செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு pt web
தமிழ்நாடு

”100 நாட்கள் கூட தாங்காது..” தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேசியது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழக்த்தில் இணைந்திருக்கிறார். இதையடுத்து, அவரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில், தவெக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

PT WEB

தவெகவில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உட்பட தவெக மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர். முதலில் பேசிய தவெக மாநில நிர்வாகிகள் செங்கோட்டையனை தவெகவிற்கு வரவேற்றுப் பேசினர். தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், ”அதிமுகவில் புரட்சித் தலைவரால் நான் அடையாளப்படுத்தப்பட்டவன். 1972ஆம் ஆண்டு அதிமுக தொடங்கியபோது எம்.ஜி.ஆர்-க்குப் பின்னால் அணிவகுத்த தொண்டர்களில் நானும் ஒருவன். 1975-ல் பொதுக்குழு நடைபெறும்போது, முழுப்பொறுப்பும் என்னிடம் ஒப்படைத்தார்கள். அந்தப் பணிகளை தலைவர்கள் பாராட்டும் வகையில் முடித்து, அவர் இருக்கும் சத்தியா ஸ்டுடியோவில் சந்திக்கும் போது என்னைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

அப்போது இருந்த எதிர்க்கட்சிகள் இந்தக் கட்சி 100 நாட்கள் கூட நடக்காது, 100 நாள் படம் என்று கூறுவார்களே அது போல இதுவும் முடிந்து விடும் எனக் கூறினார்கள். ஆனால், அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவரது காலத்தில், 3 முறை முதலமைச்சராக இருந்தவர். பத்தாயிரம் மைல் தூர்த்தில் இருந்த போது கூட வெற்றி பெற்று தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவரின் மறைவுக்குப் பிறகு, இயக்கம் இரண்டு கூறுகளாக போன போது, புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் பயணித்தேன். அவரால் நான் பாராட்டப்பட்டிருக்கிறேன்.

பிறகு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆட்சி நடத்தினோம். காலச்சூழலில் அதிமுக மூன்று கூறுகளாக பிரிந்தது. ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை வைத்தோம். ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை.

நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என கண்டித்து விடுவான் இதுதான் இன்றைய சூழ்நிலை. அதன்படி தான், நான் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபடும்போது என்னை பொறுப்புகளிலிருந்து நீக்கினார்கள். தொடர்ந்து, தேவர் ஜெயந்தியில் நான் கலந்து கொண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் பேசியதால், என்னைக் கட்சி அடிப்படை உறுப்பினரிலிருந்து கூட நீக்கினார்கள். கட்சிக்கு ஏற்றத்தாழ்வுகளை கடந்து உழைத்த எனக்கு கிடைத்தப் பரிசு நீக்கம். என்னை மட்டும் கட்சியிலிருந்து, நீக்கவில்லை. என்னை சார்ந்தவர்களையும் நீக்கினார்கள். அதிமுகவில் இருக்கும் ஒருவர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றதனால், நீ ஏன் அவரை அனுமதித்தாய் என அவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்கள்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்

இதைத் தொடர்ந்தே, தெளிவான முடிவுக்குப் பிறகு நேற்று எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கிறேன். என்னுடைய பயணைத்தை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் ஒரு தூய்மையான ஆட்சி மலர்வதற்கு, ஒரு மாபெரும் இயக்கத்தை விஜய் உருவாக்கியிருக்கிறார். குழந்தைகள் கூட விஜய்க்கு ஓட்டளிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் கேட்கும் நிலை, தமிழ்நாட்டில் இருக்கிறது.

காரணம், தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதன்காரணமாகவே விஜயின் அரசியல் பயணம் இன்று வெற்றிப்பயணமாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் இவர்கள் மட்டும் தான் ஆளவேண்டுமா? தூய்மையான அரசியலை மேற்கொள்வதற்கு வேறொருவர் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். தமிழக மக்கள் தவெகவிற்கு வெற்றியை அளிக்க காத்துக்கொண்டிருக்கிறாகள். 2026 தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார். அப்போது, நான் ஒருங்கிணைக்க வேண்டும் என கெடு கொடுக்கவில்லை, 1 மாதமோ 2 மாதமோ ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் தெரிவித்தேன். அது ஊடகங்களில் திரித்துக் கூறப்பட்டுவிட்டது. திமுகவில் இருந்தோ அல்லது வேறு கட்சிகளிலிருந்தோ என்னை யாரும் அணுகவில்லை. சேகர்பாபுவை சந்தித்ததாக ஒரு படத்தையாவது நீங்கள் காட்டிவிடுங்கள். தவெக இன்று நான் வந்ததற்கு காரணம் மாற்றத்திற்காகவே. மேலும், மக்களிடையே தவெகவிற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அதனால் தான் ஊடகங்கள் அவரை சுற்றி சுற்றி செய்திகள் வெளியிடுகின்றன. இது, மக்களின் எதிர்பார்ப்பு இருப்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, செங்கோட்டையனுக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்பதை இன்று மாலை தவெக தலைவர் விஜய் அறிவிப்பார் என தவெக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.