அண்ணா, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் pt web
தமிழ்நாடு

அண்ணா குறித்த விமர்சனம்.. எச்சரிக்கும் அதிமுக தலைவர்கள்.. அதிமுக - பாஜக கூட்டணி முறிவா?

"‘திராவிட நரிகள்’ என்ற சொற்பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்து முன்னணிக் கூட்டங்களில் பயன்படுத்தக்கூடிய சொற்கள்தான்" - பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா

இரா.செந்தில் கரிகாலன்

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சை

“அதிமுக கொள்கையில் உறுதியாக உள்ளது. சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அண்ணா, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதற்காக எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு தமிழ்நாட்டுக்கே தெரியும்” என அதிமுக முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஆர்.பி.உதயகுமார் கருத்துத் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்தமுறை அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா குறித்து பேசியதே காரணமாகச் சொல்லப்பட்டது. அதைக் குறிப்பிட்டுத்தான் தற்போதும் அதிமுக தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதிமுக - பாஜக உறவுக்குள் மீண்டும் விரிசல் உண்டாகிறதா. நடப்பது என்ன? விரிவாகப் பார்ப்போம்.

முருக பக்தர்கள் மாநாடு

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உட்பட ஏராளமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் இந்து முன்னணியின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த பெரியார், அண்ணா மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக தலைவர்கள் முன்னிலையிலேயே அவர்களது கொள்கை தலைவர்களான பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ வெளியிடப்பட்டது, தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளானது. இந்த விவகாரத்தில் திமுகவினர் மிகக் கடுமையாக அதிமுகவை விமர்சனம் செய்தனர்.

அதிமுக ஏற்கவில்லை

இந்நிலையில் நேற்று அதிமுக ஐ.டி.விங் சார்பாக அறிக்கை வெளியானது. அதில், “அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விழைகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அண்ணாவை அவமதித்த செயல் வருத்தமளிப்பதாக கருத்துத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.. “முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா விடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை. அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவரும் அறிவார்கள்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இந்தநிலையில் இன்று இந்த விவகாரம் குறித்து காணொலி வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். அதில், “அண்ணா, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதற்காக இ.பி.எஸ் எடுத்த முடிவு தமிழ்நாட்டுக்கே தெரியும். முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே பங்கேற்றோம். அரசியல் இருக்காது என நம்பினோம். அதிமுக கொள்கையில் உறுதியாக உள்ளது. சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாங்கள் பின்னால் அமர்ந்திருந்ததால் வீடியோவை பார்க்க வாய்ப்பில்லை. அந்த முருகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே, ஒலிப்பரப்பான அந்த வீடியோவுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி

2023-ம் ஆண்டு செப்டம்பரில், சானாதனம் குறித்து துணை முதல்வர் உதயநிதி பேசியதைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பாஜகவின் அப்போதைய தலைவர் அண்ணாமலை “மதுரையில் 1956ல் தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசினார். அதைக்கேட்டு முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பிடி ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்தனர்” என பேச, அது அதிமுகவினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அதிமுக - பாஜக கூட்டணியும் முறிந்தது.

இந்தநிலையில், தற்போதும் அண்ணா விவகாரம் விசுவரூபம் எடுத்திருக்கிறது. அண்ணாவைப் பற்றிப் பேசினால் கடந்தகாலத்தில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பேசிவருகின்றனர்.

அது பாஜகவின் கூட்டமல்ல

எஸ் ஜி சூர்யா

இந்தநிலையில், இந்த விவகாரத்தில் பாஜக தரப்பின் பதில் என்னவென மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “திமுக கூட்டணிக்குள் நடக்கும் பிரச்னைகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லக்கூடாது என திசை திருப்பும் நடவடிக்கையாக, அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் திட்டம் இது.. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த உரசலும் இல்லை. மதுரையில் நடந்த கூட்டம் பாஜக நடத்திய கூட்டம் கிடையாது; அது இந்து முன்னணி நடத்திய கூட்டம். அந்த கூட்டத்தில் எந்த தலைவரையும் கொச்சைப்படுத்தும் வகையிலோ அல்லது இழிவுபடுத்தும் வகையிலோ வாசகங்கள் இல்லை.

விமர்சனம் இல்லை

திமுக இப்படித் திரித்துக் கூறியதால், அதிமுகவினருக்கு அதை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அதிமுகவின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டிய தொனியில் இது பொருள் கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக அமைச்சர்கள் கூறுவதுபோல் காணொளியில் விமர்சனம் இல்லை என்பதுதான் எங்களது வாதம். ஒரேஒரு இடத்தில் இரண்டு நொடிகளுக்கு ஒரு புகைப்படம் வருகிறது. அது, ஈவெ ராமசாமி, கருணாநிதி, அண்ணாதுரை என மூன்று பேர் இருக்கும் ஒரு இடம்... அதில், ‘திராவிட நரிகள்’ என்ற சொற்பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்து முன்னணிக் கூட்டங்களில் பயன்படுத்தக்கூடிய சொற்கள்தான். திமுக இப்படித் திரித்துக் கூறியதால், அதிமுகவினருக்கு அதை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அதிமுகவின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டிய தொனியில் இது பொருள் கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது மிக மிகச் சிறிய பிரச்னை... 8 மணி நேர மாநாட்டில் இரு நொடிகள் வந்த புகைப்படத்தை வைத்து திமுக இப்படி ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயலுகிறது என்றால் திமுக எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதற்கு உதாரணம்” எனத் தெரிவித்தார்.