தவெக தலைவர் விஜய், பிரதமர் மோடி pt web
தமிழ்நாடு

“தவெக ஒரு மூடர்கூடம்” | விஜய் வெளியிட்ட அதிரடி அறிக்கை; திமுக & பாஜக கொடுத்த காட்டமான எதிர்வினை!

சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஜ.க. கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு.

Angeshwar G

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சோழர்கள் தொடர்பான கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனதாக தெரிவித்திருந்தார். மேலும், ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்கள் நம் தேசத்தின் அடையாளம் என பெருமிதம் தெரிவித்த பிரதமர், சோழ சாம்ராஜ்யம் நம் பாரத தேசத்தின் பொற்காலங்களில் ஒன்று என குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி எனவும், நம்நாட்டை ஆட்சி செய்த பிரிட்டிஷாருக்கு முன்பே ஜனநாயகத்துக்கான முன்னோடியாக சோழராட்சி இருந்ததாகவும் தெரிவித்தார்.

PMModi

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழ் மண்ணுக்கும் தமிழகத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, தமிழையும் தமிழ்நாட்டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வந்து, ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறிந்து நமக்குப் பாடம் எடுப்பது போலவும் பேசிச் சென்றுள்ளார்.

75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக்கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.. தமிழர் பெருமையான சோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது. இதையெல்லாம் செய்யாமல், ஒன்றியப் பிரதமர் வருகை தமிழ்நாட்டுக்குப் பெருமை என்று வாஞ்சையாகச் சொல்லிச் சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.

சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஜ.க. கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு.

திமுக- பாஜக அரசியல் ஆதாய நாடகம்: விஜய்

எதிர் எதிராக இருப்பது போல காட்டிக்கொண்டே, உள்ளுக்குள் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தினை அரங்கேற்றும் தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் ஓரணியில் கபடதாரிகள் என்றுதானே அழைக்க வேண்டும்?

நாம் இப்படிச் சொல்வது, மறைமுகமாக ஓரணியில் இணைந்து இருக்கும் இவ்விரு கபடதாரிகளுக்கும், மக்களுக்குத் த.வெ.க. உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். அதற்கு என்ன செய்ய? உண்மை ஒருநாள் அம்பலமாகத்தானே செய்யும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தவெக இயக்கம் ஒரு மூடர்கூடம்

இந்நிலையில் விஜயின் இந்த அறிக்கை தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “தவெக இயக்கம் என்பது ஒரு மூடர்கூடம் என்பதை விஜயின் அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது. பரமார்த்த குருவின் சீடர்களில் முதல் சீடராக விஜயே இருக்க முடியும். தமிழுக்கும் சோழ மன்னர்களுக்கும் திமுக அரசு செய்திருக்கிற வரலாற்று உண்மைகளை எல்லாம் தெரியாமல் ஏதோ உளறலைப் போல் அந்த அறிக்கைகள் இருப்பதைப் பார்க்கும்போது பரிதாபம்தான் ஏற்படுகிறது. ராஜராஜ சோழனுக்கு பெரும் போராட்டம் நடத்தி சிலை அமைத்து, தஞ்சை பெரிய கோவிலுக்கு விழா எடுத்து, ஆயிரமாவது ஆண்டை கொண்டாடியதெல்லாம் வரலாறு. எனவே அவர்களுடைய அறிக்கையை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளவேண்டிய தேவையில்லை. இருந்தாலும் இம்மண்ணுக்காக உயிரைக் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிற இயக்கத்தை தவறாகப் பேசும்போது தானாக எழும் உணர்வெழுச்சிக் குரலை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தினால்தான் பதில் சொல்கிறேன்.

நாட்டின் பிரதமாக இருப்பவர் ஒரு மாநிலத்தில் இருக்கும் கோவில் விழாவில் கலந்துகொள்வதை யாரும் தடுக்க முடியாது. அவர் செய்ய வேண்டியதை செய்ய வில்லை என்றால், தவெகவிற்கு தைரியம் இருந்திருந்தால், ‘கீழடியின் வரலாற்றை நீங்கள் கொண்டுவரவில்லையே; நீங்கள் வரக்கூடாது’ என்று போராடுவதற்கோ அல்லது அறிக்கை விடுவதற்கோ இவர்களுக்கு தெம்பு இருந்ததா? வந்து போனதற்குப் பின் எல்லோரும்தான் பேசுவார்கள்.

கபடதாரிகள் என்று குறிப்பிடுவதற்கு என்ன கபடம் இருக்கிறது என்பதை சொல்ல வேண்டுமல்லவா? தமிழர்களுக்காக உழைப்பது திமுக, தமிழர்களுக்கு எதிராக நிற்பது பாஜக. இந்த இரண்டையும் ஒருகோட்டில் கொண்டுவருவது விஜய் ஆடும் கபடமா இல்லையா? கபடநாடகத்தின் கடைசி அத்தியாயம் விஜய் என கடுமையாக எச்சரிக்கிறேன். எனக்குத் தெரிந்து விஜய்க்கு இப்படி ஒரு அறிக்கை வந்திருப்பதே தெரியாதோ என நினைக்கிறேன். அவர் ஆடிக்கொண்டிருக்கும் நாடகம் கபடநாடகம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக புரிந்துகொள்வார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இருப்பைகாட்டிக் கொள்வதற்கான அறிக்கை

இது தொடர்பாகப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கருநாகராஜன், “விஜய் என்ன மனநிலையில் இந்த அறிக்கையில் கையெழுத்துபோட்டார்; இதை எழுதியது யார் என்றும் தெரியவில்லை. எல்லா கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமாக இறங்கிவிட்டது.. விஜயின் தாக்கம் குறைந்துகொண்டே வருகிறது. புள்ளிவிபரங்களில் கூட ஒரு இடங்களில் கூட வெற்றிபெற மாட்டார்கள் எனத் தகவல் வருகிறது.. இந்நிலையில்தான் நானும் இருக்கிறேன் என்பதை உணர்த்த - கபடநாடகத்தோடு இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

பாஜகவும் திமுகவும் நேரெதிர் எதிரிகளாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது விஜய் இரண்டு கட்சிகளையும் ஒரு புள்ளியில் வைத்து அறிக்கை கொடுப்பது கேவலமான செயல். இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனையானது மற்றும் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்திருக்கிறார்.