ஆபரேஷன் மகாதேவ் | பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி உட்பட மூவர் பலி!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தாரா அருகே உள்ள லிட்வாஸ் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில், பாதுகாப்புப் படையினர், இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது டாச்சிகம் தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள ஹர்வான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் மகாதேவ்' எனப் பெயரிடப்பட்டது. இதில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த பயங்கரவாதிகளில், பஹல்காம் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட சுலேமான் ஷா என்ற பயங்கரவாதியும் ஒருவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கொல்லப்பட்ட மூவரும் பாகிஸ்தானியர்கள் எனவும், அவர்கள், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது. அங்கு மேற்கொண்டு படைகள் நிறுவப்பட்டிருப்பதாகவும், நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும், அது முடிந்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடப்படும்” எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள், ஸ்ரீநகர் நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டச்சிகாம் பகுதியை நோக்கி, தங்களது தளத்தை மாற்றியிருக்கலாம் என உளவுத்துறை தகவல்கள் கடந்த ஒரு மாதத்திற்கே முன்பே தெரிவித்ததாக பி.டி.ஐ. நிறுவனம் தெரிவித்துள்ளது.