சத்தீஸ்கர் | கொல்லப்படும் மாவோயிஸ்ட்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்படும் மாவோயிஸ்ட்களில் பெண்களின் விகிதம் கணிசமாக அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் சத்தீஸ்கரில் 217 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 74 பேர் அதாவது மூன்றில் ஒரு பங்குக்குமேல் பெண்கள். இந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதிவரை கொல்லப்பட்ட 195 மாவோயிஸ்ட்களில் 82 பேர் பெண்கள். உயிரிழக்கும் மாவோயிஸ்ட்களில் பெண்களின் விகிதம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டிலிருந்தே மாவோயிஸ்ட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் பெண் மாவோயிஸ்ட்கள் கொல்லப்படுவது ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. 2019இல் கொல்லப்பட்ட 65 மாவோயிஸ்ட்களில் 17 பேர் அதாவது 26.2 விழுக்காடு பெண்கள்,. 2022ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட 30 மாவோயிஸ்ட்களில் ஒன்பது பேர் அதாவது சுமார் 30 விழுக்காடு பெண்கள். இது 2024இல் 36.1 விழுக்காடாகவும் 2025இன் முதல் ஆறு மாதங்களில் 42.1 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் வசிக்கும் இளம் பெண்கள் மூளைச் சலவை செய்து மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்க்கப்படுவதாகவும் பாதுகாப்புப் படையினர் தாக்க்குதலை எதிர்கொள்ளுபோது அவர்கள் களத்தில் இறக்கப்பட்டு பலிகடா ஆக்கப்படுவதாகவும் பஸ்தர் பகுதி தலைமை ஆய்வாளர் பி.சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.