”செங்கோட்டையன் வருகை எம்.ஜி.ஆர் இமேஜை விஜய்க்கு பெற்றுத்தரும்”... அரசியல் விமர்சகர்கள் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திக்கிறார். இந்நிலையில், அவருக்கு தவெக நிர்வாக குழுவை வழி நடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
”எம்.ஜி.ஆர் இமேஜை விஜய்க்கு கூடுதலாக பெற்றுத்தரும்” - ரவீந்திரன் துரைசாமி
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி இதுதொடர்பாகப் பேசுகையில், “தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது விஜய்க்கு சாதகமாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாகவும்தான் முடியும். விஜய்க்கு இமேஜ், கூட்டம் சேர்க்கும் தன்மை என எல்லாம் இருந்தாலும், வேட்பாளர்கள் கிடையாது. கமல்ஹாசன் அளவிற்குக் கூட விஜயிடம் வேட்பாளர்கள் இல்லை. பிரசாந்த் கிஷோர் எப்படி வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் திணறினாரோ அதுபோல் விஜயும் திணறுவார் என்ற கருத்து விஜய் மீது இருந்தது. தவெகவில் செங்கோட்டையன் இணைந்தன் மூலம் அதிமுக அதிருப்தியாளர்களை தமிழகம் முழுவதும் வேட்பாளர்களாக செங்கோட்டையனால் நிறுத்த முடியும். செங்கோட்டையனின் வருகை என்பது எம்ஜிஆர் இமேஜை விஜய்க்கு கூடுதலாக பெற்றுத்தரும். தவெக என்பது அதிமுகவின் பிளவுக்கட்சி என்ற தோற்றத்தை எம்ஜிஆரை முன்னிறுத்தி கொண்டு செல்வார் என்று தெரிகிறது” எனத் தெரிவித்தார்.
”இபிஎஸ்க்கே பெரும்பங்கு உண்டு”- துரை கருணா
திராவிட ஆய்வாளர் துரை கருணா இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசுகையில், “செங்கோட்டையனுக்கு இப்படிப்பட்ட நெருக்கடியை உருவாக்கியதில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பங்கு உண்டு. பழனிசாமியை அரசியலில் அறிமுகப்படுத்தி அவரது வளர்ச்சிக்கும், அவருக்கு பொறுப்புகள் கிடைக்க உறுதுணையாக இருந்தவரும் தான் செங்கோட்டையன். அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா என இருதலைவர்களிடமும் அணுக்கமாக இருந்தவர். 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
இப்படி அதிமுகவில் தொடர்ச்சியாக பணியாற்றிய ஒருவர் அதிமுகவில் வெளியேற்றப்பட்ட உடனே இத்தகைய முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டிருக்கிறார். பெரும்பாலான அதிமுக தொண்டர்களிடையே இது கலக்கத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. செங்கோட்டையன் கொஞ்சநாள் பொறுத்திருக்கலாம் என்றுதான் அதிமுக தொண்டர்கள் சொன்னார்கள். கொங்கு மண்டல அதிமுக என்று ஒரு கட்சியைத் தொடங்கி கொஞ்ச நாள் அமைதியாக இருந்துவிட்டு பின் அதிமுகவை மீட்டெடுப்பதற்கு முயற்சிக்கலாம் என்றெனர். ஆனால், அரசியலில் தனது இருப்பை தக்க வைப்பதற்காக தவெகவில் இணைந்திருக்கிறார். இது தவெகவிற்கு சாதகமான அம்சமாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

