BODHANA SIVANANDAN | 10 வயது... வுமன் கிராண்ட்மாஸ்டர் நார்ம்... யார் இந்த சுட்டி ஸ்டார்..?
10 வயதே ஆன, போதனா சிவநந்தன் வுமன் கிராண்ட் மாஸ்டருக்கான நார்ம் பெற்றிருக்கிறார். இந்த மாதம் பிரான்சில் நடைபெற்ற Trophee Dole - Pasino Grand Aix தொடரில் 129 புள்ளிகள் பெற்று 2400 ரேட்டிங்கை கடந்திருக்கிறார் போதனா சிவநந்தன். யார் இந்த போதனா சிவநந்தன்..?
10 வயதேயான போதனா சிவநந்தன் இங்கிலாந்து நாட்டுக்காக செஸ் விளையாடி வருகிறார். போதனா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், மற்றுமொரு தமிழர். இங்கிலாந்தின் கரோவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார் போதனா. போதனாவின் தந்தை திருச்சியை பூர்விகமாகக் கொண்டவர். கொரோனா லாக் டவுன் சமயத்தில் 5 வயதான போதனாவுக்கு செஸ்ஸில் ஆர்வம் வந்திருக்கிறது. அப்போது ஹாபியாக செஸ்ஸை விளையாட ஆரம்பித்தவர், சில மாதங்களிலேயே prodigy லெவலுக்கு உயர்ந்துவிட்டார். முதலில் ஆன்லைனில் இருக்கும் இலவச போட்டிகளை விளையாட சொல்லியிருக்கிறார் சிவநந்தன். எல்லாவற்றையும் கண் இமைக்கும் நேரத்தில் போதனா முடித்துவிட, செஸ்ஸில் அதிக நேரம் பயிற்சி செய்ய தொடங்கியிருக்கிறார். போதனாவிற்கு தங்கைகளாக இரட்டையர்கள் இருக்கிறார்கள். ஆனால், குடும்பத்தில் போதனாவிற்கு மட்டுமே செஸ் பிடித்தமான விளையாட்டு.
ஐரோப்பியன் ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை எட்டு வயதில் வென்றார் போதனா. அப்போது பிரதமராக இருந்த ரிஷி சுனக், அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சிறுமியாகவே இருந்தாலும், இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார் போதனா. கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு இங்கிலாந்து அணிக்காகக் களம் கண்டார் போதனா. இங்கிலாந்து வரலாற்றிலேயே இவ்வளவு சின்ன வயதில் பெரிய அளவிலான தொடருக்கு தகுதி பெற்றவர் போதனா தான். செஸ் இல்லை, ஒட்டுமொத்த எல்லா விளையாட்டுக்களை கணக்கில் கொண்டாலும் போதனா தான் இளையவர். ஆனாலும், அதைக் கொண்டாடுவதை விட்டு, ஆன்லைனில் பலர், இந்தியாவுக்குச் செல் என இனவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், அதையும் கடந்து தொடர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிறார் போதனா சிவநந்தன்.
பெண்கள் பிரிவில் உயரிய பட்டம் வுமன் கிராண்ட் மாஸ்டர் தான். ஒருவர் வுமன் கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற, மூன்று WGM நார்ம்களை பெற வேண்டும். அதில் முதல் வெற்றி பெற்றிருக்கிறார் போதனா. போதனா சிவநந்தனை தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் கிராண்ட் மாஸ்டரான சூசன் போல்கர், போதனாவின் இந்த சாதனையை குறித்து சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டிருக்கிறார். போதனாவுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் நடந்தபோதும், அவர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்விகளைக் கண்டு ஒருபோதும் போதனா துவண்டு அழுததே இல்லையாம். அவர் வயதைவிட அதிக மெச்சூரிட்டியுடன் போட்டிகளை கையாள்வதாக போதனா விளையாடுவதைக் கவனித்தவர்கள் சொல்கிறார்கள்.
சீனாவின் ஹோ யீபான் 14 வயதிலும், இந்தியாவின் ஹம்பி 15 வயதிலும் (15 வயது ஒரு மாதம்), ஹங்கேரியின் ஜூடித் போல்கர் 15 வயது 5 மாதத்திலும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இள வயது சாதனையாளர்களில் முன்னிலையில் இருக்கிறார்கள். வுமன் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அடுத்த ஆண்டே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார் ஹம்பி. போதனாவும் அதைப் போல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.