ENGvIND| இறுதிப் பந்துவரை திக் திக்.. 6 ரன்னில் இந்தியா த்ரில் வெற்றி! 2-2 என தொடர் சமன்!
மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாமல் இங்கிலாந்திற்கு சென்ற சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 1-2 என பின்தங்கியது.
நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் திறமைகளை இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய போதிலும், அவர்களால் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அணியில் இருக்கும் அனுபவமின்மை மற்றும் கேப்டன்சியில் முதிர்ச்சி இல்லாமை போன்றவை இந்தியாவை 2 போட்டிகளில் வெற்றியின் அருகாமையில் இருந்தபோதும் தோல்விக்கு வழிவகுத்தது.
இந்த சூழலில் 1-2 என பின் தங்கிய இந்திய அணி 5வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் களம்கண்டது.
6 ரன்னில் த்ரில் வெற்றி..
லண்டன் ஓவலில் பரபரப்பாக தொடங்கிய 5வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்தை 247 ரன்னுக்கு சுருட்டிய இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்து அசத்தியது. அபாரமாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் சதமடிக்க, இறுதியில் வந்து 4 சிக்சர்களை பறக்கவிட்ட வாஷிங்டன் சுந்தர் இந்தியாவை நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
இதன்மூலம் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி 106 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 19 ரன்னில் ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்ச்சை பவுண்டரி லைனில் பிடித்த முகமது சிராஜ், பந்தை பிடித்துவிட்டு பவுண்டரி லைனில் காலை வைத்து முக்கியமான விக்கெட்டை தவறவிட்டார்.
அதற்குபிறகு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். ஆனால் முக்கியமான தருணத்தில் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரையும் அவுட்டாக்கிய இந்திய அணி மீண்டும் ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது.
4வது நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 339/6 என முடிக்க, இங்கிலாந்து வெற்றிபெற 35 ரன்களும், இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகளும் தேவை என போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு நகர்ந்தது.
எல்லோரும் இங்கிலாந்தே வெற்றிபெற போகிறது என்ற எண்ணத்தில் இருந்தபோது, 5வது நாளில் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடி வீரரான ஜேமி ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் முகமது சிராஜ். மீண்டும் வந்த சிராஜ் ஆல்ரவுண்டர் ஓவர்டனை வெளியேற்ற ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது.
ஆனால் களத்தில் இருந்த பவுலிங் ஆல்ரவுண்டர் அட்கின்ஸன் இந்தியாவிற்கு தொல்லை கொடுத்தார். 9வது விக்கெட் விழும்போது இங்கிலாந்துக்கு 17 ரன்களும், இந்தியாவிற்கு ஒரு விக்கெட்டும் தேவையாக இருந்தது. ஆனால் சிராஜ் ஓவரில் அட்கின்ஸன் சிக்சர் அடிக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. கையில் ஏற்பட்ட காயத்துடன் ஒரு கையுடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், இங்கிலாந்து வெற்றிக்காக போராடினார்.
வெற்றிக்கு 7 ரன்களே இருக்க ஒரு சிக்சர், பவுண்டரி கிடைக்காதா என அட்கின்ஸன் போராட, அற்புதமான யார்க்கர் பந்தை வீசிய சிராஜ் அட்கின்ஸனை வீழ்த்த இந்தியா 6 ரன்னில் த்ரில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன்செய்து அசத்தியது இந்தியா. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
754 ரன்களை குவித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். முதல்முறையாக இங்கிலாந்துக்கு பயணம் செய்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய கேப்டன் சுப்மன் கில் தோல்வி இல்லாமல் நாடு திரும்புகின்றனர்.