அதிமுக ஒருங்கிணைப்பு | “மறப்போம் மன்னிப்போம்” 10 நாள் அவகாசம் முடிவு., செங்கோட்டையன் சொன்னது என்ன?
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு விதித்திருந்த 10 நாள் காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில், 2026இல் அதிமுக ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் செங்கோட்டையனிடம் பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் உரசல் ஏற்பட்டு வந்த நிலையில், அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும் எனவும், அதற்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி செய்தியாளர் சந்தித்து தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையனின் இந்த கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உட்பட அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இந்த கருத்தை வரவேற்றிருந்தனர். இந்தநிலையில், இந்த கருத்தை தெரிவித்த அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதனையத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித் ஷாவை சந்த்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியிருந்தார்.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும், அதன் அடிப்படையிலேயே, கடந்த 5 ஆம் தேதி கருத்துகளை வெளிப்படுத்தினேன். இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்திற்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மறப்போம், மன்னிப்போம் என அண்ணா கூறியதை போல், அவரது வழியில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்.பேசுகையில், “அதிமுக ஒன்றிணைவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து அதிமுகவை காப்பார்கள். செங்கோட்டையன் உடன் நானும் பேசிக்கொண்டிருக்கிறேன் அவரும் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.தொடர்ந்து, சசிகலா, செங்கோட்டையன் தினகரன் போன்றவர்கள் அடுத்த வாரம் சந்தித்து பேச வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார். மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு..... அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை” என பதில் அளித்தார்.