானர்ஜி ஆவேசம்!
வங்காள மொழியை வங்கதேச மொழி என டெல்லி காவல்துறை குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது வங்க மக்களை அவமதிக்கும் செயல் என்றும் அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். இது வங்காளிகளுக்கு எதிரான மத்திய அரசின் மனப்பான்மையை காட்டுவதாகவும் மம்தா விமர்சித்துள்ளார். நாட்டின் தேசிய கீதமே வங்கமொழியில் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டதுதான் என்பதையும் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியதாக சிலரை அண்மையில் டெல்லி காவல் துறை கைது செய்தது. அவர்களிடம் விசாரணை செய்வதற்காக வங்கதேச தேசிய மொழி அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என டெல்லியிலுள்ள மேற்கு வங்காள அரசின் அலுவலகத்திற்கு காவல் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதுதான் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகள் என்ற பெயரில் மேற்கு வங்க மக்கள் மீது பாஜக ஆளும் மாநிலங்களில் அடக்குமுறை ஏவப்படுதாக குற்றஞ்சாட்டி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தி வரும் நிலையில் புதிதாக இந்த சர்ச்சை வெடித்துள்ளது.